பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாகச் செயல்படுவதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும்

பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாகச் செயல்படுவதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் இந்தியா பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் அந்நாடு கூறியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் பயங்கரவாதம் தொடர்பான ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தால் கடந்த ஆண்டு இந்தியா பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டது. ஜம்மு - காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அதனை உணர முடிந்தது. அதேபோன்று மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் அதிகம் இருக்கக் கூடிய மத்திய மாநிலங்களிலும் பல்வேறு தாக்குதல்கள் அந்த காலக்கட்டத்தில் அரங்கேற்றப்பட்டன.
எல்லைப் பகுதி அளவிலேயே பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று சர்வதேச நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கான முயற்சிகளிலும் அந்நாடு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது என உறுதிபூண்டனர்.
அதன் தொடர்ச்சியாக இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் சந்திப்புகளும், பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளால் இந்தியா மற்றும் அதன் பிராந்தியங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com