பிகார் காப்பக வன்கொடுமை வழக்கு குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்

பிகார் மாநிலம், பாட்னாவில் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிட முழுமையாக தடை
பிகார் காப்பக வன்கொடுமை வழக்கு குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்


பிகார் மாநிலம், பாட்னாவில் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிட முழுமையாக தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
எனினும், பாலியல் வன்கொடுமை, வன்முறை போன்ற நிகழ்வுகளை பதற்றத்துக்குள்ளாக்கும் வகையில் செய்தி வெளியிட வேண்டாம் என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பிகார் தலைநகர் பாட்னாவில், மாநில அரசின் நிதியுதவியுடன், தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த காப்பகத்தில் மொத்தமுள்ள 42 சிறுமிகளில் 34 பேர் வெவ்வேறு காலகட்டங்களில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மருத்துவ ஆய்வில் உறுதியானது.
இதுதொடர்பாக காப்பகத்தின் தலைவர், வார்டன்கள் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பிகார் அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டதால் அவர் பதவியிழந்தார். மஞ்சு வர்மாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கில் பாட்னா உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரையில் விசாரணை தொடர்பான இரண்டு நிலை அறிக்கைகளை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. 
இந்தச் சூழலில், விசாரணை குறித்த தகவல்கள் கசிந்து வருவதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததுடன், ஊடகங்களில் வழக்கு குறித்து செய்திகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.
அந்தத் தடையை எதிர்த்து பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்தபோது, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சிபிஐ-க்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தாக்கல் செய்த நிலை அறிக்கையில், மஞ்சு வர்மாவின் வீட்டில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆயுத பறிமுதல் குறித்து விசாரணை நடத்துமாறு பிகார் மாநில காவல் துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே சமயம், விசாரணை குறித்த அடுத்த நிலை அறிக்கையை 4 வாரத்தில் சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், வழக்கு குறித்து செய்தி வெளியிட உயர் நீதிமன்றம் விதித்த தடை ரத்து செய்யப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com