ம.பி. முதல்வருக்கு எதிரான ஊழல் புகார்: மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

கனரக வாகன கொள்முதலில் ஊழலில் ஈடுபட்டதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹானுக்கு எதிராக அந்த மாநில காங்கிரஸ் தொடுத்த மனுவை உச்ச


கனரக வாகன கொள்முதலில் ஊழலில் ஈடுபட்டதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹானுக்கு எதிராக அந்த மாநில காங்கிரஸ் தொடுத்த மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.
முன்னதாக, மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே. மிஸ்ரா தாக்கல் செய்திருந்த அந்த மேல் முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
கடந்த 2006-ஆம் ஆண்டு சிவராஜ் சிங் செளஹானின் மனைவி கனரக டிரக் வாகனங்கள் நான்கை, தலா ரூ.2 கோடிக்கு வாங்கியுள்ளார். ஆனால், அதே ஆண்டு ஏப்ரலில் அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.2.3 லட்சம் மட்டும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்மூலமாக செளஹானின் மனைவி பெயரில் வாங்கப்பட்ட அந்த 4 டிரக்குகளும், ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தால் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது என்று மனுவில் மிஸ்ரா கூறியிருந்தார்.
அந்த மனு, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு கூறியதாவது:
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க இயலாது. இதனை ஏற்கெனவே விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன. இந்த மனுவை முதலில் விசாரித்த கீழமை நீதிமன்ற மாஜிஸ்திரேட், மக்கள் பணியாளர்களுக்கு (முதல்வர்) எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்க எந்தவொரு தடையும் இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நேரடியாக நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல்கள் நெருங்கி வருகிறது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, நீங்கள் (மிஸ்ரா) தேர்தலில் சென்று போட்டியிடுங்கள் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
முன்னதாக, செளஹானுக்கு எதிராக மிஸ்ரா தாக்கல் செய்திருந்த மனுவை கீழமை நீதிமன்ற நீதிபதி, லோக் ஆயுக்தா விசாரணைக்காக பரிந்துரைத்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மிஸ்ரா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com