மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை: மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் கடிதம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை: மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் கடிதம்


இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் இரு தரப்புக்கும் இடையே நிலவி வரும் முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், எதிர்கால தலைமுறையினருக்கு அமைதியான சூழலை உருவாக்கித் தரவேண்டிய கடமை இரு நாடுகளுக்கும் இருக்கிறது என்று உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு தருணங்களில் இந்தக் கருத்தை இம்ரான் கான் வெளிப்படுத்தி வந்தாலும், தற்போது நேரடியாகவே மோடியிடம் இக்கோரிக்கையை அவர் முன்வைத்திருப்பது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இரு ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய தாக்குதலின் காரணமாக தடைபட்டிருக்கும் அமைதி பேச்சுவார்த்தை, இதன் மூலம் புத்துயிர் பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிரதமர் மோடி பாராட்டினார். இந்த நடவடிக்கை, இரு நாட்டு உறவுக்கு புதியதொரு இணைப்புப் பாலமாக பார்க்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதினார். பாகிஸ்தானுடனான நல்லுறவை ஆக்கப்பூர்வமாகவும், அர்த்தமுள்ள வகையிலும் கட்டமைக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை வேரறுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அதில் மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் மடலுக்கு பதிலளிக்கும் வகையில் இம்ரான் கான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். செப்டம்பர் 14-ஆம் தேதியிட்ட அக்கடிதத்தில் இந்தியாவிடம் பல்வேறு கோரிக்கைகளை இம்ரான் முன்வைத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு பல்வேறு பரிமாணங்களைக் கடந்து வந்துள்ளது. சில நேரங்களில் சிக்கல்களுக்கும், பிரச்னைகளுக்கும் மத்தியிலே அதன் பயணம் இருந்திருக்கிறது. மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் இரு நாட்டு உறவையும் வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்திய - பாகிஸ்தான் அமைதிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு மறுக்க இயலாத ஒன்று.
தற்போது இரு தரப்புக்கும் இடையேயான உறவு பலதரப்பட்ட சவால்களால் சூழப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் நடுவே பல்வேறு முரண்பாடுகள் நிலவி வருகின்றன; இருந்தபோதிலும், மக்களின் நலன் காக்க சில கடமைகளை ஆற்றியே ஆக வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ளது. குறிப்பாக எதிர்கால சந்ததியினருக்காக அதை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் பிரச்னையாகட்டும்; வேறு சில சிக்கல்களாகட்டும், அவை அனைத்தையும் களைய பேச்சுவார்த்தைதான் ஒரே தீர்வு. அதன் வாயிலாக மட்டுமே இரு தரப்புக்கும் ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கக்கூடும்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை நிலைநாட்டுவதற்கான பெருங்கனவை நிஜமாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான முன்னோட்டமாக இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் நடைபெறும் சார்க் அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் அவர்கள் இருவரும் கலந்து கொள்ள உள்ளனர். ஆனால், அதற்கு முன்னதாக நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்திலேயே அவர்கள் சந்தித்து பேச வேண்டும் என விழைகிறேன். இது, இரு நாட்டு நல்லுறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இருக்கும் என்று அந்தக் கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல், இந்தியாவின் பதிலுக்காக தாங்கள் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

சுஷ்மா - குரேஷி சந்திப்பு: பாக். கோரிக்கையை ஏற்றது இந்தியா

பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, நியூயார்க்கில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேச மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த வாரம் நடைபெறும் ஐ.நா. சபைக் கூட்டத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மக்தூம் ஷா மஹ்முத் குரேஷியும் சந்திக்க உள்ளனர். இந்தத் தகவலை சுட்டுரையில் உறுதிபடுத்தியுள்ள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இரு அமைச்சர்களின் சந்திப்புக்கான தேதியும், நேரமும் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com