ஹெச்.ஏ.எல். முன்னாள் தலைவர் பேட்டி எதிரொலி: நிர்மலா சீதாராமன் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் (ஹெச்.ஏ.எல்.) முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜுவின் பேட்டியை சுட்டிக்காட்டி, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மக்களுக்கு
ஹெச்.ஏ.எல். முன்னாள் தலைவர் பேட்டி எதிரொலி: நிர்மலா சீதாராமன் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்


ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் (ஹெச்.ஏ.எல்.) முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜுவின் பேட்டியை சுட்டிக்காட்டி, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மக்களுக்கு தவறான தகவலை அளித்ததற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்கும் திறன், பொதுத் துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்.லுக்கு இல்லை என்பதாலேயே, அந்நிறுவனத்துடன் சேர்ந்து விமானத்தை தயாரிக்க டஸால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனம் முன்வரவில்லை என்றும், இதனாலேயே 126 போர் விமானங்களை தயாரிப்பது தொடர்பாக முதலில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், ஹெச்.ஏ.எல். முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜு அளித்த பேட்டியில், அந்த விமானங்களை தயாரிக்கும் திறன் தங்களது நிறுவனத்துக்கு இருப்பதாக கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மக்களுக்கு தவறான தகவலை அளித்ததற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு (ஹெச்.ஏ.எல்.) ரஃபேல் போர் விமானங்களை கட்டமைக்கும் திறன் இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். ஆனால், ஹெச்.ஏ.எல். நிறுவன முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜு அளித்துள்ள பேட்டியில், ரஃபேல் போர் விமானங்களை கட்டமைக்கும் திறன், தங்களது நிறுவனத்துக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல், ரஃபேல் போர் விமானத்தை கட்டுவிப்பது தொடர்பாக ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கும், டஸால்ட் நிறுவனத்துக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு, அது மத்திய அரசிடம் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், மத்திய அரசோ, ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கும், டஸால்ட் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்படவில்லை என்றும், இதனால்தான் 126 விமானங்களை வாங்குவது தொடர்பாக முதலில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. இப்படியிருக்கையில், ஹெச்.ஏ.எல். முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜுவின் பேட்டியின் மூலம் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.
ராஜுவின் பேட்டியின் மூலம், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாட்டு மக்களை வேண்டுமென்றே ஏன் தவறாக வழிநடத்த முயன்றார் என்ற கேள்வி எழுகிறது. எனவே, பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது பதவியில் ஒரு வினாடி கூட இனிமேல் நீடிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை. உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது. அதேபோல், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து கோப்புகளையும் பொது மக்களின் பார்வைக்கு மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றார் மணீஷ் திவாரி.
ரஃபேல் அமைச்சர்: ராகுல் விமர்சனம்
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் அமைச்சர் என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஊழலை நியாயப்படுத்தி பேசும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள ரஃபேல் அமைச்சர் (பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டார்), தாம் பேசுவது பொய் என்பதை அவரே மீண்டும் நிரூபித்துள்ளார். ஹெச்.ஏ.எல். நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜு, ரஃபேல் விமானத்தை கட்டும் திறன், ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு இல்லை என்ற நிர்மலா சீதாராமனின் கருத்தை பொய் என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார். (பாதுகாப்பு அமைச்சர்) பதவியில் நீடிக்கும் உரிமையை அவர் இழந்து விட்டார். அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com