55,000 போலி நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அமைச்சர் தகவல்

மத்திய அரசு இரண்டாவது கட்டமாக எடுத்த நடவடிக்கை மூலம் 55,000 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிறுவனங்கள்


மத்திய அரசு இரண்டாவது கட்டமாக எடுத்த நடவடிக்கை மூலம் 55,000 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை இணையமைச்சர் பி.பி.செளதரி தெரிவித்தார்.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக போலி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றை முடக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, நிதி நிலை அறிக்கைகள், ஆண்டறிக்கைகளை தாக்கல் செய்யாத நிறுவனங்கள் மீது இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், இந்திய-அமெரிக்க வர்த்தக சம்மேளனங்கள் கூட்டமைப்பின் 4-ஆவது ஆண்டு விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சர் பி.பி.செளதரி கூறியதாவது:
போலி நிறுவனங்களை அடையாளம் கண்டறிந்து முடக்கும் நடவடிக்கையின் முதல்கட்டமாக ஏற்கெனவே 2.26 லட்சம் நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக கணக்குகளை தாக்கல் செய்யாமல் இருந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்போது, இரண்டாவது கட்டமாக 55,000 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கருப்புப் பணப் பரிமாற்றத்துக்கு தொழில் துறையை பயன்படுத்தக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தவிர சட்டவிரோத செயல்களுக்கு நிதி அளிப்பது, போதைப் பொருள் கடத்தல் போன்றவை தொழில் துறை நிறுவனங்களின் பெயரில் நடைபெறுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளைக் கொண்ட மேலும் பல நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நிறுவனங்கள் சட்டத்தை மத்திய அரசு உறுதியாக கடைப்பிடிக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com