துல்லியத் தாக்குதல் தினம் கொண்டாடுமாறு அறிவுறுத்தியதில் அரசியல் இல்லை

துல்லியத் தாக்குதல் தினம் கொண்டாடுமாறு அறிவுறுத்தியதில் அரசியல் இல்லை

வரும் 29-ஆம் தேதியை துல்லியத் தாக்குதல் தினமாக கொண்டாடுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தியதில் அரசியல் எதுவும் இல்லை;


வரும் 29-ஆம் தேதியை துல்லியத் தாக்குதல் தினமாக கொண்டாடுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தியதில் அரசியல் எதுவும் இல்லை; தேசப்பற்றே இருந்தது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தொழித்தது.
அந்த தினத்தை துல்லியத் தாக்குதல் தினமாக கொண்டாடுமாறு பல்கலைக்கழகங்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
இதையடுத்து, துல்லியத் தாக்குதலை மத்திய அரசு அரசியல் ஆக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் இதற்கு விளக்கம் அளித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
துல்லியத் தாக்குதல் தினத்தை கொண்டாடுமாறு கூறியதில் அரசியல் இல்லை. மாறாக தேசப்பற்றே மிகுந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களுக்கு அந்தத் தினத்தை கொண்டாட வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிடவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசுதான் கட்டாய உத்தரவுகளை பிறப்பிக்கும்.
மாணவர்களுக்கு துல்லியத் தாக்குதல் நிகழ்வை எடுத்துரைக்க வேண்டும் என்றார் ஜாவடேகர்.
கடந்த ஆண்டு ஏன் இந்த தினம் கொண்டாடப்படவில்லை என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, நல்ல யோசனைகள் எப்போது வேண்டுமானாலும் செயல்படுத்தப்படலாம்' என்று ஜாவடேகர் பதிலளித்தார்.
காங்கிரஸ் சவால்: இதனிடையே, உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த நவம்பர் 8-ஆம் தேதியை துல்லியத் தாக்குதல் தினமாகக் கொண்டாட மத்திய அரசு தயாரா? என்று காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டர்) வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ராணுவம் நிகழ்த்திய துல்லியத் தாக்குதல் தினத்தை கொண்டாடுமாறு பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. 
இதன்மூலம், பல்கலைக்கழகங்கள் கல்விக்குச் சேவை ஆற்றுவதற்கு பதிலாக பாஜகவின் அரசியலுக்கு சேவை புரிய வைக்கப்படுவதாக எடுத்துக் கொள்ளலாமா? உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்க செய்யப்பட்ட நவம்பர் 8-ஆம் தேதியை துல்லியத் தாக்குதல் தினமாக கொண்டாடுமாறு பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட தயாரா? என்று அந்தப் பதிவில் சவால் விடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com