பாக். ராணுவத்தின் விருப்பப்படியே இம்ரான் கான் செயல்படுவார்

பாக். ராணுவத்தின் விருப்பப்படியே இம்ரான் கான் செயல்படுவார்

பாகிஸ்தான் ராணுவத்தின் விருப்பப்படியே அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகள் இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார்.


பாகிஸ்தான் ராணுவத்தின் விருப்பப்படியே அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகள் இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார்.
நியூயார்க் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நல்ல மனிதர். அவரை நீண்ட காலமாக எனக்குத் தெரியும். எனினும், பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் அவர் ஆட்சி செய்து வருகிறார். ராணுவம் அமைதியை விரும்பினால், அமைதிப் பேச்சுவார்த்தையை அவர் முன்னெடுப்பார்; ராணுவம் மோதல் போக்கை விரும்பினால், அவரும் மோதல் போக்கை தொடருவார். ஒட்டுமொத்தத்தில் ராணுவத்தின் விருப்பப்படியே இம்ரான் கானின் செயல்பாடுகள் இருக்கும்.
கடந்த 70 ஆண்டுகளில், இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் ராணுவமே தீர்மானித்துள்ளது. பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை அந்நாட்டு அரசு மேற்கொள்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் ராணுவ நடவடிக்கை மூலமாக நேரடியாகவோ, பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தி மறைமுகமாகவோ அந்தப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ராணுவம் முட்டுக்கட்டை போட்டு விடுகிறது. உதாரமணமாக, கார்கில் போர், மும்பையில் 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவற்றைக் கூறலாம்.
பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவது பலனளிக்குமா? அல்லது அவர்களால் இயலவில்லையா? அல்லது பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு உடன்பாடு இல்லையா? பாகிஸ்தான் பிரதமராக யார் வந்தாலும், அந்தக் கவலை இருந்து கொண்டே இருக்கும் என்றார் சசி தரூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com