மக்களவைத் தேர்தலில் சந்திரசேகர் ராவ் முக்கிய பங்காற்றுவார்: டிஆர்எஸ்

எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவர் சந்திரசேகர் ராவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்று அக்கட்சி எம்.பி.


எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவர் சந்திரசேகர் ராவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்று அக்கட்சி எம்.பி. வினோத் குமார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே வாரிசு அரசியலை அடிப்படையாகக் கொண்டதுதான் என்றும், டிஆர்எஸ் கட்சி மீது அத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப் பேரவையை கலைக்குமாறு மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவை அண்மையில் பரிந்துரைத்தது. அதை அந்த மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மனும் ஏற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக அங்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிúஸாரம் உள்ளிட்ட மாநில சட்டப் பேரவைகளுக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அவற்றுடன் சேர்த்து தெலங்கானாவுக்கு தேர்தல் நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இதுதொடர்பாக டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. வினோத் குமார் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே சட்டப் பேரவையையோ அல்லது மக்களவையையோ கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலைச் சந்திப்பது இந்திய வரலாற்றில் புதிய நிகழ்வு அல்ல. சொல்லப்போனால், இந்திரா காந்திதான் முதன்முதலாக அதை அறிமுகப்படுத்தியவர். அதன் பின்னர் பாஜகவும் அதை நடைமுறைப்படுத்தியது. தற்போது தெலங்கானா ராஷ்டிர சமிதி அத்தகைய முடிவை எடுக்கும்போது மட்டும் காங்கிரஸும், பாஜகவும் விமர்சனங்களை முன்வைக்கின்றன.
மேலும் டிஆர்எஸ் கட்சியை வாரிசு அரசியலின் கூடாரம் என்றும் கூறுகிறார்கள். நாட்டில் எந்தக் கட்சியில்தான் குடும்ப அரசியல் இல்லை. காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, தேசிய மாநாட்டு கட்சி, பிடிபி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே அந்த வகைப்பாட்டுக்குள் வரக்கூடியவைதான்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் சந்திரசேகர் ராவ் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறார். அதற்காக அவர் தேசிய அரசியல் ஈடுபடப் போகிறார் என அர்த்தமில்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com