ரஃபேல்: இந்தியாவின் பரிந்துரை ரிலையன்ஸ்- பிரான்ஸ் முன்னாள் அதிபர்

ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டாளியாக இருக்க வேண்டும் என இந்திய அரசு பரிந்துரைத்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த்
பிராங்சுவா ஹொலாந்த்
பிராங்சுவா ஹொலாந்த்


ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டாளியாக இருக்க வேண்டும் என இந்திய அரசு பரிந்துரைத்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் தெரிவித்துள்ளார்.
36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. எனினும், விமானங்களின் உதிரி பாகங்களை இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்றும், இதற்கான கூட்டாளியை டஸால்ட் நிறுவனமே தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ரஃபேல் போர் விமான தயாரிப்பில், பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துக்கு பதிலாக தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் டிஃபன்ஸ்' பலனடைய வேண்டும் என்ற நோக்கில் அந்நிறுவனத்தை டஸால்ட் நிறுவனத்துடன் கூட்டாளி ஆக்கியது பிரதமர் மோடிதான் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்தின் கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாளிதழ்களில் பிராங்சுவா ஹொலாந்த் கூறியதாக வெளியான செய்தியில், ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தத் தகவலை நாங்கள் சொல்லவில்லை. அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தை போர் விமான உதிரி பாகங்களை தயாரிக்க டஸால்ட் நிறுவனத்துடன் கூட்டாளியாக்குமாறு இந்திய அரசு பரிந்துரைத்தது. எங்களுக்கு வேறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எங்களுக்கு அளிக்கப்பட்ட நிறுவனத்தைதானே நாங்கள் தேர்வு செய்ய முடியும். எனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தை விமான தயாரிப்பில் பங்கேற்க செய்தோம்' என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பிராங்சுவா ஹொலாந்தின் கருத்து மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
மத்திய அரசு விளக்கம்: இதனிடையே, பிரான்ஸ் முன்னாள் அதிபரின் கருத்தை தாங்கி வந்துள்ள ஊடக செய்தி மத்திய அரசின் ஒப்பந்த நிலைப்பாட்டுக்கு மாறுபட்டு இருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதுதொடர்பாக அந்த அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மேலும் கூறியதாவது:
ரஃபேல் போர் விமான தயாரிப்பில் குறிப்பிட்ட ஒரு இந்திய நிறுவனத்தை டஸால்ட் நிறுவனத்துடன் கூட்டாளியாக சேர்த்துக் கொள்ளுமாறு மத்திய அரசு வற்புறுத்தவில்லை. இந்த விவகாரத்தில் பிரான்ஸ் அரசும் எந்த நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறவில்லை. இதுதொடர்பாக வெளியான ஊடகச் செய்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
முன்னதாக, 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு பிரான்ஸுடன் ரூ.58,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக கடந்த 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் 10-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்


ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறிய கருத்து பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக ஒப்பந்தத்தை திருத்தி அமைத்ததை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஆதாயம் தேடித் தர பிரதமர் மோடி உதவியது ஹொலாந்தின் பதில் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு உண்மையை கூறிய ஹொலாந்துக்கு நன்றி. பிரதமர் மோடி இந்தியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். ராணுவ வீரர்கள் தேசத்துக்காக சிந்தும் ரத்தத்துக்கும் அவர் 
அவமரியாதை செய்துவிட்டார் என்றார் ராகுல்.
அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ரஃபேல் போர் விமானம் தயாரிப்பதற்கு ரூ.590 கோடி மதிப்பிடப்பட்டிருந்தது. அந்தத் தொகை 2015-ஆம் ஆண்டில் எவ்வாறு ரூ.1,690 கோடி ஆக அதிகரித்தது என்றும் ஹொலாந்த் விளக்க வேண்டும். இடைப்பட்ட ஆண்டுகளில் ரூ.1,100 கோடி அதிகரித்தது எப்படி?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ப.சிதம்பரம் கருத்து
ரஃபேல் ஒப்பந்தத்தால் இதுவரை நமக்கு ஒரு போர் விமானம் கூட கிடைக்கவில்லை. ஆனால், மத்திய அரசிடம் இருந்து பொய்கள் மட்டும் கிடைத்து வருகின்றன' என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார். ஹொலாந்தின் விளக்கத்தை மறைப்பதற்கு புதிதாக என்ன பொய்யை மத்திய அரசு சொல்லப் போகிறது' என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கேஜரிவால் விமர்சனம்
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், மத்திய அரசும் இதுவரை தெரிவித்து வந்த கருத்துகளுக்கு நேர் மாறாக பிரான்ஸ் முன்னாள் அதிபரின் கருத்து அமைந்துள்ளது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமர்சித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் சில உண்மைகளை மத்திய அரசு மறைத்து வருவதன் மூலம், தேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது' என்றார்.
ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு பொய்யுரைத்து வருகிறது; மக்களை திசைதிருப்பி வருகிறது' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறிய செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது மிகத் தீவிரமாக கையாளப்பட வேண்டிய ஒன்று என்று பாஜக எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com