ரஷியாவிடம் போர் விமானம் கொள்முதல்: இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பு

ரஷியாவிடமிருந்து எஸ்-400 டிரையம்ஃப்' ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவுள்ள இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பு


ரஷியாவிடமிருந்து எஸ்-400 டிரையம்ஃப்' ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவுள்ள இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் சீன பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ரஷியாவிடம் இருந்து சுகோய் ரக போர் விமானங்களையும், எஸ்-400 ரக ஏவுகணைகளையும் கொள்முதல் செய்த விவகாரத்தில், எதிரி நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இது, ரஷியாவிடமிருந்து எஸ்-400 டிரையம்ஃப்' ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவுள்ள இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
அமெரிக்காவின் எதிரி நாடுகள் மீது ஏற்கெனவே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பில் ஈடுபடும் நாடுகளின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று, எதிரி நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 
இது அந்த நாடுகளின் ராணுவ பலத்தைக் குறைப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கை அல்ல. மாறாக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக பல்வேறு அவதூறான செயல்களில் ஈடுபட்டு வரும் ரஷியாவுக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கையாகும். அந்தச் சட்டத்தின் கீழ், சீன நிறுவனத்துக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இது ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்ய விரும்பும் மற்ற நாடுகளுக்கும் ஒரு பாடமாக இருக்கும். பல்வேறு நாடுகள் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். அது குறித்து இறுதியான முடிவேதும் எடுக்கப்படவில்லை. ஆனால், இந்த விவகாரம் குறித்த தீவிரத்தன்மையைப் புரிந்து கொண்டு, ரஷியாவிடம் கொள்முதல் செய்யும் நாடுகள், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆனால், அண்மையில் அமெரிக்க-இந்திய நாடுகளின் அமைச்சர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், இந்தப் பொருளாதாரத் தடை முற்றிலும் ரஷியாவுக்கானது. 
இந்தியா போன்ற நட்பு நாடுகளை இந்தப் பொருளாதாரத் தடை பாதிக்காத வகையில் அமெரிக்காவின் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com