மாலத்தீவு அதிபர் தேர்தல்: வெற்றி பெற்ற இப்ராகிம் முகமதுக்கு இந்தியா வாழ்த்து 

மாலத்தீவு அதிபர் தேர்தல்: வெற்றி பெற்ற இப்ராகிம் முகமதுக்கு இந்தியா வாழ்த்து 

மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமதுக்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. 

மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமதுக்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. 

மாலத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அதிபர் யாமீன் அப்துல் கயூம், மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வரும் முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால், பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது(54) போடியிட்டார்.   

இதில், 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது, தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூமை வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதனை மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியது. 

எனினும், தேர்தல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் முகமதுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில், 

"மாலத்தீவில் வெற்றிகரமாக நடைபெற்ற 3-ஆவது அதிபர் தேர்தல் நடைமுறையை நாங்கள் வரவேற்கிறோம். முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளார். அவருடைய வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். இந்தத் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். 

மாலத்தீவில், ஜனநாயக வெற்றியை மட்டும் இந்த தேர்தல் முடிவுகள் குறிப்பிடவில்லை. சட்டத்தின் ஆட்சி நடக்கக் கூடிய ஒரு இடத்தில் ஜனநாயகத்திற்கான மதிப்பை பிரதிபலிப்பதாகவும் இது உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக, இந்த தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அதிபர் யாமீன் அங்கு 45 நாட்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தியிருந்தார். இதனை இந்தியா கடுமையாக கண்டித்திருந்தது. 

இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத்தீவில் சமீப காலமாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள சூழலில், அமெரிக்காவும், இந்தியாவும் இந்த தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக கவனித்தது. இதற்கிடையில், முன்னாள் அதிபர் யாமீன் சீனாவுக்கு நெருக்கமானவர் என்கிற செய்தியும் உள்ளது. அதனால், இந்த தேர்தல் வெற்றியை இந்தியா மிக முக்கியமானதாக கருதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com