சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்: இன்று திறந்து வைக்கிறார் மோடி

பிரதமர் மோடி இரு நாள் பயணமாக சிக்கிம் மாநிலத்துக்குச் சென்றுள்ளார். அந்த மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை அவர் திங்கள்கிழமை திறந்து வைக்கிறார்.
சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்: இன்று திறந்து வைக்கிறார் மோடி

பிரதமர் மோடி இரு நாள் பயணமாக சிக்கிம் மாநிலத்துக்குச் சென்றுள்ளார். அந்த மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை அவர் திங்கள்கிழமை திறந்து வைக்கிறார்.
 ஞாயிற்றுக்கிழமை மாலை எம்ஐ-8 ஹெலிகாப்டர் மூலம், சிக்கிம் சென்ற மோடி, ராணுவ ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கினார். அங்கு, மாநில ஆளுநர் கங்கா பிரசாத், முதல்வர் பவண் சாம்லிங் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். ராணுவ வீரர்கள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
 பின்னர் அங்கிருந்து, 5 கி.மீ. தொலைவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மோடி காரில் சென்றார். சாலையின் இரு புறமும் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று அவரை வரவேற்றனர். அப்போது மழை பெய்த போதிலும், ஏராளமான மக்கள் மோடியைக் காண ஆர்வத்துடன் திரண்டு நின்றனர். அவர்களது வரவேற்பை மோடி புன்னகையுடன் கையசைத்து ஏற்றுக் கொண்டார்.
 தொடர்ந்து ஆளுநர் மாளிகையில், அந்த மாநில பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசினார்.
 சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 33 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள அந்த மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை மோடி, திங்கள்கிழமை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, செயிண்ட் சேவியர் பள்ளி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
 இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள மோடி, "சிக்கிம் மாநில மக்களின் நீண்ட நாள் கனவான விமான நிலையம் அந்த மாநிலத்தில் செயல்பட இருக்கிறது. இதன் மூலம் அந்த மாநில மக்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு எளிதில் சென்றுவர முடியும்' என்று கூறியுள்ளார்.
 கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில், 201 ஏக்கர் பரப்பளவில் ரூ.605 கோடி செலவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்திய-சீன எல்லையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் இந்த விமான நிலையம் உள்ளதால், அவசர காலத்தில் ராணுவ ரீதியிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். போர் விமானங்களை கையாளும் வகையிலும் இந்த விமான நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com