மனோகர் பாரிக்கரை கண்டு மோடி, அமித் ஷாவுக்கு அச்சம்: கோவா காங்கிரஸ்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு, ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விவரங்கள் தெரியும் என்பதால், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடியும்,

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு, ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விவரங்கள் தெரியும் என்பதால், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் அச்சப்படுவதாக அந்த மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
 கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பதால், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் மேலும் 2 அமைச்சர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியிலிருந்து பாரிக்கரை நீக்கிவிட்டு, வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கோவா ஆளுநரை சந்தித்து, அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சியமைக்க உரிமையும் கோரினர். இருப்பினும், கோவா முதல்வர் பதவியில் பாரிக்கர் நீடிப்பார் என்று பாஜக மேலிடம் திட்டவட்டமாக அறிவித்தது.
 இந்நிலையில், பனாஜியில் காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில தலைவர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் பேசியபோது, பாரிக்கரை கண்டு, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அச்சப்படுவதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
 ரஃபேல் ஒப்பந்த விவரங்கள், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரான மனோகர் பாரிக்கருக்கு தெரியும். இதனால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றுவது தொடர்பான முடிவை எடுத்தால், அந்த விவரங்களை வெளியிடுவேன் என்று பாரிக்கர் மிரட்டலாம் என்று மோடியும், அமித் ஷாவும் அச்சப்படுகின்றனர். முதல்வர் பதவியில் இருந்து பாரிக்கரை ராஜிநாமா செய்யும்படி கூறுவதற்கு மோடிக்கும், அமித் ஷாவுக்கும் தைரியம் கிடையாது. இதற்கு ரஃபேல் ஒப்பந்தமே காரணமாகும்.
 ரஃபேல் ஒப்பந்த விவகாரம் மிகப்பெரிய ஊழல் ஆகும். இதில் பிரதமர் மோடிக்கும் தொடர்புண்டு. பாரிக்கர் விரைவில் குணமடைய காங்கிரஸ் பிரார்த்திக்கிறது. அதேநேரத்தில், 7 மாதமாக அவர் சிகிச்சையில் இருப்பதால், கோவாவில் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2 அமைச்சர்களும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால், தீவிர சிகிச்சை பிரிவில் கோவாவை சேர்க்க வேண்டியிருக்கும் என்றார் சோடங்கர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com