விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்: பிரான்ஸை தொடர்ந்து ரஷியாவுடனும் இந்தியா விரைவில் ஒப்பந்தம்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் "ககன்யான் திட்டம்' தொடர்பாக பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து, ரஷியாவுடனும் இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் "ககன்யான் திட்டம்' தொடர்பாக பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து, ரஷியாவுடனும் இந்தியா விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 இந்தியாவுக்கு விண்வெளி ஆராய்ச்சி துறையில், பிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளும் ஆரம்பம் முதலே பல்வேறு ஒத்துழைப்பை அளித்து வருகின்றன. இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா, முன்னாள் சோவியத் யூனியன் (தற்போது ரஷியா) விண்கலத்தில் கடந்த 1984ஆம் ஆண்டு விண்வெளிக்கு சென்று வந்தார். இதேபோல், ரஷியாவின் ராஸ்காஸ்மாஸ் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கும், இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் செயற்கைக் கோள் ஏவுதல், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடர்பான முக்கிய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்டவை தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கடந்த 2007ஆம் ஆண்டிலும், இந்தியா-ரஷியா இடையே விண்வெளியை அமைதி திட்டத்துக்கு பயன்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
 ரஷியாவின் சோயூஸ் விண்கலம் மூலம்தான் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யாபாட்டா முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் 40 ஆவது ஆண்டு தினத்தை இரு நாடுகளும் கொண்டாடியுள்ளன.
 இந்நிலையில், சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் "ககன்யான் திட்டம்' குறித்து அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, வரும் 2022ஆம் ஆண்டுக்குள் 3 இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக, பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான நிபுணத்துவத்தை இந்தியாவுடன் பிரான்ஸ் பகிர்ந்து கொள்ளும்.
 இந்நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இந்தியாவுக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணமாக வருகை தரவுள்ளார். அவரது இந்த பயணத்தின்போது, இந்தியா-ரஷியா இடையே பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. அதில் ககன்யான் திட்டம் தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com