எம்.பி.க்கள் வழக்குரைஞர்களாக பணியாற்றத் தடைகோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி 

எம்.பி.க்கள் வழக்குரைஞர்களாக பணியாற்றத் தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  
எம்.பி.க்கள் வழக்குரைஞர்களாக பணியாற்றத் தடைகோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி 

புது தில்லி: எம்.பி.க்கள் வழக்குரைஞர்களாக பணியாற்றத் தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  
  
உச்ச நீதிமன்றத்தில் தில்லியைச் சேர்ந்த பாஜக மூத்த நிர்வாகியும், மூத்த வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய என்பவர் பொதுநல மனு தொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர், "எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் (சட்டமேலவை உறுப்பினர்கள்) ஆகியோர் தங்களது பணி காலத்தில், நீதிமன்றங்களில் வழக்குரைஞர்களாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அஸ்வினி உபாத்யாய சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சேகர் நாபாதே, "மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு கஜானாவில் இருந்து சம்பளம் அளிக்கப்படுகிறது; இவ்வாறு பிற தொழில் மூலம் ஊதியம் பெறுவோர், நீதிமன்றங்களில் வழக்குரைஞர்களாக பணியாற்றுவதற்கு பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. இருப்பினும், ஏராளமான மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்குரைஞர்களாக பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14ஆவது விதிக்கு எதிரானது' என்று வாதிட்டார்.

அப்போது மத்திய அரசு தரப்பில், எம்.பிக்களும், எம்எல்ஏக்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆவர். அரசு ஊழியர் கிடையாது. ஆதலால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது.

இந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட் ஆகியோரை கொண்ட அமர்வு கடந்த ஜூலை மாதம் 9ஆம் தேதி கடைசியாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் எம்.பி.க்கள் வழக்குரைஞர்களாக பணியாற்றத் தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com