ஹிமாசலில் மழை-வெள்ளம்

ஹிமாசலப் பிரதேசத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, மண் அரிப்புகள் ஏற்பட்டுள்ளன
குலு மாவட்டத்தில் திங்கள்கிழமை பியாஸ் நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். 
குலு மாவட்டத்தில் திங்கள்கிழமை பியாஸ் நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். 


ஹிமாசலப் பிரதேசத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, மண் அரிப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்குள்ள சுற்றுலா தலங்களான குலு, மணாலி ஆகியவை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து மணாலிக்கு சுற்றுலா சென்ற 62 பேர் சிக்கி தவித்து வருகின்றனர். 
ஹிமாசலப் பிரதேசத்தில் காங்ரா, குலு, சம்பா, மண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. பியாஸ் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த நதியையொட்டியிருந்த வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
காங்ரா, குலு ஆகிய இரு மாவட்டங்களும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குலு மாவட்டத்தின் டோபி பகுதியில் சிக்கித் தவித்த 21 பேர், விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். சம்பா மாவட்டத்தில் ராவி நதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. இதையடுத்து, கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கனமழை மட்டுமன்றி பனிப்பொழிவும் காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
5 பேர் பலி: குலு, காங்ரா, சம்பா ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்பான வெவ்வேறு சம்பவங்களில் சிறுமி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பல பகுதிகளிலிருந்து தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறாததால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவால் 120-க்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்துள்ளதாக, ஹமிர்பூர் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் தெரிவித்தார். 
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹிமாசலில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 
மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் போதிலும், சேதங்களின் அளவு அதிகம் இருப்பதால் மத்திய அரசும் உதவ வேண்டும் என்றார். 
வடமாநிலங்களில்...: பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
உத்தரகண்டில் நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி ஆகிய கோயில்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், பக்தர்களின் யாத்திரை பாதிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவின் அம்பாலாவில் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து 45 வயது பெண் உயிரிழந்தார். ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் தில்லியிலும் திங்கள்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 
பஞ்சாபில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தில் 5 பேர் உயிரிழப்பு: ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு பகுதியில் கடந்த இரு நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தோடா மாவட்டத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு மண்ணுக்குள் புதைந்தது. இச்சம்பவத்தில் அந்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 பேர் சிறார்கள் ஆவர்.
கதுவா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பெண்கள், குழந்தைகள் உள்பட 29 பேர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டனர். ராம்பன், உதாம்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அந்த சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
எச்சரிக்கை: இதனிடையே, அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

62 தமிழர்கள் சிக்கித் தவிப்பு
ஒசூரிலிருந்து குலு, மணாலிக்கு சுற்றுலா சென்ற 21 பேர், திருச்சியைச் சேர்ந்த 41 பேர் என மொத்தம் 62 பேர் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர். 
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட ஒசூரிலிருந்து 14 பெண்கள், 
6 குழந்தைகள் உள்பட மொத்தம் 21 பேர், வட மாநிலங்களுக்கு கடந்த 21-இல் சுற்றுலா சென்றனர். 
ஹிமாசல பிரதேசத்துக்குள்பட்ட குலு, மணாலிக்கு செப். 22-இல் சென்ற இவர்கள், திங்கள்கிழமை (செப்.24) சொந்த ஊர் திரும்ப இருந்தனர். மணாலியில் தொடர்ந்து மழை பெய்து மண் அரிப்பு, நிலச் சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 
செல்லிடப்பேசியில் அவர்கள் கூறியது: உணவகத்தில் போதிய உணவு கிடைக்கவில்லை. கிடைக்கும் உணவின் விலையும் மிகவும் அதிகம். தொடர் மழையால் சிக்கியுள்ள எங்களை மீட்க கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம் கேட்டபோது, அவர் கூறியது: ஒசூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும், திருச்சி மாணவர்களையும் மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுவருகிறது என்றார்.
திருச்சியிலிருந்து... திருச்சி பள்ளியொன்றிலிருந்து 31 மாணவர்கள், 10 ஆசிரியர்கள் என 41 பேர், தில்லி வழியாக ஹிமாசலப் பிரதேச மாநிலம் குலு, மணாலிக்கு செப்.21ஆம் தேதி சென்றனர். தொடர் மழையால் மண் அரிப்பு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. 
அவர்கள் 27-இல் ஊர் திரும்பத் திட்டமிட்டிருந்தனர். தங்குமிடத்திலும் உணவுக்குப் பிரச்னையில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக செல்லிடப்பேசியில் திருச்சிக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com