நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்ட ஆதார்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ள காங்கிரஸ் 

நிதி மசோதாவாக ஆதார் ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.   
நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்ட ஆதார்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ள காங்கிரஸ் 

புது தில்லி: நிதி மசோதாவாக ஆதார் ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.   

ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டம், ஆதார் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 31 மனுக்கள் தொடுக்கப்பட்டன. 

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், அசோக் பூஷண் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. 

இந்த விசாரணை கடந்த மே மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் புதனன்று  தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியுள்ளது.

அத்துடன் தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயமாக்கக் கூடாது, நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நிதி மசோதாவாக ஆதார் ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.   

தீர்ப்பு வெளியான பிறகு தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது அவர் கூறியதாவது:

இன்று வெளியாகியுள்ள தீர்ப்பில் தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் என்று கூறியதுடன், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை உச்ச நீதிமன்றம்  நீக்கியுள்ளதை வரவேற்கிறேன். 

அத்துடன் தீர்ப்பில் நிதி மசோதாவாக ஆதார் ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது அரசியலமைப்பு சட்டத்தில் நிகழ்ந்த ஒரு மோசடி என்று நீதிபதி டி.ஒய். சந்திராசூட் கூறியுள்ள கருத்தோடு ஒத்துப்போகிறோம். 

ஆதார் கண்டிப்பாக நிதி மசோதா ஆகாது என்பதால் உச்ச நீதிமன்றத்தில் ஏழு பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யவுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com