துணிச்சலாக முன்வந்து  உண்மையை பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ராபர்ட் வத்ரா சவால் 

ரஃபேல் விவகாரத்தில் துணிச்சலாக முன்வந்து  உண்மையை பேசுங்கள் என்று பிரதமர் மோடிக்கு, சோனியிலா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா சவால் விடுத்துள்ளார். 
துணிச்சலாக முன்வந்து  உண்மையை பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ராபர்ட் வத்ரா சவால் 

புது தில்லி: ரஃபேல் விவகாரத்தில் துணிச்சலாக முன்வந்து உண்மையை பேசுங்கள் என்று பிரதமர் மோடிக்கு, சோனியிலா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா சவால் விடுத்துள்ளார். 

இந்திய விமானப் படைக்கு பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. ரூ.58,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், அந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது. இதனிடையே, ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக்குவதற்கு இந்திய அரசுதான் பரிந்துரைத்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் தெரிவித்த கருத்துகள், இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது. 

இந்நிலையில் பாஜக அரசின் மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் சோனியா காந்தியின் குடும்பத்தாருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவின் நண்பர் நிறுவனத்துக்கு ரஃபேல் விமான உதிரிப்பாகங்கள் தயாரிப்பு ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் காங்கிரஸ் பேசுகிறது என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்த விவகாரத்தில்  ராபர்ட் வத்ரா பெயரையும் இணைத்துப் பேசத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் ரஃபேல் விவகாரத்தில் துணிச்சலாக முன்வந்து  உண்மையை பேசுங்கள் என்று பிரதமர் மோடிக்கு, ராபர்ட் வத்ரா சவால் விடுத்துள்ளார். 

கடந்த சில நாட்களாக மவுனம் காத்து வந்த ராபர்ட் வத்ரா தனது பேஸ்புக் பக்கத்தில் பாஜகவினர் தன்மீது கடந்த 4 ஆண்டுகளாக வேண்டுமென்றே செய்துவரும் விஷமப்பிரச்சாரம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தன்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்? கடந்த 4 ஆண்டுகளாகவே பாஜகவினர் என்னைக் குறிவைத்து செய்யும் செயல்கள் வியப்பாக இருக்கிறது. எந்தவிதமான அடிப்படை ஆதாரங்கள் இன்றி வெறுமனே அரசியல் நோக்கத்துக்காக என்னை வேட்டையாடப் பார்க்கிறார்கள்.

இப்போது அவர்கள் செய்துள்ள கேலிக்கூத்துக்கும் (ரஃபேல் ஒப்பந்தம்) மோசமான நிர்வாகத்துக்கும் நானே காரணம் என்ற ரீதியில் என்னைத் தேவையின்றி இழுக்கிறார்கள்.

56 அங்குல மார்பு வைத்துள்ளவர் பொய்மூட்டைகளுக்கு பின்னால் மறைந்து நிற்பதைக் காட்டிலும், துணிச்சலாக வந்து ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம். மக்கள் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கேட்டு மிகவும் வெறுப்புடன் இருக்கிறார்கள்.

இவ்வாறு ராபர்ட் வத்ரா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com