முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகளை நேரலை செய்ய அனுமதி: உச்ச நீதிமன்றம்

நீதிமன்றங்களில் நடைபெறும் முக்கிய வழக்குகளை நேரலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகளை நேரலை செய்ய அனுமதி: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: நீதிமன்றங்களில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பில், நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்வது தொடர்பாக போதிய விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திரா தேசிங் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப சில கட்டுப்பாடுகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதாவது, அனைத்து நீதிமன்றங்களிலும், அனைத்து விசாரணைகளையும் நேரலையாக ஒளிபரப்புவது போல் அல்லாமல், மிக முக்கியமான வழக்குகளின் விசாரணைகளை மட்டும் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பலாம் என்றும், தலைமை நீதிபதி அமர்வில் இருந்து நேரலையைத் தொடங்கலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது இரு தரப்பிலும் முன் வைக்கப்பட்ட சில முக்கிய வாதங்களைப் பார்க்கலாம்...

மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரலை செய்வதை சோதனை முயற்சியில் தொடங்கலாம் என்று பரிந்துரை செய்தார்.

இந்த சோதனை முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், பிற அமர்வு நீதிபதிகள் விசாரிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளையும் நேரலை செய்யலாம் என்று அவர் கூறினார்.

அப்போது வழக்குரைஞர் ஒருவர் குறுக்கிட்டு வாதிடுகையில், விசாரணை நடவடிக்கைகளை நேரலை செய்யும் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நீதி நிர்வாகத்தில் பிறர் தலையிடுவதற்கும், போலியான செய்திகளை பரப்புவதற்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.

எனினும், வழக்கு விசாரணைகளை நேரலை செய்யும் திட்டத்தால் நீதிமன்றத்தில் கூட்டத்தை குறைக்க உதவியாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன், இதே வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற விசாரணையை நேரலை செய்வது தற்போதைய காலத்தின் தேவை என்று நீதிபதிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னணி: உச்ச நீதிமன்ற அமர்வுகளில் நேரலை செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சட்டப்படிப்பு மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஸ்வப்னில் திரிபாதி என்ற அந்த மாணவர், ஜோத்பூரில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

இதேபோன்று, மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் தொடுத்த பொதுநல வழக்கு ஒன்றில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகளை விடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

விசாரணை நடவடிக்கைகளை விடியோவாகப் பதிவு செய்து, பொதுமக்களுக்கும், வழக்குதாரர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றும் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த அனைத்து மனுக்களையும் ஒரே வழக்காக விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், முக்கிய வழக்குகளை நேரலை செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com