நிறுவனங்கள் தகவல்களை தவறாகக் கையாளுவதை ஆதார் சட்டம் தடுக்கிறது: மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் 

நிறுவனங்கள் சேகரித்துள்ள தகவல்களை தவறாகக் கையாளுவதை ஆதார் சட்டம் தடுக்கிறது என்று ஆதார் தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 
நிறுவனங்கள் தகவல்களை தவறாகக் கையாளுவதை ஆதார் சட்டம் தடுக்கிறது: மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் 

புது தில்லி: நிறுவனங்கள் சேகரித்துள்ள தகவல்களை தவறாகக் கையாளுவதை ஆதார் சட்டம் தடுக்கிறது என்று ஆதார் தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டம், ஆதார் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 31 மனுக்கள் தொடுக்கப்பட்டன. 

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், அசோக் பூஷண் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. 

இந்த விசாரணை கடந்த மே மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் புதனன்று  தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியுள்ளது.

அத்துடன் தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயமாக்கக் கூடாது, நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நிறுவனங்கள் சேகரித்துள்ள தகவல்களை தவறாகக் கையாளுவதை ஆதார் சட்டம் தடுக்கிறது என்று ஆதார் தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது:

தனியார் நிறுவனங்கள் ஆதாரைப் பயன்படுத்தி செய்யும் எந்த ஒரு அங்கீகாரச் செயல்பாடும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக செய்யப்படுகிறது. அந்த தகவல் சேகரத்தின் புனிதத்  தனமையை அவர்கள் பராமரிக்க வேண்டும். அதில் செய்யும் எந்த ஒரு தவறும் மூன்று வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்க வழி செய்யும் குற்றங்களாகும்,  

காங்கிரஸ் கொண்டு வந்த ஆதார் என்பது பயனற்ற ஒன்றாகும். அதன் மூலம் வெறுமனே 6.7 கோடி வாங்கிக் கணக்குகளுடன் மட்டுமே ஆதாரை இணைக்க முடிந்தது. ஆனால் நாங்கள் அதனை 97 கோடியாக மாற்றியுள்ளோம். இதன் காரணமாக அரசின் திட்டங்களின் பலன்கள் யாவும் பொதுமக்களை நேரடியாக சென்றடைகிறது.  

தனியார் நிறுவனங்களிடம் பதிவு செய்துள்ள ஆதார் விபரங்களை அவர்கள் பதிவில் இருந்து நீக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைக்க இயலுமா என்பது குறித்த கேள்விக்கு, நீதிமன்றத் தீர்ப்பினை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் அது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com