ஒடிஸாவில் ஆட்சியமைக்க நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் அழைப்பு

ஒடிஸாவில் ஆட்சியமைக்கும்படி பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் கணேஷி லால் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒடிஸாவில் ஆட்சியமைக்க நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் அழைப்பு

ஒடிஸாவில் ஆட்சியமைக்கும்படி பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் கணேஷி லால் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒடிஸா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில், பட்குரா தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து எஞ்சிய 146 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் 112 தொகுதிகளில் வெற்றி பெற்று பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதேபோல், ஒடிஸாவில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 12இல் பிஜு ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றது.
இந்நிலையில், புவனேசுவரத்தில் உள்ள பிஜு ஜனதா தளம் கட்சி தலைமையகத்தில் அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டம் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் முதல்வர் பதவிக்கு நவீன் பட்நாயக்கை எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நவீன் பட்நாயக் கூறியதாவது:
சட்டப்பேரவைக்கான பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக என்னை மீண்டும் தேர்வு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக தீவிரமாக பணியாற்றுவோம். விரைவில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவோம் என்றார். இதன்பின்னர் ஆளுநர் கணேஷி லாலை நவீன் பட்நாயக் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். 
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் ஆட்சியமைக்க நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் கணேஷி லால் அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், "பிஜு ஜனதா தளம் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து, புதிய அரசு அமைக்க வரும்படி நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புவனேசுவரத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் புதிய அரசு பதவியேற்கும் விழா வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் மாநில முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்கவுள்ளார். அவருக்கு  பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் ஆளுநர் கணேஷி லால் செய்து வைக்கவுள்ளார். ஒடிஸா முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்பது இது 5ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com