மனிதனுக்குள் ஒரு மழைக்காடு!

நம் வாயில் இருந்து சீரண மண்டலத்தின் முடிவான ஆசனவாய் வரை பல லட்சம் கோடி நுண்ணுயிரிகள் பட்டறை போட்டிருக்கின்றன.

B.Lactis
℅ bifidobacterium family
மூன்றாவது வளைவு, இரண்டாவது மடிப்பு
பெருங்குடல் காலனி
ஜீரண மண்டலம்

முழிக்காதீர்கள். இந்த முகவரியில் நிச்சயம் இந்த பாக்டீரியா இருக்கும். மிகச்சரியாக, தட்டில் உணவு விழும் நேரத்தில் டி.வி.யில் வரும் ஹார்பிக், டெட்டால் விளம்பரங்களில், பாக்டீரியா என்றாலே கோரமாக, பயமுறுத்தும் குரலோடு ஏதோ நமக்கு நோய் கொடுப்பதையே குலதர்மமாகக் கொண்டிருக்கும் உயிரிகள் என்று காட்டுகிறார்கள். இந்த கெமிக்கல்களை ஊற்றியதும் அப்படியே அழிந்துபோய், வெண்ணிறத்தில் டாலடிப்பதைக் காட்டி ஒருவிதமான கருத்துருவாக்கம் செய்துவிட்டார்கள். சுத்தாமாக இருப்பதைப் பற்றிய, சுத்தத்தை அடிக்கடி உறுதி செய்துகொள்வதை வழக்கமாக்கிவிட்டார்கள். இன்றைய நுகர்பொருள் சந்தையின் குறிப்பிடத்தக்க சதவிகிதத்தை இந்தக் கிருமி நாசினி வகையறா கையில் வைத்திருக்கிறது.

வரலாற்றின் மிகக்கொடிய கொள்ளை நோய்களுக்கும், போரில் ஏற்பட்ட புண்களில் தொற்று ஏற்பட்டு, சீழ்வைத்து, புரையோடி, அநேகம் பேர் உயிரையும் உறுப்புகளையும் காவு வாங்கியது நுண்ணுயிரிகள்தான். காலரா, டைஃபாய்ட், பெருவியாதி என்று அழைக்கப்பட்ட தொழுநோய், என்புறுக்கி நோய் (டி.பி) - இவையெல்லாம் நுண்ணுயிரிகளால் வருபவைதான். (பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்).

ஆனால், ரவுடி ஹீரோவை வெறுக்கும் ஹீரோயினுக்கு, ஹீரோவின் நண்பன் “அவன் அடிதடி பண்றது மட்டும்தான் உனக்கு தெரியுது. அவன் எவ்வளவு நல்லவன் தெரியுமா?” என்று சீன் வைக்கிறாற்போல், இந்த நுண்ணுயிரிகளின் இன்னொரு பக்கத்தையும் பார்க்கப்போகிறோம்.

நாம் பயன்படுத்தும் பொருட்கள் பலவற்றில் நுண்ணியிரிகளின் உதவி தேவைப்படுகிறது. மதுவும் ரொட்டியும் தயார் செய்ய saccharomyces serivisease என்று அழைக்கப்படும் பூஞ்சை பயன்படுகிறது. மாவுச்சத்தை செரித்து சாராயமாக மாற்றுவதால் மது தயாரித்தலிலும், கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுவதால், மாவை மிருதுவாக்க ரொட்டி செய்முறையிலும் பயன்படுகிறது. மரபணு ஆராய்ச்சியில் ஏகப்பட்ட இடங்களில் உதவியது இதே ஈஸ்ட் தான். நீரிழிவு நோய்க்கான இன்சுலினை E.coli எனப்படும் நுண்ணுயிரியை சுரக்கவைத்து தயாரிக்கிறோம். அந்த நுண்ணுயிரிகள் தமக்குள் போட்டிபோட, மற்றொரு இனத்தை அழிக்க உற்பத்தி செய்யும் மூலக்கூறுகளைக் கொண்டு ஆன்டிபயாடிக் தயாரிக்கிறோம். அதாவது, Penicillium பூஞ்சை தயாரிப்பதால் penicillin. Streptococcus தயாரிப்பதால் streptomycin. சரி இதெல்லாம் வெளியிலே. உடலுக்குள் வந்தால் ஆபத்துதானே என்று நினைத்தால் இல்லை

நம் உடலின் மிகப்பெரிய உறுப்பான தோலில், பாக்டீரியாக்கள் ஜாலியாக புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வளர்வதுபோல் வளர்ந்திருக்கின்றன. சருமத்தை பிற நுண்ணுயிரிகளிடம் இருந்து பாதுகாக்க, ஏற்கெனவே இருக்கும் இவை உதவுகின்றன. இனப்பெருக்க உறுப்புகளில் இயல்பாக இருக்க வேண்டிய அமிலத்தன்மையை நுண்ணுயிரிகள் நிலைநிறுத்துகின்றன. இங்கும் மேலதிக நோய்த்தொற்றைத் தவிர்க்கின்றன. வாயில் தொடங்கும் நம் சீரண மண்டலம் முழுவதும், தனி நுண்ணுயிரி மண்டலத்தையே நாம் வைத்திருக்கிறோம். அவ்வளவு ஏன், கருப்பைக்குள் இருக்கும் குழந்தையின் தொப்புள்கொடியிலும், அதனைச் சுற்றி இருக்கும் பனிக்குட நீரிலும்கூட (amniotic fluid) நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவற்றால் ஆபத்தில்லை. பலநேரம் உடலுக்கு இவை நன்மை செய்கின்றன. இப்படி மனித உடலுக்குள் ஒரு தனிச் சூழியல் மண்டலமாக வளரும் இந்த நுண்ணுரியிகளை, human flora அல்லது human microbiota என்கிறார்கள். நம் சுவாச, இனப்பெருக்க, சீரண மண்டலத்தில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் இவற்றுள், சீரண மண்டலத்தின் microbiota பற்றி மட்டும் பார்ப்போம். 

நம் வாயில் இருந்து சீரண மண்டலத்தின் முடிவான ஆசனவாய் வரை பல லட்சம் கோடி நுண்ணுயிரிகள் பட்டறை போட்டிருக்கின்றன. இதனைத் தனியாக gutbiota என்கிறார்கள். ஒரு மனிதனில், சீரண மண்டலத்தில் இருக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையானது, அவன் ஒட்டுமொத்த உடல் செல்களின் எண்ணிக்கையைவிட அதிகம். அவை தம் டி.என்.ஏ.வுக்குள் வைத்திருக்கும் மரபுத் தகவல்கள், நம் ஒட்டுமொத்த உடலின் ஜீன் தகவல்களைவிட பத்து மடங்கு அதிகம். 

குறைந்தபட்சம், ஆயிரம் வகையான நுண்ணுயிரிகளுக்கு நாம் வாழ்விடமாக இருக்கிறோம். இவற்றுள் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் சில வைரஸ்களும் அடக்கம். பெரும்பான்மை மக்களுக்கு பல நுண்ணுயிரி வகைகள் பொதுவாக இருந்தாலும், நம் கையெழுத்தைப்போல் நமக்கென்று பிரத்யேகமான உயிரிகளும் இருக்கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆக, உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வேறுபாடுகளில், இனி இந்த நுண்ணுயிரிகளும் உண்டு. கடந்த பத்தாண்டுகளில் இதுபற்றி ஏகப்பட்ட ஆய்வுகள் செய்து, இந்த நுண்ணுயிர்த் தொகுதிகளை உடல் உறுப்புகளில் ஒன்றாக மருத்துவம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தத் தொகுதிகளில் பிரச்னை என்றால், அதை உடல் உறுப்பு ஒன்றில் ஏற்பட்ட நோய்போல் கருதி சிகிச்சை செய்ய அறிவுறுத்துகிறது.

ஒரு ஆய்வு முடிவு என்ன சொல்கிறது எனில், ஒரு சராசரி மனிதனின் எடையில் இரண்டு கிலோ வரை இந்த நுண்ணுயிரிகள் இருக்கலாம் என்கிறது. சொல்லப்போனால், ஒருவரின் உடல் எடையை அவர் சேர்த்துவைத்திருக்கும் கொழுப்பின் அளவை இவை பாதிக்கின்றன என ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள். அதற்குக் கடைசியாக வருவோம்.

முதலில், உடலுக்குள் இவை எப்படி வருகின்றன என்றால், பிறக்கும்போது தாயிடம் இருந்தே முதல் தொகுதியைப் பெறுகின்றோம். இது தொடர்பான வாசிப்பின் மிக அழகான ஒரு சொல்லாடலை இதற்குக் கையாண்டிருந்தார்கள். அது, “bacterial baptism”. பிறக்கும்போது கிடைக்கிற இந்த உயிரிகள்தான், தாய்ப்பாலைச் செரிக்கிற சக்தியைத் தருகின்றன. பின்னர், தாய்ப்பால் மூலம் இன்னொரு தொகுதியைப் பெறுகிறோம். அதன்பின், வாழும் சூழலுக்கு ஏற்பவும், உணவுப் பழக்கத்தைப் பொருத்தும் இந்த நுண்ணுயிரி வகைகள் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. 

சுமார் மூன்று வயதில், ஒரு மனிதனின் ஆயுசுக்கும் தேவையான அடிப்படை உயிரிகள் வயிற்றில் குடியேறிவிடுகின்றன. இவை நம் செரிமானச் செயல்முறைகளில் பெரும்பங்கு வகிக்கின்றன. நாம் சாப்பிடும் உணவை முழுவதும் செரிக்கத் தேவையான என்ஸைம்களோ, நேரமோ நமக்குக் கிடையாது. நாம் சாப்பிட்ட பனீர் பட்டர் மசாலா இத்யாதிகளை நம்மால் நிச்சயமாக ஆறு மணி நேரத்துக்குள் முழுவதுமாக செரிக்கமுடியாது. மேலும், கீரை போன்ற cellulose நிறைந்த உணவுப் பொருட்களை நம்மால் செரிக்கமுடியாது. இந்த நுண்ணுயிரிகள்தான் அதை உடலால் கிரகிக்கக்கூடிய மூலக்கூறுகளாக மாற்றுகின்றன. நம்மால் உற்பத்தி செய்யமுடியாத சில அமினோ அமிலங்களை அவைதான் உற்பத்தி செய்து உடலுக்கு அளிக்கின்றன. 

இது ஒன்றும் தியாகமெல்லாம் இல்லை. சுயநலமும், உயிர் வாழ வேண்டும் என்னும் உந்துதலும் இல்லாத உயிர்களே கிடையாது. வெளியில் திரிந்தால், ஏதாவது உயிரியில் இடம் கிடைக்கும் வரை தேவுடு காக்க வேண்டும். வயிற்றுக்குள் இருந்தால், உண்ண உணவு, இருக்க இடம் இரண்டும் நிச்சயம். போகிறபோக்கில் வாடகையாகச் சில வைட்டமின்கள். இப்படி ஒரு வசதி கிடைத்தால், நாமும் சாகிறவரை ஒரே இடத்தில் டேரா அடிப்போம்தானே. அதைத்தான் அவையும் செய்கின்றன. உணவை செரித்து, நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உதவிசெய்து, உடலின் சமநிலையைப் பாதுகாக்கின்றன. 

ஒருவர் வளர வளர அவரின் சீரண மண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் கொஞ்சம் கொஞ்சம் மாறுகின்றன. மாவுச்சத்தை உடைக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. வயது முதிரும்போது, இந்த அளவு குறையத் தொடங்குகிறது. வயதானவர்களின் செரிமானத் திறன் குன்றுவதற்கு இதுவும் ஒரு காரணம். ஜப்பானியர்களின் உணவில் முக்கியப்பங்கை வகிக்கும் கடல் தாவரத்தை (seaweed) செரிக்கும் நுண்ணுயிரிகள், ஜப்பானியர்களின் சீரண மண்டலத்தில் மட்டுமே காணப்படுகிறது. இப்படி, உணவைச் சீரணிப்பதில் இவை ஆளுக்கு ஆள் வேறுபட்டிருப்பதால், ஒரே மருந்து எல்லோருக்கும் ஒரே மாதிரி வேலை செய்ய வாய்ப்பில்லை. இது, மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகள் ஆளுக்கு ஆள் மாறுபடுவதை உறுதி செய்கிறது. மேலும், இதன்மூலம் பொத்தாம்பொதுவாக இந்த வியாதிக்கு இந்த மருந்து என்று எழுதித் தராமல், ஆளுக்கு ஏற்றாற்போல் மருந்து தர வேண்டும் என்னும் கருதுகோளுக்கு வலுசேர்க்கிறது.

உடல் எடையைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? இந்த நுண்ணுயிர்த் தொகுதிகள், மெலிந்தவர்களுக்கும், பருமனாக உள்ளவர்களுக்கும் மாறுபடுகின்றன. மெலிந்தவர்களின் சீரண மண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்களின் வகை, பருமனாக இருப்பவர்களின் வயிற்றில் இருப்பதைவிட அதிகமாக இருக்கும். ஏகப்பட்ட வகைகள் இருப்பதால், உணவின் எல்லாப் பகுதிகளையும் முழுமையாகச் செரித்து, உடலில் கொழுப்பு சேராதபடி செய்துவிடும். ஆனால், பருமனாக இருப்பவர்களின் வயிற்றில் இருக்கும் நுண்ணியிர்த் தொகுதிகளில், சில குறிப்பிட்ட வகைகள் மட்டும் இருப்பதால், உணவை மொத்தமாகச் செரிக்கமுடியாது. கொழுப்புகளை தோலுக்கடியில் சேமித்துவைக்க அனுப்பிவிடும்.

எலிகளை வைத்து விஞ்ஞானிகள் ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். மெலிந்தவர்கள், பருமனாக இருப்பவர்கள் வயிற்றில் இருக்கும் நுண்ணுயிர்களை, புதிதாகப் பிறந்த எலிகளின் வயிற்றில் செலுத்தினார்கள். மெலிந்தவர்களின் நுண்ணுயிர்களைப் பெற்ற எலிகள் மெலிந்தே இருந்தன. பருமனாக இருந்தவர்களின் நுண்ணுயிர்களைப் பெற்ற எலிகள் கொழுப்பு மிகுதியோடு பருமனாயின. இரண்டு எலிகளையும் ஒரே கூண்டுக்குள் வைத்தால், பருமனான எலிகள் உடல் மெலிய ஆரம்பித்திருந்தன.

மெலிந்ததன் காரணம் உண்ணாவிரதமோ, டயட்டோ அல்ல. இந்த எலி போன்ற கொறித்துண்ணிகளிடம் (rodents) ஒரு பழக்கம் உண்டு. அவை, சத்துக்குறைவான உணவுகளை உண்ணும்போது, தங்கள் கழிவை உண்டு சத்துகளை மறுசுழற்சி செய்பவை. அப்படித்தான், மெலிந்த எலியின் வயிற்று நுண்ணுயிரிகள் அதன் எச்சங்கள் மூலம் பருமனான எலியின் வயிற்றுக்குள் போயிருக்கமுடியும். இதுபோல, மனிதர்களுக்கு இந்த நுண்ணுயிரிகளை மாற்றிப் பொருத்தி, உடல் எடையை ஏதும் குறைக்கமுடியுமா என்று தீவிரமாக ஆராய்கிறார்கள். அதுவரை, ஓம் பேலியோ டயட்டாய நம:, ஓம் ஜிம் வொர்க்கவுட்டாய நம: ஓம் ந்யுட்ரிஸ்லிமாய நம: என்று இருக்க வேண்டியதுதான். 

சரி, இந்த நுண்ணுயித் தொகுதி பாதிப்படைய என்ன காரணங்கள் –

● சுகப்பிரசவம் இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்கு, தாயிடம் இருந்து கிடைக்க வேண்டிய நுண்ணுயிரிகள் கிடைப்பதில்லை. இதை நிவர்த்திசெய்யவும் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
● தாய்ப்பால் இல்லாமல் பவுடர் பால் அல்லது பாக்கெட் பாலில் பசி அடங்கும் குழந்தைகளுக்கும் சரியான நுண்ணுயிர்த் தொகுதிகள் கிடைப்பதில்லை.
● ரொம்ப சுத்தக்காரக் கொத்தமல்லிகளாகப் பொத்திப் பொத்தி வளர்க்கப்படும்போது, சுற்றுச்சூழல் மூலம் கிடைக்க வேண்டிய தொகுதிகள் கிடைக்காமல் போகலாம். 
● சமீபத்திய நோய்த்தொற்றுகளுக்காக ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தால், அது வயிற்றின் ஒட்டுமொத்த நுண்ணுயிர்த் தொகுதியை அழித்துவிடும். அதற்கு நல்ல நுண்ணுயிரி, கெட்ட நுண்ணுயிரி என்றெல்லாம் தெரியாது. (வார்டன்னா அடிப்போம்தான்).
● பதப்படுத்தப்பட்ட உணவுகளை மட்டுமே உண்பதால், உணவு மூலம் நுண்ணுயிர்கள் உள்ளே போவதற்கு வழியில்லாமல் போகிறது. பாலில் இருந்து இறைச்சி வரை எல்லாமே பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் விற்கப்படுவதால், அவற்றில் இருந்து ஏதும் கிடைக்காது.

சரி, இதெல்லாம் நடந்துவிட்டால் என்ன செய்யலாம்? வயிற்றில் பழையபடி நுண்ணுயிர்த் தொகுதிகளை எப்படிக் கொண்டுவருவது.

● சிறுகுழந்தைகளை அநியாயத்துக்கு சுகாதாரமாக வளர்க்காமல், ரொம்ப பூச்சி பிடிக்காமல், கொஞ்சம் வெளியே விளையாடவும், நுண்ணுயிர்களோடு புழங்கவும் அனுமதித்தால், கச்சிதமான நுண்ணுயிர்கள் கிடைக்கின்றன. சாகும்வரை உடன் இருக்கப்போகும் உயிரிக்காக, இரண்டு முறை காய்ச்சல் வந்தால் தப்பே இல்லை.
● முடிந்தவரை ஆன்டிபயாடிக்குகளைத் தவிர்க்கவும். நம் உடல் என்பது நாம் மட்டும் அல்ல. சிறுவயதிலேயே ஆன்டிபயாடிக் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு இந்த நுண்ணுயிர்த் தொகுதிகள் கடைசிவரை கிடைப்பதே இல்லை.
● ஆன்டிபயாடிக்குகளால் சிதைந்த தொகுதிகளை மீண்டும் அவற்றை வயிற்றில் செலுத்துவதால் மீட்கலாம். நாம் காலங்காலமாகப் பயன்படுத்தும் ஒரு உன்னதப் பொருள் இருக்கிறது. தயிர் என்று அதற்குப் பெயர். Lactobacillus வகையின் அற்புதமான பொக்கிஷம் அது. நிச்சயம், சிறுகுடலும் பெருங்குடலும் நன்றி சொல்லும். இதெல்லாம் probiotics. அதாவது, நுண்ணுயிர்கள் நிறைந்த உணவுப் பொருள். திரிந்த பாலை வாசனை பார்க்காமல் குடித்த ஆதிமனிதனுக்கு ஒரு ஜே 

இதைத்தவிர, அதிக நார்ச்சத்து (high fibre) கொண்ட உணவுகளைச் சாப்பிடுவதால், வயிற்றுக்குள் இருக்கும் நுண்ணுயிர்களுக்கு ஊக்கம் கொடுக்கும். இதற்கு prebiotics என்று பெயர். Prebiotics-ம் probiotics-ம் முக்கியமானவை. பழைய சோற்று நீராகாரத்தில் acetobacter நிறைய கிடைக்கும். 

ஆக, இந்த உடலுக்குள் இருக்கும் ‘மழைக்காட்டை’ பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அவை பொக்கிஷம். ஒரு மனிதனின் ஆரோக்கியத்தின் அடையாளம். வெளியே சூழியலைப் பேணுதல் மட்டும் முக்கியமில்லை; உள்ளேயும் கொஞ்சம் சூழியல் பேணுவோம். 

‘கிருமிகள் போற்றுதும் கிருமிகள் போற்றுதும்...’ 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com