தலைமைச் செயலகத்துக்குள் ரெய்டு!

தலைமைச் செயலக ரெய்டு என்பது சற்றே சிக்கலான விஷயம். மாஃபியாக்கள் சூழ, குறிப்பிட்டவற்றை மட்டும் அனுப்புவதும் சிலநேரம் நன்மைக்குத்தான் என்று புரிந்துகொள்வோம்.

தலைமைச் செயலகத்துக்குள் ரெய்டு போகலாமா? இது மாநில இறையாண்மைக்கு எதிரானது; மத்திய அரசு மிரட்டுகிறது; தனித் தமிழ்நாடு கேட்போம் என்று ஒரு சாரார்; சில துறையினருக்கு சோதனை செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டிருப்பின் அவர்கள் எந்த அதிகார மையத்திலும் கை வைக்கலாம் என்று ஒரு சாராரும் சொல்லி வருகின்றனர்.

என்வரையில், தலைமைச் செயலகத்துக்குள் அவ்வளவு எளிதாக ரெய்டு நடக்கக்கூடாது. ஏன், வெளி ஆட்களே உள்ளே புகக்கூடாது. அதிதீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும். அதையும் தலைமைச் செயலகத்தைச் சுற்றியிருப்பவர்களே முடிவு செய்தல் நலம். நிற்க. நான் மாநிலத்தின் தலைமைச் செயலகத்தைப் பற்றிச் சொல்லவில்லை; நம் தலைமைச் செயலகமான மூளையைப் பற்றித்தான் சொல்கிறேன்.

மூளை ஒரு சுயஉணர்வு இல்லாத உறுப்பு. ஆனால், அங்குதான் உடலில் உள்ள மற்ற எல்லா உறுப்புகளுக்குமான உணர்வு உள்ளீடுகள் அலசப்படுகின்றன, தன்னலம் கருதாத மன்னன் மாதிரி. அப்படிப்பட்ட மன்னனை, வள்ளுவர் சொல்கிற காட்சிக்கு எளியன் என்பது போலெல்லாம், எல்லாவற்றையும் மூளைக்குள் அனுப்புதல் உசிதமில்லை. பழக்கப்பட்ட பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே உள்ளே போய்வர அனுமதி உண்டு. மீதியெல்லாம் உள்ளே புக முனைந்தால், இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். இந்தக் கட்டுக்காவலை, மூளையைச் சுற்றியிருக்கும் அமைப்புகள் செவ்வனே செய்கின்றன. வலுவான ஒரு அரண் அமைத்து, குறிப்பிட்ட பொருட்களை மட்டும் சோதனைக்குப்பின் உள்ளே அனுப்பி, ஒரு தேர்ந்த மெய்க்காப்பாளர்களாக வேலை செய்கின்றன. அதே ஆறு லிட்டர் ரத்தம் உடல் முழுக்கப் பாய்ந்தாலும், ரத்தத்தில் உள்ள பல பொருட்களுக்குக்கூட அனுமதி மறுப்புதான். மூளை இருக்கும் இடம் வரை போய்ப் பார்த்துவந்து நல்லா இருக்கு, குளுக்கோஸ் குடிக்குது என்று பேட்டி வேண்டுமானால் கொடுக்கலாம். நிச்சயமாக விசிட்டிங் கார்டுகள் கொடுத்தனுப்பப்படமாட்டாது.

இந்தத் தடுப்புக்கு ரத்த - மூளை இடைத்தடுப்பு (Blood Brain Barrier) என்று பெயர். பால் எல்ரிச் (Paul Elrich) என்னும் பாக்டீரிய நுண்ணுயிர் நிபுணர், எலி போன்ற விலங்குகளின் உடலில் நச்சில்லாத வண்ணச்சாயங்களை செலுத்திப் பரிசோதித்தபோது, அவை மூளையைத் தவிர உடலின் அனைத்து பாகங்களுக்கும் பரவியிருந்தன. பின்னாளில், அவருடைய மாணவரான கோல்ட்மேண் (Goldmann), அந்தச் சாயத்தை மூளை தண்டுவட திரவத்தில் (Cerebrospinal Fluid) நேரடியாகச் செலுத்தினார். இப்போது மூளை மட்டும் வண்ணமயமாக இருந்தது. உடலில் வேறு எங்கும் சாயம் காணப்படவில்லை. அப்போதுதான், மூளையையும், ரத்தத்தையும் தனித்தனியே ஏதோ ஒன்று பிரித்துவைக்கிறது என்று ஊகித்தார்கள். பின்னாளில், எலெக்ட்ரான் நுண்ணோக்கிகள் வந்த பின்னரே, இந்தத் தடுப்பை பார்த்து அறிய முடிந்தது.

இந்தத் தடுப்பு, அடர்த்தி அதிகமான எண்டோதீலியல் (Endothelial) செல்களால் ஆனவை. செல்கள் சந்திக்கும் இடத்தில் தடிமனான வடிவத்தைக் கொண்டிருக்கும். இவை நீர், குளுக்கோஸ், ஆக்ஸிஜன் போன்ற அத்தியாவசிய வாயுக்கள் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய சில பொருட்களை மட்டும் உள்ளே அனுமதிக்கும். என்னது கொழுப்பா? ஆம், கொழுப்புதான். மனித உடல் உறுப்புகளிலேயே, தன் எடையில் அதிக சதவீதம் கொழுப்பு வைத்திருக்கும் உறுப்பு மூளைதான். இவற்றுக்கு மட்டும் கேட்பாஸ் கொடுத்துவிட்டு, நச்சுப்பொருட்கள், நுண்ணுயிரிகள் மற்றும் பிற அந்நியப் பொருட்களுக்கெல்லாம் பேரிகேட் போட்டுவிடும்.

பாட்டுலினம் என்னும் தசைகளைச் செயலிழக்கச் செய்யக்கூடிய, ஒருவகை பாக்டீரியா சுரக்கும் நஞ்சை இந்த அரண் தடுத்து நிறுத்தும். இந்த பாக்டீரியா, காற்றில் சகஜமாக சுற்றிக்கொண்டிருக்கும். பூங்காக்கள், தோட்டங்கள் போன்றவற்றிலும் இந்தப் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். அதன் நஞ்சு மூக்கின் வழியாகவோ, உணவின் வழியாகவோ பிற உறுப்புகளைத் தாக்கினாலும் மூளையைத் தாக்காது.

பரிணாம ரீதியாக, சமைக்காத உணவை நாம் அப்படியே சாப்பிட்டபோது, உணவில் இருக்கும் கிருமிகள் மூளையை அடையாமல் இந்த அரண்தான் காத்துவந்திருக்கிறது. ஆனால், இந்த அரணால் கேட்பாஸ் கொடுக்கப்பட்ட தப்பான ஒரு ஆள் ‘சரக்கு’. அட அதாங்க சாராயம். சாராயம்னா எல்லா வகையான ஆல்கஹால் வகைகளும்தான். தன்னால் முடிந்தமட்டும் கல்லீரல் சமாளித்துவிட்டு கைவிரித்துவிட, எத்தனால் மூலக்கூறுகள் நேரடியாக ரத்தத்தில் கலந்து, மூளையின் அரணையும் கடந்து, மைய நரம்பு மண்டலத்தை அடைந்துவிடுகின்றன. அப்பறம் என்ன… ‘செருப்பை எடுத்து நீட்டி, சித்தப்பு இந்தா சிக்கன், சாப்புடு சித்தப்பு…’ என்று ஆரம்பிக்க வேண்டியதுதான்.

மூளையின் பெரும்பான்மை இயக்கங்கள், பிறந்த சில வருடங்களுக்குள் நிகழ்ந்தாலும், இந்தத் தடுப்பு அரண் மட்டும், மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுக்கு கருவிலேயே முழுமையாக வளர்ச்சியடைந்துவிடுகிறது. முயல் குட்டிகள் மற்றும் வளர்ந்த முயலின் மூளை, வேதிப்பொருட்களை உறிஞ்சும் அளவை ஒப்பிடுகையில், இரண்டும் ஒரே மாதிரியே இருந்திருக்கின்றன. அதாவது, தலைமைச் செயலகத்துக்குப் பிறக்கும்போதில் இருந்தே, இந்தப் பாதுகாப்பு தரப்பட்டிருக்கிறது.

ஆனால், ஒரு தடுப்பு அமைப்பு இருந்தால் அதில் ஓட்டையும் இருக்கத்தானே செய்யும். ஒரு முக்கியமான விஷயம். மூளையின் அரணாக இருந்தாலும், மூளையின் எல்லா பாகங்களும் இந்தப் பாதுகாப்புத் தடுப்பினால் பாதுகாக்கப்படுவதில்லை. மூளை -தண்டுவடத் திரவம் போய் வரும் இடங்களும், Circumventricular Organs எனப்படும் சில பாகங்களுக்கும் இந்தப் பாதுகாப்பு அரண் கிடையாது. உதாரணமாக, பீனியல் சுரப்பி தன் ஹார்மோனை நேரடியாக ரத்தத்தில் கலக்கிறது. அப்படியெனில், அது நேரடியாக ரத்தத்தோடு தொடர்புகொள்கிறது. மற்றபடி, பிற பாகங்களை வேறு எதுவும் தொடக்கூட முடியாது.

சில இடங்களில், அதீத பாதுகாப்பும் சிக்கல்தானே. சில நோய்க் கிருமிகள் வேதிப் பொருட்களைச் சுரந்து, இந்தத் தடுப்பு அரணுக்குக் கல்தா கொடுத்துவிட்டு உள்ளே போய்விடும். அவை, மூளைச் செல்களைத் தாக்கி கிருமித்தொற்றை ஏற்படுத்தும். அவற்றை அழிக்க உடல் அனுப்பும் எதிருயிரிகள் (Antibodies), இந்த அரணைக் கடப்பது கடினம். உடலின் நோய் தீர்க்கும் முயற்சிகளுக்கு இந்த அரண் ஒத்துழைக்காததால், மெனிஞ்சைட்டீஸ், ரேபிஸ் போன்ற நோய்களும், அல்சைமர், வலிப்பு போன்ற நோய்களும் தீவிரம் அடைகின்றன. ஆன்டிபயாடிக் மருந்துகளும் இதனைத் தாண்டி உள்ளே புகா.

ஒரே ஒரு ஆறுதல் என்னவெனில், உள்ளே கிருமித்தொற்று ஏற்பட்டால் வீக்கம் உண்டான பகுதிகளில் இந்த அரண் கொஞ்சம் நெகிழ்வாக இருக்கும். அதன்மூலம் மருந்துகளை உட்செலுத்தலாம். மருந்துப்பொருளை, மூளையில் ஏற்படும் பிரச்னைகளை, குறிப்பாக புற்றுநோய்க்கட்டியைத் தீர்க்க அனுப்புவதை (Drug Delivery) விஞ்ஞானிகள் ஒரு சவாலாகவே எதிர்கொள்கின்ன்றனர். இந்த அரணை செயற்கையாக இளகவைத்து, அதன்மூலம் மருந்துகளை அனுப்புதல், நானோ துகள்கள் மூலம் அந்த அரணைக் கடந்து உட்புகுதல் அல்லது மூளைக்குள் போகக்கூடிய மூலக்கூறுகளால், குறிப்பாக பெப்டைடு எனும் புரோட்டீன் துண்டுகளால் மூடி, மஞ்சள்காமாலை மருந்தை வாழைப்பழத்துக்குள் வைத்து விழுங்குதல் மூலம் உள்ளே அனுப்பலாம். இம்மாதிரியான முறைகளை விஞ்ஞானிகள் பரிசீலிக்கவும், பரிசோதிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆகவே, தலைமைச் செயலக ரெய்டு என்பது சற்றே சிக்கலான விஷயம். மாஃபியாக்கள் சூழ, குறிப்பிட்டவற்றை மட்டும் அனுப்புவதும் சிலநேரம் நன்மைக்குத்தான் என்று புரிந்துகொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com