கண்ணான கண்ணோ..!

வரலாற்றுக் கோணத்தில் கண்ணாடி அணிதலைப் பற்றி 800 ஆண்டுகள் பழமையான குறிப்புகள் இருக்கின்றன. முகலாய மன்னர்கள் காலத்திலேயே கண்ணாடிகள் உண்டு.

கண்ணாடி அணிந்த குரங்கை எங்கேனும் பார்த்ததுண்டா? கான்டாக்ட் லென்ஸ் அணிந்த காட்டெருமை? ஏன் பார்த்ததில்லை. கண் பார்வைக் குறைபாடு என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா? மற்ற விலங்குகள் துல்லியமான பார்வை உடையவையா? அப்படி இல்லையெனில் எப்படிச் சமாளிக்கின்றன? 

கண் பார்வை என்பது ஒரு முக்கியமான புலன் செயல்பாடு. ஆனால், எல்லா விலங்குகளுக்கும் கண் பார்வை துல்லியமாக இருப்பதில்லை. உண்மையில், உலகில் வெற்றிகரமாக வாழுகிற சில உயிரிகளுக்குக் கண்களே கிடையாது. உதாரணம் ஜெல்லி மீன்கள். சில உயிரினங்களுக்கு, கிலோமீட்டர் கணக்கில் துல்லியமான பார்வை உண்டு. ராஜாளிக் கழுகுகள், கீழே குப்பை குடைகிற ஒரு எலியை அலேக்காக டைவ் அடித்து தூக்கிக்கொண்டு போய்விடும். மேண்டிஸ் ஷ்ரிம்ப் (Mantis shrimp) எனப்படும் ஒரு ஆழ்கடல் மீனுக்கு, புற ஊதா - அகச்சிவப்பு என எல்லாவற்றையும் பார்க்க முடியுமாம். இருக்கிற கலர்களுக்கே துணிக்கடைக்காரனை பெண்கள் கதற அடிக்கிறார்கள். மேன்டிஸ் ஷ்ரிம்பின் பார்வை இருந்தால் என்ன ஆகுமோ?

சரி, இந்த விலங்கெல்லாம் நாம் அன்றாடம் பார்க்காதவை. நாம் சாதாரணமாகப் பார்க்கும் விலங்குகள் சிலவற்றுக்குக்கூட கண் பார்வை துல்லியமாக இருக்கிறது. மீதி விலங்குகள் மோப்பம், கேட்கும் திறன் போன்றவை துல்லியமாக இருப்பதால் பிழைப்பை ஓட்டுகின்றன. விலங்கினங்களுக்கும் கண்களில் பிரச்னை வரும். ஆனால், அந்தப் பிரச்னையால் வாழ்வது என்பது கடினமாகி, வேறு ஏதேனும் ஒரு உயிரிக்கு உணவாகிவிடும். இதனால், அவற்றால் பார்வைக் குறைபாட்டு ஜீனை அடுத்த சந்ததிக்குக் கடத்த முடியாமல் போய்விடுகிறது. ஆனால், நாலு சுவற்றுக்குள் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் நாம், இந்த குறைபாட்டு ஜீனை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்திவருகிறோம்.

மனிதனின் கண் என்பது 576 மெகாபிக்ஸல் கேமரா. ஒரு லென்ஸ் மற்றும் ஒரு திரை. திரைதான் ரெட்டினா. திரை நகராது இருக்கும். இந்த லென்ஸை தசைகளால் சுருக்கவும் நீட்டவும் முடியும். அதன்மூலம் பக்கத்தில் இருக்கும் பொருளுக்கும் தூரத்தில் இருக்கும் பொருளுக்கும், பார்வையை அரைநொடிக்கும் குறைவான நேரத்தில் எடுத்துப்போக முடியும்.

நமக்கு வரும் பொதுவான கண் பார்வைக் குறைபாடுகளாக மூன்றைச் சொல்லலாம். 

முதலாவது, கிட்டப்பார்வை (Myopia). கிட்டப்பார்வை என்றால் அருகில் இருக்கும் பொருட்கள் எல்லாம் தெளிவாக இருக்கும். ஆனால், தூரத்தில் இருப்பவை தெரியாது. கண்கோளம் நீட்சி அடைவதால் அல்லது ஆஸ்டிக்மாட்டிஸம் எனப்படும் கார்னியா அமைப்பின் கோளாறால் ஒளி அலைகள் ரெட்டினாவுக்கு முன்பே குவியும். அப்போது தூரத்துப் பொருட்கள் மங்கலாகவே இருக்கும். யாரோ நடந்து வருகிறார்கள் என்று நினைத்திருந்து, அருகில் வந்தவுடன், “ஓ! சங்கரா? அதான் சங்கர் மாதிரியே இருக்கேன்னு பாத்தேன்” என்பார்கள். இவர்களுக்குக் கண்ணாடி அணிவது பலன் தரும். அவை குழி ஆடி (concave lens) வகையைச் சார்ந்தது. அவை ஒளியை இன்னும் கொஞ்சம் விரட்டி சரியாக ரெட்டினாவில் விழச் செய்யும். 

அடுத்தது, தூரப்பார்வை (Hyperopia). கிட்டத்து ஒளி அலைகள் ரெட்டினாவில் குவியாமல், ரெட்டினாவையும் தாண்டி அதன் பின்புறத்தில் குவிவதால், பார்வை தெளிவாக இருக்காது. இவர்களுக்கு குவி ஆடி (convex lens) வகையைப் பொருத்துவார்கள். அவை, ஒளியை சரியாக ரெட்டினாவில் விழச்செய்யும்.

கடைசியாக, வயதான காரணத்தால் கண் லென்ஸின் இயல்பான சுருங்கி விரியும் தன்மை பாதிப்படைவதால், சிறு எழுத்துகளை நம்மால் தெளிவாகப் படிக்க முடியாது. இதற்கும் கண்ணாடி அணிய வேண்டும். 

ஒருவருக்கு, இதில் இரண்டு குறைபாடுகள் ஒரே நேரத்தில் வந்தால், ஒரே கண்ணாடியில் இரண்டு லென்ஸ்கள் மேலும் கீழுமாகப் பொருத்தப்பட்ட பைஃபோக்கல் (Bifocal) கண்ணாடிகள் அணியச் சொல்வார்கள். அதெல்லாம் பார்க்க நன்றாக இல்லை என்பவர்களுக்கு, இரண்டு கண்ணாடிகளை அப்படியே மேலும் கீழும் உருக்கி ஒட்டினாற்போல இருக்கும் ப்ரொக்ரெஸிவ் லென்ஸ் (Progressive lense) இருக்கின்றன. விலை சற்றே அதிகம். ஒரே கண்ணாடி வில்லையை வேறு வேறு இடங்களில், வேறு வேறு மாதிரி தயாரிக்கவேண்டி இருப்பதால் விலை அதிகம். 

வரலாற்றுக் கோணத்தில் கண்ணாடி அணிதலைப் பற்றி 800 ஆண்டுகள் பழமையான குறிப்புகள் இருக்கின்றன. முகலாய மன்னர்கள் காலத்திலேயே கண்ணாடிகள் உண்டு. சரி இந்த கான்டாக்ட் லென்ஸுகள் என்ன கதை?

லியனார்டோ டாவின்ஸிதான் முதலில் இதன் தூரத்துத் சொந்தத்தை வரைந்தது என்கிறார்கள். ஆனால், அவர் வரைந்தது மண்டையில் மீன் தொட்டியை கவிழ்த்தாற்போல் ஒரு வடிவம். கண் பிரச்னைக்கு மொத்த முகத்தையும் மூடி, அதில் நீர் நிரப்பி அதன்மூலம் ஒளியை ரெட்டினாவில் விழச் செய்ய முடியும் என்று நம்பினார் அவர். இன்றைய தேதியின் கான்டாக்ட் லென்ஸுகள் சிலிக்கோன் ஹைட்ரோஜெல் (silicone hydrogen) எனப்படும் 90 சதவீத நீரால் ஆன நெகிழியால் செய்யப்படுபவை. அவை கண்ணோடு பொருந்தி மூக்குக் கண்ணாடி செய்யும் அதே வேலையைச் செய்கின்றன. மேலும், அவை காற்று புகும் வகையில் உள்ளவை. காரணம், கண்ணின் கார்னியா நேரடியாகக் காற்றில் இருந்து ஆக்ஸிஜனைப் பெறுகிறது. இல்லையென்றால், ரத்தக்குழாய்கள் அதன் ஒளி புகக்கூடிய தன்மையை பாதிக்குமல்லவா?

எனக்கு இந்தக் கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ் பஞ்சாயத்தே வேண்டாம் எனில், நீங்கள் லேசிக் சிகிச்சை செய்துகொள்ளலாம். லேசிக் சிகிச்சை, கார்னியாவின் கோளப்பரப்பை லேசர் ஒளியைக் கொண்டு மாற்றி, ஒளியை சரியாக ரெட்டினாவில் குவிக்கிறது.

உலகம் முழுக்க இருக்கும் வளரும் நாடுகளில் இந்தக் கண் பார்வைக் குறைபாடுகள் அதிகரித்து வருகின்றன. நாம் கணினி, கைபேசி என்று குற்றம் சுமத்தினாலும், ஆராய்ச்சிகள் என்ன சொல்கிறதெனில், குழந்தைகள் வெயிலில் திரிவதோ விளையாடுவதோ இல்லை என்பதே காரணம் என்கின்றன. கொஞ்சம் வெளியில், சூரிய ஒளியில் திரியட்டும். வெயில் நல்லது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com