திருப்பு.. திருப்பு..

இதுபோன்ற கண்ணாடிக் குழாய்கள் நம் ஸ்மார்ட் ஃபோன்களின் உள்ளே கொள்ளாது‌. மேலும், அவை முழுக்க முழுக்க மின்னணுச் சாதனங்கள்.

கையில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோனை நீளவாக்கில் வைத்துக்கொண்டு சாட்டிங்கில் இருக்கும் நீங்கள், ஒரு வீடியோ பார்ப்பதற்காக அப்படியே படுக்கைவசத்தில் திருப்பிக்கொள்கிறீர்கள். வீடியோவும் முழு திரைக்கு அழகாக விரிகிறது‌. இப்படி நம்‌ இஷ்டத்துக்கு திருப்பும்போது, திரையில் இருப்பதும் திரும்புகிறதல்லவா? நம் ஃபோன்களுக்கு அவற்றை நீளவாக்கில் பிடித்திருக்கிறோமா, படுக்கைவசத்தில் பிடித்திருக்கிறோமா என்று எது உணர்த்துகிறது?

இருபுறமும் அடைக்கப்பட்ட ஒரு கண்ணாடிக் குழாய்க்குள், ஒரு ஸ்பிரிங்கில் தொங்கவிடப்பட்ட ஒரு பந்து இருப்பதாகக் கொள்ளுங்கள். இப்போது, அந்தக் குழாயை மேலும் கீழும் அசைக்கும்போது, அந்த ஸ்ப்ரிங்கின் நீளம் குறையவோ அதிகரிக்கவோ செய்யும் அல்லவா? அந்த மாற்றத்தின் அளவைக் கொண்டு அசைவையும், அசைவின் முடுக்கத்தையும் (acceleration) கணக்கிட முடியும் அல்லவா? இப்படி மூன்று குழாய்களை ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைத்துவிட்டால், அதைக்கொண்டு முன்-பின், மேல்-கீழ், இடது-வலது அசைவுகளையும், அத‌ன் வேகத்தையும் கணித்துவிட முடியும். இது முழுக்க முழுக்க இயந்திரத்தால் ஆனது.

ஆனால், இதுபோன்ற கண்ணாடிக் குழாய்கள் நம் ஸ்மார்ட் ஃபோன்களின் உள்ளே கொள்ளாது‌. மேலும், அவை முழுக்க முழுக்க மின்னணுச் சாதனங்கள். அசைவுகள், புவியீர்ப்பு சார்ந்தவை. அவ்வாறு இருக்கும்போது, அந்தப் புவியீர்ப்பில் ஏற்படும் மாற்றத்தை மின்னணுச் சாதனங்களுக்குப் புரியும்படி மாற்ற வேண்டும். அதைச் செய்யும் கருவிகளுக்கு, மைக்ரோ எலெக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் (Micro Electro Mechanical Systems) என்று பெயர். செல்லமாக, மெம்ஸ் (MEMS). கண்ணால் பார்க்கமுடியாத நுண்ணிய மின்னணுச் சாதனங்களைக் கொண்டு, மின்சாரத்தை அசைவுகளாகவும், அசைவுகளை மின்சார சமிக்ஞைகளாவும் மாற்றுவதே இவற்றின் வேலை. நம் ஸ்மார்ட் ஃபோன்களுக்குள் இருக்கும் மெம்ஸின் பெயர் முடுக்கமானி. ஆங்கிலத்தில் ஆக்ஸிலரோமீட்டர் (accelerometer).

முடுக்கமானிகளில் இரண்டு வகை உண்டு.

1.   பீஸோ எலெக்ட்ரிசிட்டி எனப்படும் படிகங்களில் ஏற்படும் அழுத்தத்தால் உருவாகும் சிறு அளவிலான மின்சாரத்தை வைத்து இயங்கும் வகை.

2.   முழுக்க முழுக்க சிலிக்கான் தனிமத்தால்‌ செய்யப்படும் வகை.

முதல் வகையின் செயல்பாடு நம் கைக்கடிகாரங்களைப் போன்றது‌. கடிகாரங்களின் உள்ளே இருக்கு க்வாட்ஸ் (quartz) படிகத்தின்‌ மேல் அழுத்தம் கொடுக்கப்படும்போது, அழுத்தம் கொடுக்கப்படும் திசைக்குச் செங்குத்தாக ஒரு சிறு மின்சாரம் பாய்கிறது‌. கடிகாரங்கள் இதன் எதிர்விளைவைப் பயன்படுத்துகின்றன. அதாவது, மின்சாரத்தைச் செலுத்தி அந்தப் படிகத்தை அதிர வைப்பது. இந்த விளைவை அடிப்படையாகக் கொண்டு, நாம் நம் ஸ்மார்ட் ஃபோனை திருப்பும்போது, படிகத்தின் எந்த அச்சில் மின்சாரம் பாய்கிறது எனக் கணக்கிட்டு, அதன்மூலம் ஸ்மார்ட் ஃபோன் எந்த வாக்கில் இருக்கிறது என அறிந்துகொள்ளுமாறு வடிவமைத்திருப்பார்கள்.{pagination-pagination}

இரண்டாவது வகைதான் சுவாரசியமான, பிரமிப்பான தொழில்நுட்பம். ஸ்மார்ட் ஃபோனின் உட்புறம் இருக்கும் சிப்புடன், சீப்பின் பற்கள் போன்ற நுண்ணிய அமைப்புகளை உருவாக்குவார்கள். அவை உலோகத்தால் ஆனவை. அவற்றுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்‌. அவற்றின் இடையே, அதைவிட நுண்ணிய சிலிக்கானால்‌ ஆன அமைப்பைப் பொருத்தி இருப்பார்கள். அதாவது, உலோகச் சீப்புப் பற்களுக்கு இடையே இந்த சிலிக்கான் அமைப்பு அசையுமாறு பொருத்தியிருப்பார்கள்‌‌. சிறு அதிர்வுக்கும் அசையுமாறும், அதேநேரம் இரு உலோகப் பற்களையும் தொடாதவாறும் அது வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இரு பற்களுக்கிடையே அந்த சிலிக்கான் நகரும்போது, அந்தப் பற்கள்‌ வழியாகப் போய்க்கொண்டிருக்கிற மின்சாரத்தின் அளவு மாறுபடும். இதுபோன்ற ஒரு மூன்று நான்கு அமைப்புகளை ஒன்றோடு ஒன்று பிணைத்து, நாம்‌ நம் ஸ்மார்ட் ஃபோனை எந்தப் பக்கம் திருப்புகிறோம் என்று கண்டறிகிறார்கள். அரை மில்லிமீட்டர் இடைவெளியே உள்ள சிலிக்கான் அமைப்புகளை, கருவிகளைக் கொண்டு செதுக்க முடியாது என்பதால், கெமிக்கல் எட்சிங் (chemical etching) என்னும் வேதிப்பொருட்களால் சிலிக்கானை அரித்து உருவாக்குகிறார்கள். அந்த ஒட்டுமொத்த செய்முறையுமே தானாக இயங்கும் வகையில் இருப்பதால், கச்சிதமாக இந்த உற்பத்தி நடக்கிறது.

இந்த முடுக்கமானிகள், ஸ்மார்ட் ஃபோன்களில் மட்டுமல்லாது வண்தட்டுகள் (hard disks) இயங்கிக்கொண்டிருக்கும்போது கீழே விழுந்தால் அவற்றின் முனைகளைக்‌ காக்க பயன்படுகின்றன. கீழே விழும் வேகத்தைக் கணித்து, உடனடியாக, தகவல் எழுதும், படிக்கும் முனைகளை நகர்த்தி காந்தத் தட்டுகளும், முனைகளும் சேதம் ஆகாமல் பாதுகாக்கிறது. இதைத்தவிர, கார்களில் விபத்துகளை, மோதல்களை உடனடியாக உணர்ந்து ஏர் பேக்குகளை உடனடியாக விரியச் செய்து உயிர்காக்கிறது.

இந்த மெம்ஸ்களை மின்னணுச் சாதனங்களில் ஒரு சாதனை என்றே சொல்லலாம். இதுபோலவே, சில கேம்கள் விளையாடும் ஜாய்ஸ்டிக்குகளில், சுழற்சிகள் அறியும் திருகுமானிகள் (gyroscopes), காந்தப் புலம் அறியும் மானிகள் (magnetometers) ஆகியவற்றையும் நாலணாவில்‌ நான்கில் ஒரு பங்கு அளவில் கச்சிதமாகச் செய்கிறார்கள். தொடர்ச்சியாக இவை நானோ தொழில்நுட்பத்தோடு கைகோர்க்க இருக்கின்றன. ஆக, எதிர்காலத்தில் இன்னும் சிறிய கருவிகளை நாம் எதிர்பார்க்கலாம். காத்திருங்கள்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com