உருகிய சாக்லேட்டால் உருப்பெற்ற அடுப்பு!

கொஞ்சூண்டு தண்ணீருக்கே இந்தக் கொதி கொதிக்கிறதே, உடம்பில் 70 சதவீத் நீர் உள்ள நம்மை இது உயிரோடு வேகவைத்துவிடாதா என்பது முதல் கேள்வி.

நீங்கள் பாக்கெட்டில் வைத்திருந்த சாக்லெட் உருகிவிட்டதென்றால் என்ன செய்வீர்கள்? வெயில் கொடுமையை திட்டிவிட்டு, ஒன்று தூக்கி எறிவீர்கள் அல்லது திரும்ப வீட்டு ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிடுவீர்கள். ஆனால், ஒரு சாக்லெட் உருகுதல், ஒரு சமையலறைச் சாதனம் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். அந்தச் சாதனம், மைக்ரோவேவ் அவன் (ஓவன்).

ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர், டிவியில் வருகிற சமையல் நிகழ்ச்சிகளில் இது ஒரு முக்கியமான அங்கமாக இருந்தது. திருவிழாவில் விற்கிற முறுக்கு பிழிகிற இயந்திரத்தை, வாங்காவிட்டாலும் பே என்று பார்த்துவிட்டு வருகிற பழக்கம் இருப்பதால், வீட்டில் ஓவன் வாங்கும் எண்ணமே இல்லாவிட்டாலும், மைக்ரோவேவ் ஓவன் சமையல் தீவிரமாகப் பார்க்கப்பட்டது. பெண்கள் பத்திரிகைகளில் இலவச இணைப்பாகப் புத்தகங்கள்கூட கொடுக்கப்பட்டன. ஆனால், இந்த ஓவன்களின் பின்புலத்தில், கொஞ்சம் போரும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால், போரடிக்காமல் பார்த்துவிடலாம்.

முதல் உலகப் போர் முடிந்து இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், தகவல் தொடர்பும், மின்னணுவியலும் ஏகத்துக்கும் வளர்ந்துவிட்டிருந்தன. கம்பிவழித் தகவல் தொடர்பு என்பதைத்தாண்டி, கம்பியில்லாத் தகவல் தொடர்பு நோக்கி நாளொரு டவரும், பொழுதொரு ரேடியோவுமாகப் பாயத் தொடங்கியிருந்த காலம் அது. இதுதவிர, போர் விமானங்களையும், கப்பல் போக்குவரத்து போன்றவற்றையும் கண்காணிக்க, ரேடியோ அலைவரிசையில் இயங்கும் ரேடார்கள் அதிகம் புழங்கிய காலம். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் எல்லா கல்லூரி ஆய்வகங்களிலும், ஏதேனும் ஒரு மூலையில் ரேடாரை வைத்து ஏதேனும் ஒரு ஆய்வு செய்துகொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட ஆய்வுகளில், பல பேர் கவனித்துச் சொன்ன விஷயம், ரேடார்களின் அருகில் வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், அளவுக்கு மீறி சூடாகின்றன என்பதுதான்.

1945-ல், அமெரிக்கப் பொறியாளரான பெர்சி ஸ்பென்சர், இப்படி ஒரு ரேடாரின் அருகில் வேலை செய்யும்போதுதான், தன் பாக்கெட்டில் இருந்த சாக்லேட், பாக்கெட்டுக்குள்ளேயே உருகிப்போயிருந்ததைக் கவனிக்கிறார். பின், மக்காச் சோள விதைகளை அந்த விளைவு மூலம் பொறித்துப் பார்க்கிறார். ஆக, பாப்கார்ன்தான் மைக்ரோவேவ் மூலம் சமைக்கப்பட்ட முதல் உணவுப் பொருள். பின்னர், ஒரு டீ போடும் பாத்திரத்துக்குள் முட்டையை வைத்து, அதைச் சமைத்துப் பார்க்க முற்படுகையில், அந்த முட்டை வெடித்து அவரது உதவியாளரின் முகத்தில் பட்டுச் சிதறுகிறது. அவருக்கு முன்பே பல பேர் இதுபோன்ற விளைவுகளைச் சொல்லியிருந்தாலும், பெர்சிதான் அதை ஆராய முற்பட்டு, ஏன் இதை உணவுப் பொருட்களை சூடாக்கப் பயன்படுத்தக் கூடாது என்று யோசிக்கிறார். அவருடைய சாதனம் சந்தையில் முதலிடம் பிடிக்காவிட்டாலும், இந்த யோசனை வேறு வகையில் சக்கைப்போடு போடுகிறது. முதலில், இங்கு என்ன மாதிரியான விளைவுகள் நடக்கின்றன என்று பார்த்துவிடலாம்.

நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் அனைத்தும் அணுக்களாலும், மூலக்கூறுகளாலும் ஆனதுதானே. சில மூலக்கூறுகள், தம்முள் இருக்கும் அணுக்களில் எந்தவிதமான மின்னேற்றமும் ஆகாதவாறு இருக்கும். சில மூலக்கூறுகளில், வெளியே பார்க்க மின்னேற்றம் இல்லாத மாதிரி இருந்தாலும், அவற்றுக்குள் பனிப்போர் நடப்பதைப்போல ஒரு மெல்லிய மின்னேற்றம் இருக்கும். ஒரு அணு நேர் மின்னேற்றம் பெற்றது என்றால், மற்றொன்று எதிர் மின்னேற்றம் பெற்றது. பேசாமல் இருக்கும் இவை, வெளியில் இருந்து ஏதேனும் ஒரு ஆற்றல் மூலம் கிடைத்தால் அதிரத் தொடங்கும். அந்த அதிர்வு, அதை பிற மூலக்கூறுகளோடு உரச வைக்கும். அந்த உராய்வில் வெப்பம் உருவாகும். அந்த ஆற்றல் மூலமாகச் செயல்பட, மின்காந்த அலைமாலையில் அகச்சிவப்புக் கதிர்கள் (infra red rays), நுண்ணலைகள் (microwaves), ரேடியோ அலைகள் (radio waves) ஆகிய மூன்றும் ஒத்துவரும். மீதமிருப்பவை, பொருட்களின் உள்ளே புகுந்து ஓடிவிடும். அந்த அலைகளும் தொடர்ச்சியாக இல்லாமல், மத்தினால் தயிர் கடைவதுபோல் திசையும், செறிவும் மாறிக்கொண்டே இருந்தால், அந்த அதிர்வுகள் இன்னும் பலமாகி, இன்னும் வெப்பம் அதிகமாகும். இப்படி ஒரு மின்சாரத்தைக் கடத்தாப் பொருள், மின்காந்த அலைகளால் வெப்பமடைதலை dielectric heating என்பார்கள். அப்படி மின்காந்த அலைகளால் அதிர்ந்து வெப்பமாகிற ஒரு பொருள், நம் எல்லா உணவிலும் இருக்கிறது. அதுதான் நீர்.

நீரில் இருக்கும் ஆக்ஸிஜன் லேசான எதிர் மின்னேற்றத்தையும், ஹைட்ரஜன் லேசான நேர் மின்னேற்றத்தையும் பெற்றிருக்கும். காரணம், இரண்டும் கூட்டணி வைக்கும்போது பங்கிட்டுக்கொண்ட எலக்ட்ரான்கள், ஆக்ஸிஜனுக்கு ஆதரவை வலுவாகக் கொடுத்து அதனை எதிர் மின்னேற்றம் பெறச் செய்துவிடும். இதனால், மின்காந்த அலைகள் பாய்கையில் சுழன்று அதிரத் தொடங்கி, அதனால் உராய்வு ஏற்பட்டு வெப்பமடையும். மைக்ரோவேவ் சமையல் பெரும்பாலும், நீரால் அல்லது பொருட்களில் உள்ள ஈரப்பதத்தால் நிகழ்கிறது. இதன் மிகப்பெரிய நன்மையே, உணவு சமைப்பதற்குத் தேவையான வெப்பம் உணவிலேயே உருவாகிறது. அதனால், வெப்பத்தை ஒரு இடத்தில் உருவாக்கி அதனை உணவுக்குக் கடத்தி என ஆற்றலை மிச்சம் பிடிக்கிறது. வேகவைத்தல், சூடுபடுத்துதல், எளிதில் உருகும் பொருட்களை உருக்குதல் போன்றவற்றைச் செய்ய இது மிகச்சிறந்த ஒரு சாதனம். கண்ணாடி, மண்பாத்திரங்கள் இவையெல்லாம் நுண்ணலைகளை தனக்குள்ளே அனுமதிப்பவை. அதனால் அவற்றை ஓவனுக்குள் வைத்துச் சமைக்க முடிகிறது.

ஓவன் பயன்படுத்தும்போது சொல்லப்படும் மிகப்பெரிய எச்சரிக்கை, எக்காரணம் கொண்டும் உலோகப் பொருட்களை உள்ளே வைக்காதீர்கள் என்பதுதான். அவை நுண்ணலைகளை உள்ளே அனுமதிக்காது என்ற காரணத்தால், அவனுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி பிரதிபலிக்கவைத்து, சிலநேரம் சினிமாக்களில் ஹீரோ அறிமுகம் ஆகும்போது காலடியில் பறக்கும் தீப்பொறிபோல, உள்ளே நெருப்புப் பொறி பறக்கும். உணவு அதீதமாகச் சூடாகி, புகையத் தொடங்கலாம். மிகக் குறைந்த நேரத்துக்கு, அதாவது பத்துப் பதினைந்து நொடிகளுக்கு அலுமினியம் தாள் சுற்றிய உணவுகளை சூடுபடுத்தலாம் என்று போட்டிருப்பார்கள். ஆனால், அதிலும் ஜாக்கிரதையாக வைக்க வேண்டும்.

அதெல்லாம் சரி. உள்ளே இந்த நுண்ணலைகள் எப்படி உருவாகின்றன எனப் பார்க்க வேண்டாமா? அதற்கு மேக்னட்ரான் (magnetron) என தனி கருவி இருக்கிறது. மேட்னட்ரான் ஏகப்பட்ட அளவு, வடிவங்களில் வந்தாலும், அதிகம் பயன்பட்டது கேவிட்டி மேக்னட்ரான் (cavity magnetron) என்பதுதான். ஜெய்சங்கரின் கௌபாய் படத்து ரிவால்வர் பேரல்போல இருக்கும். மையத்தில் இருக்கும் கம்பிக்கு மின்சாரத்தின் நேர் முனையத்தையும், சுற்றி இருக்கும் பேரலுக்கு எதிர் முனையத்தையும் இணைப்பு கொடுத்திருப்பார்கள். இதற்குச் செங்குத்தாக ஒரு காந்தமோ அல்லது மின்காந்தமோ இருக்கும். இயங்கும்போது, மையத்தில் இருந்து வெளிப்படும் எலக்ட்ரான்கள், இந்தப் பேரல்களின் குழிவால் ஈர்க்கப்பட்டு நகரும். ஆனால், குறுக்கிடும் காந்தப்புலத்தால் பாதை மாற்றப்பட்டு, திரிசங்கு சொர்க்கம் கதையாகத் திணறும். அப்படி அதிரும்போது, அந்த அதிர்வெண் நுண்ணலைகளின் கணக்கில் வருவதால் நுண்ணலை வெளிப்படும். இதனை ஒரு கம்பி வேலியால் பாதுகாக்கப்பட்ட கூண்டுக்குள் செலுத்தி சமையலைச் சாத்தியமாக்குகிறார்கள்.

சரி. இந்த இடத்தில் நியாயமாக இரண்டு கேள்விகள் வர வேண்டும். கொஞ்சூண்டு தண்ணீருக்கே இந்தக் கொதி கொதிக்கிறதே, உடம்பில் 70 சதவீத் நீர் உள்ள நம்மை இது உயிரோடு வேகவைத்துவிடாதா என்பது முதல் கேள்வி. அவ்வளவு ஆற்றல் இல்லையென்றாலும், தொடர்ச்சியான தாக்குதலால் ரத்தம் ஓட்டம் பெறாத கண்ணின் சில பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி, பின்னாளில் கண்புரை நோய் வர அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், எல்லா ஓவன்களிலும், கதவு திறக்கப்பட்டால் உடனடியாகச் செயல்பாட்டை நிறுத்தும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருப்பதால் ஆபத்தில்லை.

அடுத்த கேள்வி, நுண்ணலைகள் இப்படிச் சூடாக்கும் எனில், அதே நுண்ணலைகளைக் கொண்டுதானே கைப்பேசிகளும் இயங்குகின்றன; அவற்றால் உடல்நலத்துக்குப் பாதிப்பு இல்லையா என்பதுதான். ஆனால், கைப்பேசிகள் தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் அலைவரிசை மிக மிகக் குறைந்த அதிர்வெண் கொண்டது. கொஞ்சம் பாந்தமான நுண்ணலையென்று வைத்துக்கொள்ளுங்களேன். அதை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் எந்த வம்பிலாவது மாட்டிக்கொண்டு மண்டை காய்வதை ஒப்பிட்டால், அது இயங்கும் நுண்ணலையால் ஏற்படும் மண்டைக் காய்ச்சால் எல்லாம் அற்பத்திலும் அற்பமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com