காதுக்குள்ளே ரசமட்டம்..

உடலின் பிரத்தியேக ரசமட்டம் நம் காதுக்குள் இருக்கிறது. அதுதான் முக்கியமான சென்சார். அந்த சென்சார் தரும் உள்ளீட்டை, பார்வை மற்றும் தசைகளின் நிலை இவற்றோடு கோர்த்துப்பார்த்து மூளை புரிந்துகொள்கிறது.

கொத்தனார்கள் வீடு கட்டும் பணியில் இருக்கும்போது கவனித்திருக்கிறீர்களா. சுவர்கள் நேராகக் கட்டுப்படுகிறதா என்று ஊசல் குண்டு ஒன்றை கயிற்றில் கட்டிவத்து தொங்கவிட்டுப் பார்ப்பார்கள். கயிறு சுவற்றை விட்டு தள்ளி நின்றால், சுவர் கோணலாக இருக்கிறது என்று அர்த்தம்தானே. அதேபோல், தரையைப் பூசும்போது, ரசமட்டம் வைத்துப் பார்ப்பார்கள் அல்லவா? ரசமட்டத்தின் காற்றுக்குமிழி குறிப்பிட்ட இரு கோடுகளுக்குள் இருந்தால் தரை சமதளமாக இருக்கிறது. தேவைப்படும் இடங்களில் நீரோட்டத்துக்காக வாட்டம் பார்க்கவும் ரசமட்டம் வைத்துப் பார்ப்பார்கள். ஒரு வீட்டுக்கே அதன் சமதள, செங்குத்துப் பரிமாணங்கள் முக்கியமாக இருக்கும்போது, உடலுக்கு அதன் நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறதல்லவா?

நீங்கள் நிற்கிறீர்கள். தரைக்கு செங்குத்தாக நிற்கிறீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரிகிறது? கண்ணால் பார்க்கிறீர்கள், சரி. ஆனால், பார்வை என்பது ஒரு புல்தடுக்கி பயில்வான். அதை ஏய்ப்பது சுலபம். மேலும், பிறவியிலேயே பார்வையின்றிப் பிறப்பவர்கள், எதைக்கொண்டு தாங்கள் நிற்கிறோம் என்பதை உணர்கிறார்கள். நீங்கள் மல்லாந்து படுத்திருக்கிறீர்கள் அல்லது ஒருக்களித்துப் படுத்திருக்கிறீர்கள் என்று எப்படி உணர்கிறீர்கள். பார்வை, அந்தப் புலன் உள்ளீடுகளின் ஒரு பகுதிதான். அதைத்தவிர, ஏகப்பட்ட தரவுகள் மூளைக்கு அளிக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் தொகுத்துத்தான், மூளை ‘ஓ நான் ஒருக்களிச்சு படுத்திருக்கேனா’ என்று முடிவுக்கு வருகிறது.

இந்தப் புலன் உணர்வை equilibrioreception என்கிறார்கள். உடல் எந்த வாட்டத்தில் இருக்கிறது என்பதைக் கொண்டு சமநிலைப் படுத்திக்கொள்வது. ஐம்புலன், ஆறறிவு மேட்டரெல்லாம் கொஞ்சம் பழசுதான். நியாயப்படி பார்த்தால் மேற்சொன்னது, வெப்பத்தை உணர்தல் இதையெல்லாம் தனித்தனியே சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனாலும், ஆறாவது அறிவே கிடையாது என்று யாரையேனும் திட்டும்போது தனி கிக் கிடைக்கிறது. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். நாம் விஷயத்துக்கு வருவோம்.

கண்பார்வை, தசைகளின் இறுக்கம் அல்லது தளர்வு நிலை இதைத்தவிர, உடலின் பிரத்தியேக ரசமட்டம் நம் காதுக்குள் இருக்கிறது. அதுதான் முக்கியமான சென்சார். அந்த சென்சார் தரும் உள்ளீட்டை, பார்வை மற்றும் தசைகளின் நிலை இவற்றோடு கோர்த்துப்பார்த்து மூளை புரிந்துகொள்கிறது. காதுக்குள் இருக்கும் அந்த அமைப்பை vestibular system என்று சொல்கிறார்கள். முக்கியக் கண்காணிப்புகளை இந்த வெஸ்டிபுலார் சிஸ்டம் மேற்கொள்கிறது. ஒன்று, நம் தலையின் வாட்டம்; மற்றொன்று, நாம் நகர்கிற வேகம். உள்ளுக்குள்ளே ஸ்பீடோமீட்டரும் இருக்கிறது. அடிப்படை இயற்பியலை வைத்துதான் உடல் இந்த இரண்டையும் அளக்கிறது. ஆனால் எப்படி அந்த இயற்பியலை, உயிரியலாக ஒரு நரம்புச் சமிக்ஞையாக மாற்றுகிறது என்பதுதான் விந்தை.

காதின் உட்புறத்தில் நத்தைக் கூடு மாதிரி ஒரு சிறிய எலும்பு இருக்கும். அதன் பெயர் காக்லியா (cochlea). இதில் பிரச்னை எனில், எல்லோரும் காது கேக்கலியா? என்பார்கள். இதுதான் ஒலியை நரம்புகள் மூலம் மூளைக்கு அனுப்புகிறது. அந்த எலும்போடு சேர்ந்து மூன்று அரைவட்ட எலும்புகள் (semicircular canals) இருக்கும். ஒன்றுக்கொன்று தொன்னூறு டிகிரி செங்குத்தாக இருக்கிற இந்த எலும்புகள், தலையின் அசைவுகளை கண்காணிக்கின்றன. முக்கியமான மூன்று தளத்து அசைவுகள் உண்டு. மேலும் கீழுமாக, ஆம் என்று சொல்லுவதுபோல் அசைதல்; இல்லை என்று இடவலமாக அசைதல்; சின்னக்குழந்தையிடம் விளையாடும்போது தோள்புறம் தலையைச் சாய்ந்த்துக்கொள்கிறோமே அதுமாதிரி. ஆக, இடமும் வலமும், மேலும் கீழும், தோள்புறம் சாய்தல் ஆகிய மூன்று தளத்து அசைவுகளையும் இதுதான் கவனிக்கிறது.

அந்தக் குழாயின் உள்ளே எண்டோலிம்ஃப் (endolymph) என்று ஒரு திரவம் இருக்கும். அந்த அரைவட்டத்தின் ஒரு பக்கம் ஆம்ப்யுல்லா (ampulla) என்னும் லேசாய் வீங்கிய ஒரு அமைப்பு உண்டு. அந்த அமைப்பில் க்ரிஸ்டே (cristae) என்று, ஒரு திரவத்தை இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் அனுப்பாத செக்வால்வு போன்ற அமைப்பு உண்டு. க்ரிஸ்டேவில் நுண்ணிய கீனோசீலியம் (kinocelium) என்னும் முடிகளும் அதனுடன் சேர்ந்த நரம்புகளும் உண்டு. தலையை ஏதேனும் ஒரு பக்கம் அசைக்கும்போது, உள்ளே இருக்கும் திரவம் நகர ஆரம்பிக்க கொஞ்சம் நேரமாகும். பஸ் சட்டென்று முன்னே நகரும்போது, நம்மைப் பின்புறமாகத் தள்ளுகிறது அல்லவா? அது மாதிரி, தலையை நகர்த்தும்போது அந்தத் திரவம் முதலில் எதிர்ப்பக்கம் நகர்ந்து முடிகளை அசைக்கும். அது நரம்புகளைத் தூண்டி, தலை நகருது என்று மூளைக்குச் சொல்லிவிடும். தலை அசைதல் நிற்கும்போது, ஓடுகிற பஸ் சட்டென்று பிரேக் அடித்து நின்றால் நம்மை முன்பக்கம் தள்ளுமல்லவா? அதுமாதிரி, எண்டோலிம்ஃப் இப்போது எதிர்ப்பக்கம் நகரும். இப்படித்தான் மூன்று அரைவட்டக் குழாய் வழியாகவும் தலை உருளல் நிகழ்வு மூளைக்குப் போகிறது.

இந்த அரை வட்டக் குழாய் தவிர, அட்ரிக்கிள் (utricle) சாக்யூல் (saccule) என்று அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், அவை கொஞ்சம் வேறு மாதிரி. அதே நரம்பு, அதேபோல் மேலே முடிகள் உண்டு. ஆனால், முடிகள் மெலே க்யூபுலா (cupula) என்னும் ஜெல் போன்ற பொருள் உண்டு. அதன்மேல் சுண்ணாம்பும் புரதமும் கலந்த படிகங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். அதன்பெயர் ஓட்டகோனியா (otoconia). பேரெல்லாம் பேஸ்து அடிக்கிற மாதிரி இருக்கிறதா? அந்த ஓட்டகோனியா படிகங்கள் கொஞ்சம் கனமானவை. ஈர்ப்பின் காரணமாக அவை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவிலான விசையை அந்த முடிகள் மீது செலுத்தும். ஏதேனும் ஒரு பக்கம் சாயும்போதோ அல்லது நகரும்போதோ, அது செலுத்தும் விசை மாறும். அந்த விசையின் அளவு கீழிருக்கும் முடிகள் வழியே நரம்புகளுக்குச் செல்லும். ரோலர் கோஸ்டரில் மேலிருந்து கீழே இறங்கும்போது ஜிவ்வென்று இருக்கிறதல்லவா? அந்த ஜிவ்வுக்குக் காரணம், இந்த ஓட்டகோனியப் படிகங்கள் அனுப்பும் தகவல்தான்.

இந்தத் தகவலை,  நரம்புகள் தரும் தகவலோடு உடல் ஒப்பிட்டுப் பார்க்கிறது. கழுத்தின் முன்பக்கத் தசைகள் இறுக்கமாக இருந்து, மீதி தசைகள் சகஜமாக இருந்தால், ஆசாமி மோட்டுவளையைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறான். கழுத்துத் தசையும் நார்மல் எனில், ஆசாமி மல்லாந்து படுத்துவிட்டான் என்று புரிந்துகொள்ளும்.

தொடர்ச்சியாக ரங்கராட்டினத்தில் சுற்றி இறங்கியவுடன் லேசான தடுமாற்றம் இருக்கிறதல்லவா? காரணம், எண்டோலிம்ஃப் திரவமும் ஓட்டகோனிய படிகங்களும் பழைய நிலைக்கு வந்திருக்காது. விண்வெளி வீரர்களுக்கு இது பெரும் சவால். ஈர்ப்பு இல்லாதபோது இந்தப் படிகங்கள் தன் பணியை ஒழுங்காகச் செய்யமுடியாது. மேலும், விண்வெளியின் மல்லாந்து கிடத்தலுக்கும், நிற்றலுக்கும், கண்களும் அரைவட்டக் கோளங்களும் தரும் உள்ளீடுகள் மூளையைக் குழப்பும். ஏன் விண்வெளிக்கெல்லாம் போவானேன். நடுக்கடலில் கப்பல் போகும்போது, முதல்முறை கப்பலில் பயணிப்பவர்கள் சந்திக்கும் சவால் இதுதான். அரைவட்டக் கோளங்களும், ஓட்டகோனியப் படிகங்களும் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகும். அதனால் தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படும்.

இந்த அமைப்பை நாம் நடை பழகும்போது, சைக்கிள் ஓட்டக் கற்கும்போது, நீந்தும்போது என்று புதிதாக ஒரு செயல் செய்யும்போது பழக்கப்படுத்துகிறோம். பின்னர் மூளை சகஜமாகச் செயல்படத் தொடங்குகிறது. இதுதான், கையை விட்டுச் சைக்கிள் ஓட்டுகிற லாகவத்தைத் தருகிறது. இந்த அமைப்பில் வரும் நரம்பியல் சிக்கல்கள், உடல் எந்தவாக்கில் இருக்கிறது என்பதைக் குழப்பிவிடும். போதையின் தள்ளாட்டத்துக்குக் காரணம், எண்டோலிம்ஃப் திரவத்துக்கும், சாராயம் கலந்த ரத்தத்துக்கும் உள்ள அடர்த்தி மாறுபாடுகள் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். சரக்கு உள்ளே போனவுடன் ஏற்படும் தள்ளாட்டம், அடுத்தநாள் காலை ஹாங்ஓவரின் தள்ளாட்டம் இரண்டுக்குமே அடர்த்தி மாறுபாடுகள்தான் காரணம்.

தடுமாறி விழப்போகும்போது சட்டென்று எதையாவது பற்றிக்கொள்ளவோ, அல்லது கையைக் காலை விரித்து பேலன்ஸ் செய்துகொண்டு நின்று அசடு வழியவோ, இந்தச் சமநிலை உணரும் அமைப்பின் பங்களிப்பு அவசியம். அடுத்தமுறை, குப்புற விழப்போய் சமாளித்து நிமிரும்போது, காதுக்கும் கொஞ்சம் நன்றி சொல்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com