கறை நல்லது - மைசில் இருக்க பயமேன்!

ஒரு சுவாரசியம் என்னவெனில், மைசில் ஆகுதல் என்பது நம் செரிமானத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது.

பட்டுப் போன்ற மென்மையான சருமம். பளிங்கு முகம், சிகப்பழகு என்று பெண்களுக்கும்; தேய்க்கும்போதே, பாக்டீரியா, வைரஸெல்லாம் பைபாஸ் ரோட்டில் அடிபட்ட தவளைபோல் ஆகி செத்துவிடுவதுபோல, ஆண்களுக்கும் சோப்பு விளம்பரம் செய்கிறார்கள். வரலாற்றுக் கணக்குப்படி, சுமார் நாலாயிரம் ஆண்டுகளாக சோப்புகள் நம்மோடு பயணிக்கின்றன. பண்டைய ரோமானிய எழுத்தாளர்களின் குறிப்புகளில், சோப்பு தயாரித்தல் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

முதலில் சோப் என்பது என்ன? சோப் என்பது நீண்ட மூலக்கூறுகளை உடைய கொழுப்பு அமிலங்களின் உப்பு. ஆரம்பத்தில், சோப்புகளை மிருகங்களின் கொழுப்புகளை, சாம்பலுடன் சேர்த்து வினைபுரியவைத்து தயாரித்தார்கள். கொழுப்பும், அல்கலை (alkali) எனப்படும் காரத்தன்மை (காரமென்றால் மிளகாய் காரமில்லை; இது வேதியியல் காரம்) கொண்ட பொருளும் சோப்பு செய்ய தேவையான பொருட்கள்.

தாவரக் கொழுப்பு அல்லது மிருகக் கொழுப்பு இரண்டையும் காரத்தோடு வினைபுரியவைத்தால் சோப்பும், க்ளிசரினும் (glycerin) கிடைக்கும். இந்த வினைக்குப் பெயரே சோப்பாக்குதல் (saponification) வினைதான். பயன்படுத்தும் காரத்தைப் பொறுத்தும், பயன்படுத்தும் கொழுப்பைப் பொறுத்தும் சோப்பாகுதல் வினை மாறுபடும். திட வடிவிலான சோப்புகளில் சோடியமும், திரவ சோப் அல்லது மென்மையான சோப்களில் பொட்டாசியமும் இருக்கும்.

சோப்பைவிட சோப் செயல்படும் முறை சுவாரசியமானது. அதற்கு முதலில் அழுக்கு என்றால் என்ன என்று புரிய வேண்டும். நல்ல குலோப் ஜாமூன் ஒன்றை தின்றபின், விரலில் இருக்கும் பிசுபிசுப்பு வெறுமனே நீரால் கழுவினால் போய்விடும். காரணம், சர்க்கரையை நீர் கரைத்து எடுத்துக்கொண்டு போய்விடும். அங்கு சிக்கலே இல்லை. ஜீராவுக்கு யாரும் சோப் போட்டு கை கழுவுவதில்லை. ஆனால், இருட்டுக் கடை அல்வாவை, உள்ளங்கை தோல் உரியும்வரை நக்கியபின்னும் பிசுபிசுப்பு போவதில்லையே, அது ஏன்?

காரணம். அந்த பிசுபிசுப்பை நனைத்து தன்னோடு கரைத்து இழுத்துபோக தண்ணீரால் முடிவதில்லை. அல்வாவில் சேர்க்கப்பட்ட நெய்யோ, டால்டாவோ "நான் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்" என்று உட்கார்ந்துவிடும். அப்படி அழுத்தமாக உட்காந்திருக்கும் அதை ஏலேலோ ஐலசா என்று இழுத்துப்போட வேண்டும். அப்படி இழுத்துப் போடுகிற கயிறுபோல சோப் மூலக்கூறுகள் செயல்படும்.

சோப் மூலக்கூறுகளின் ஒரு பக்கம், நெடிய எண்ணெய்யோடு ஒட்டக்கூடிய கொழுப்பு மூலக்கூறுச் சங்கிலி இருக்கும். இதனை நீரை வெறுக்கும் முனை (hydrophobic end) என்று அழைப்பார்கள். இன்னொரு பக்கம், நீரில் கரையக்கூடிய சோடியம், பொட்டாசியம் போன்ற உலோக அயனிகள் இருக்கும். இதனை நீரை விரும்பும் முனை (hydrophilic end) என்பார்கள். இந்த அமைப்புதான் சோப்பின் பலமே.

நாம் சோப் போடும்போது, அட அழுக்குக்குதான்!! நீரை வெறுக்கும் முனை, எண்ணெய் அல்லது அழுக்கோடு போய் சேர்ந்துகொள்ளும். நீரோடு சேரும் முனை, நீருடன் ஒட்டிக்கொள்ளும். இப்போது, கயிறு போன்ற சோப்பை இழுத்து, நீரால் அதை வெளியேற்ற முடியும். சில சமயங்களில், ஒரு அழுக்கு அல்லது எண்ணெய்த் துளியின் மேல் ஏகப்பட்ட சோப் மூலக்கூறுகள் ஒட்டிக்கொண்டு, மைசில் (micelle) என்று ஒரு அமைப்பை உருவாக்கும்.

மைசில்களில் இருக்கும் எல்லா சோப் மூலக்கூறுகளின் நீரை வெறுக்கும் பகுதி உள்ளேயும்; நீரில் கரைகிற பகுதி வெளியேயும் இருந்து, குறளிவித்தையை வேடிக்கை பார்க்கும் கூட்டம்போல இருக்கும். அப்படி நீரில் கரைகிற பகுதி வெளியே இருப்பதால், நீரால் மொத்தமாக அதைக் கரைத்து வெளியேற்ற முடியும்.

துணிகளில் இருக்கும் அழுக்குகளை நீக்க சோப்புகள் மட்டும் போதாது. அங்கு நூல் இழைகளோடு இன்னும் அழுத்தமாக அழுக்கு பதிந்திருக்கும். அதனை நீக்க இதே மாதிரி இருமுனை அமைப்பு கொண்ட, ஆனால் இன்னும் வலுவான மூலக்கூறுகள் வேண்டும். அவைதான் டிடர்ஜென்ட்கள் (detergents). அல்கைல் பென்சீன் சல்ஃபனேட்கள் (alkyl benzene sulphonates) என்ற வகை வேதி மூலக்கூறுகள். டிடர்ஜென்ட்களில் எண்ணெய்யோடு இணைகிற நீரை வெறுக்கும் பகுதி இன்னும் அதிகத் திறன் கொண்டதாக இருக்கும். அதன் காரணமாக, கடினமான கறைகளை அவற்றால் நீக்க முடியும்.

சோப், டிடர்ஜென்ட் இரண்டையும், அவை நீரின் பரப்பு இழுவிசையை (surface tension) குறைப்பதால், அவை பரப்பு இயங்கிகள் (surfactants) என்று அழைக்கிறார்கள். இந்த இரண்டு அடிப்படை வேதிப்பொருட்களைத் தவிர, மீதமெல்லாம் சோப் மற்றும் டிடர்ஜென்டில் வாசனைப் பொருட்களும், நீரின் கடினத்தன்மையைக் குறைக்கும் பொருட்களும்தான்.

இதில் ஒரு சுவாரசியம் என்னவெனில், மைசில் ஆகுதல் என்பது நம் செரிமானத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. நீரில் கரையாத, ஆனால் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை சிறுகுடலால் நேரடியாக உறிஞ்ச முடியாது. அதனால், கல்லீரல் சுரக்கும் பித்தநீர் அங்கு சோப்புபோல செயல்பட்டு, அந்த வைட்டமின் மூலக்கூறைச் சுற்றி ஒரு மைசில் அமைத்து, சிறுகுடல் அதனை உறிஞ்ச வழி செய்கிறது. சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிகளில், மருந்துச் சுமப்பான்களாக (drug delivery agents) மைசில்களைப் பயன்படுத்துவது பற்றி தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com