புரியாத புதிர்!

நம் மூளை சில நேரங்களில் பிறர் செய்வதை பிரதிபலிக்கிறது. பிறருக்கு நடப்பவற்றை நமக்கே நடப்பதாக எடுத்துக்கொள்கிறது.

நான் பேச நினைப்பதெல்லம் நீ பேச வேண்டும்... நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்… ம்ம்ம் ம்ம் ம்ம். ம்ம்ம் ம்ம் ம்ம். பாலும் பழமும் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் டி.எம்.எஸ்., பி.சுசீலா பாடிய பாடல் (வானொலி ஒலிபரப்புக் குரலில் படித்தால், நீயும் என் தோழன்) அதுபாட்டுக்கு ஓடட்டும். நாம் கொஞ்சம் சேனல் மாற்றுவோம்.

என்வரையில், இப்படி நாம் பேச நினைப்பதெல்லாம் எதிராளி பேசினால், இரண்டு விஷயங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஒன்று, சுவாரசியமே இல்லாமல் தட்டையாக இருக்கும் (தட்டை காரசாரமா நல்லாதானே இருக்கும்னா, பிச்சு பிச்சு…) அல்லது வெட்டு குத்து ஆகிவிடும். ஆனால், நம் மூளை சில நேரங்களில் பிறர் செய்வதை பிரதிபலிக்கிறது. பிறருக்கு நடப்பவற்றை நமக்கே நடப்பதாக எடுத்துக்கொள்கிறது. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். ஒரு உயிர் அல்லது பொருள் துன்பப்படுகையில், அந்தத் துன்பம் நமக்கே நடந்ததாகக் கொள்கிறார்கள். 

ஃபெயில் வீடியோக்கள் என்று எதையோ செய்யப்போய், மக்கள் விழுந்து வைப்பதைக் காட்டுவது போன்ற வீடியோக்களில், அதில் வருபவருக்கு அடிபட்டால் நமக்கும் அதே அடிபட்டாற்போல ஒரு உணர்வு. வலி இருக்காது, ஆனால் அந்தத் துடிப்பு இருக்கிறதல்லவா? ச்த், த்ச் போன்ற எழுத முடியாத சப்தங்கள் எழுப்பி கண்மூடிக்கொள்கிறோம். உடனே, அந்த அடிபட்டவருக்காகப் பரிதாபப்படுகிறோம். 

குழந்தைகளுக்கு உணவூட்டி இருந்தால் கவனித்திருப்பீர்கள். அவர்கள் ஆ காண்பிப்பது, நாம் ஆ சொல்வதால் இல்லை. ஆ சத்தம் வராமல், நாம் வெறுமனே வாயைத் திறந்தாலும் அந்தக் குழந்தைகள் ஆ காட்டும். நாம் செய்வதைப் பார்த்து குழந்தையின் மூளை தானாகச் செய்ய ஆரம்பிக்கிறது. சிறு குழந்தைக்குப் பேச்சு வருவது, இந்தப் போலச் செய்தல் காரணமாகத்தான். நம்மைப் பார்த்து அதைப் போலவே அது வாயை அசைத்துப் பார்க்கிறது. 

கடந்த இருபது ஆண்டுகளாக, நரம்பியல் மற்றும் உளவியலில் நன்றாக போணியாகிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்வுகளை அறிவியல் ரீதியாக பதிவு செய்தவர்கள் ரிசோலேட்டி (Rizzolatti) மற்றும் அவரது குழுவினர். ஒரு குரங்கு அசைகையில், செயல்படுகையில் அதன் மூளையில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். அது ஒரு உணவுப் பொருளை எடுக்கையில், மூளையின் எந்தெந்த நியூரான்கள் வேலை செய்கின்றன என்று பதிவு செய்யும்போது, ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பொருளை எடுக்க, அப்போது அந்தக் குரங்கின் மூளையில் பொருளை எடுத்ததற்கான நியூரான்கள் இயங்கின. அப்போதுதான் மூளையில் இப்படி ஒரு இயக்கம் இருப்பதை உணர்ந்தார்கள். 

ஒரு வெள்ளோட்டம் (simulation) போல மூளை அந்தச் செயலை ஓட்டிப்பார்க்கிறது. இப்படி அடுத்தவர்களுக்கு நடப்பதை தமக்குள் நடத்திப்பார்க்கும் இந்த நியூரான்களுக்கு மிர்ரர் நியூரான்கள் என்று பெயர். இந்த மிர்ரர் நியூரான்கள், மூளையின் ஃப்ரன்டல் கார்டெக்ஸ் (frontal cortex) எனப்படும் முன்பக்கக் கதுப்புகளில் அதிகம் இருக்கின்றனவாம். சிறு குரங்குகள், நாம் நாக்கைத் துறுத்தினால் அவையும் நாக்கைத் துறுத்துகின்றன. காரணம், மிர்ரர் நியூரான்கள். மனிதர்களுள், இந்த மிர்ரர் ந்யூரான்கள்தாம் அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. 

இந்த உணர்வுப் பரிமாற்றத்தில், ஆங்கிலத்தில் இரண்டு வகைகள் சொல்கிறார்கள். சிம்பதி (sympathy) மற்றும் எம்பதி (empathy). நறுக்கென்று வித்தியாசம் சொல்ல வேண்டுமெனில், பிரசவ வலியைப் பற்றி ஒரு ஆணால் சிம்பதிதான் காண்பிக்க முடியும். ஆனால், ஏற்கெனவே தாயான ஒரு பெண்ணால்தான் அதைப்பற்றி எம்பதி காண்பிக்க முடியும். சிம்பதி வெறும் கஷ்டத்தை அங்கீகரிப்பது. எம்பதி என்பது அவர்கள் நிலையில் இருந்து புரிந்துகொள்வது. 

இந்த மிர்ரர் நியூரான்கள்தான் எம்பதிக்கு காரணமானவை. அவைதாம், அடுத்தவருக்கு நடப்பதை தமக்கு நடப்பதாக நினைக்கச்செய்து, அதைப் புரிந்துகொள்ள வைப்பது. கருணை, அக்கறை போன்றவற்றுக்கும், வாய் அசைவை கவனித்து மொழி பேசக் கற்றலுக்கும் இந்த மிர்ரர் நியூரான்கள்தான் அடிப்படை. இருபது வருடங்கள் ஆகியும் இதன் இயக்கத்தை, செயல்முறையை நம்மால் இன்னும் முழுதாகப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இன்னும் என்ன ஆச்சரியங்களை அடக்கிவைத்திருக்கின்றன என்றும் தெரியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com