வயர்லெஸ் சார்ஜிங்

கேட்க மிகவும் எளிமையாகத் தோன்றலாம். இவ்வளவு எளிதென்றால், எல்லா இடத்துக்கும் இந்நேரம் வந்திருக்க வேண்டுமே. ஏன் நம்மையெல்லாம் ஒயரும் கையுமாக அலைய விட வேண்டும்‌?

சுமார் ஆறேழு வருடங்களுக்கு‌ முன்னர் திருமண விழாக்களில் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். தடுக்கித் தலைக்குப்புற விழவைக்கும் வகையில் வீடியோ எடுப்பவர் தன் தோள்பட்டையோடு ஒரு ப்ளக் பாயின்ட்டோடு போய்க்கொண்டிருப்பார். “கால எடுத்துக்கோங்க, வயர்” என்று நாம் எல்லோருமே நகரவைக்கப்பட்டிருப்போம். இன்று நாம் எல்லோருமே அப்படி‌ ஒரு நிலையில்தான் இருக்கிறோம்.

ஊருக்குப் போவதென்றால், எடுத்துவைக்க வேண்டிய பொருட்கள் பட்டியலில் முதலில் நினைவுக்கு வருவது சார்ஜர்கள்தான். மொபைல், டேப்லெட், கிண்டில், ப்ளூடூத் ஹெட்ஃபோன் என சகலமும் பேட்டரிமயம். பயன்படுத்தும் சொகுசு கண்ணை மறைக்க, நாமும் மின்னணுச் சாதனங்களாக வாங்கிக் குவிக்கிறோம். தற்போது நிலைமை ஓரளவு பரவாயில்லை. முன்னெல்லாம் ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு வகை சார்ஜர் பின். மாட்டுக்கு ஒரு கையெழுத்தா என்று கேட்பதுபோல, தட்டை பின், பெரிய பின், சின்ன பின், ஆண்ட்ராய்ட் பின், சாம்சங் பின் என்றெல்லாம் வீடு முழுக்க லாலி லாலி என்று ஒயர்கள் தொங்கும். இப்போது, மீதியெல்லாம் ஓரளவு ஒழிந்து, சார்ஜர் இரண்டொழிய வேறில்லை என்று ஆண்ட்ராய்ட், ஐஃபோன் என்று நிலைக்கு வந்தாகிவிட்டோம்.

முன்னெல்லாம், புதிதாக ஒருவருவடைய வீட்டில் நுழைந்தால், “பாத்ரூம் எங்கிருக்கிறது” என்று முதலில் கேட்போம். இப்போது ப்ளக் பாயின்ட்டும் வைஃபை பாஸ்வேர்டும் கேட்கிறோம். ஒரு உளவியல் வாசித்துக்கொண்டிருக்கையில், இந்த மனநிலைக்கு plug point anxiety என்று அழகாக ஒரு சொல்லாடல் வைத்திருந்தார்கள். நம்‌ பவர் பேங்குகளில் நான்கு யூ.எஸ்.பி. போர்ட்டுகள் இருக்கின்றன. ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடத்து ப்ளக் பாயின்ட்டுகள் படும் பாடு சொல்லி மாளாது, மூச்சடைத்துத் தவிக்கும். என்னதான் கைய கொண்டு போகலாம் என்று ஆனாலும், பாதிநேரம் சுவரோடு சாய்ந்தமேனிக்குதான் இருக்கிறோம்‌. இந்த சார்ஜிங் வயர்லெஸ்ஸாக செய்ய முடியுமா? முடியும். முடியும் என்றால் எப்படி?

இந்த வயர்லெஸ் சார்ஜிங் என்பது புதிதில்லை. பார்க்கப்போனால், 1990-களிலேயே இதை மின்சாரத்தில் இயங்கும் பல் துலக்கும் பிரஷ்ஷில் பயன்படுத்திவிட்டார்கள். இப்போது பெரும்பான்மையான ட்ரிம்மர்கள், வயரில்லா சார்ஜிங்கில்தான் இயங்குகின்றன.

இதன் அடிப்படை ஒன்றுதான், அது மின்காந்தத் தூண்டல். ஒரு கம்பிச்சுருளைச் சுற்றி இருக்கும் காந்தப்புலம் மாறிக்கொண்டே இருக்கையில், அந்தக் கம்பிச்சுருளில் மின்னோட்டம் உண்டாகும். மின்னாக்கிகள் எனப்படும் ஜெனரேட்டர்கள் இயங்குவதற்கு இதுவே அடிப்படை. ஏதேனும் ஒரு விசையால் ஜெனரேட்டரின் அச்சை சுழலவைக்கும்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வயரில்லா சார்ஜிங் நடக்க வேண்டுமெனில், அதற்கு இரண்டு தேவைகள். ஒன்று, சார்ஜ் ஏற வேண்டிய கருவிக்குள் ஒரு கம்பிச்சுருள். மற்றொன்று, மின்சாரம் கொடுக்கப்பட்ட சார்ஜ் ஏற்றும் கருவிக்குள் உள்ள கம்பிச்சுருள்.

அது ஏன் கம்பிச்சுருள்? வெறுமனே நீளமா கம்பி மாதிரி வைத்துக்கொள்ளக் கூடாதா? சுருள்தான் வசதி. ஏனெனில், அதிகபட்ச மின்தூண்டல் கம்பிச்சுருளில்தான் கிடைக்கும். இப்போது சார்ஜ் ஏற்றும் கருவிக்குள் பாயும் மின்சாரத்தின் அளவு மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அது சிக்கல் இல்லை. காரணம், வீடுகளில் நாம் பயன்படுத்தும் மாறுதிசை மின்னோட்டம் என்பது ஒரு நொடிக்கு அறுபது முறை திசை மாறுகிறது. அதாவது, நம் வீட்டு விளக்குகள் எல்லாமே நொடிக்கு அறுபது முறை அணைந்து அணைந்து எரிகின்றன. அதிவேகத்தில் நடப்பதால் நம் கண்களுக்கு அவை புலனாவதில்லை. இப்போது சார்ஜ் ஏற்றும் கருவிக்கு மாறுதிசை மின்னோட்டத்தைக் கொடுத்துவிட்டால், அதன் கம்பிச்சுருளில் உருவாகும் காந்தப்புலம் மாறிக்கொண்டே இருக்கும். இதன்மேல், சார்ஜ் ஏற்ற வேண்டிய கருவியை வைத்தால் அதனுள்‌ இருக்கும் கம்பிச்சுருளில் காந்தப்புல மாற்றத்தால் மின்சாரம் தூண்டப்பட்டு பேட்டரி சார்ஜ் ஏறும்.

கேட்க மிகவும் எளிமையாகத் தோன்றலாம். இவ்வளவு எளிதென்றால், எல்லா இடத்துக்கும் இந்நேரம் வந்திருக்க வேண்டுமே. ஏன் நம்மையெல்லாம் ஒயரும் கையுமாக அலைய விட வேண்டும்‌? காரணம், இந்த முறையின் செயல்திறம் இன்னும் மேம்படுத்தப்படவேண்டி இருக்கிறது. ஒரு ட்ரிம்மரையோ அல்லது பல் துலக்கும் ப்ரஷ்ஷையோ ஒரு நாளைக்கு நாம்‌ பயன்படுத்தும் நேரம் குறைவு. ஆனால், குனிந்த தலை நிமிராமல் எல்லாரும் மொபைலும் கழுத்துமாகத் திரிகிறோம். அதன் பேட்டரிகளுக்கு சார்ஜ் ஏற்ற வேண்டுமெனில், இன்னும் நகாசுகள் நிறைய செய்ய வேண்டும்.

முக்கியமாக, அதன் வீச்சை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இப்போதைக்கு சார்ஜ் ஏற்றும் கருவி மேல் நம் ஃபோனை வைத்துவிட்டு, “வெந்திருச்சா? வேகல” என்று சிறுவயதில் இட்லி சுட்டு விளையாடும் கதையாகப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். வேகமும் குறைவாக இருக்கிறது. காந்தப்புல மாறுதலை எல்லா பக்கமும் சிதறவிடாமல், ஏதேனும் ஒரு பக்கம் மட்டும் குவிக்கையில், கொஞ்சம் வேகமும் திறனும் அதிகமாகும்‌. இன்னும் முன்னேற்றம் கண்டால், பாக்கெட்டில் ஃபோனோடு போய் உட்கார்ந்தால் தன்னால் சார்ஜ் ஆகும்.

நானெல்லாம் அப்படி கருவிகள் வந்தால், வீட்டு ரூமில் எல்லா பக்கமும் பதித்து வைத்துவிடுவேன். நான் அடிக்கிற அடிக்கு, ஜஸ்ட் பாஸ் ஆகிற மாணவன் கணக்காய் சார்ஜ் முப்பது முப்பத்தைந்து சதவிகிதத்தைத் தாண்டுவேனா என்கிறது. அதற்கப்புறம், வேலை செய்யும் இடத்தில் இந்தக் கருவியை வைக்கச்சொல்லி ஒரு உள்ளிருப்புப் போராட்டம் பண்ணலாம் என்று இருக்கிறேன். நீங்களும் இந்தத் தொழில்நுட்பத்துக்குத் தயாராக இருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com