சும்மா அதிருதில்ல..

எதிரொலியை நாம் துல்லியமாக உணர்வதற்கு, பதினேழு மீட்டர் தூரத்தில் ஒரு தடை இருந்தால் உணர முடியும் என்ற அளவில் புரிந்துகொண்டால் போதும்.

ஹே... ஹே... ஹே...

பாட்ஷா... ட்ஷா... ஷா…

மனிதர் உணர்ந்துகொள்ள மனிதக் காதல் அல்ல…

காதல் அல்ல…

தல் அல்ல...

ல் அல்ல...

அல்ல...

உங்கள் யூகம் சரிதான். எதிரொலிகளைப் பற்றிதான். சில காட்சிகளின் ஆழத்தை, செறிவை, எதிரொலிகள் அப்படியே தூக்கிக் கொடுத்துவிடும் அல்லவா?

அடிப்படையில் ஒலி ஒரு அலை. ஒலி பரவுவதற்கு ஏதேனும் ஒரு ஊடகம் வேண்டும். ஊடகத்தின் ஒவ்வொரு புள்ளியும் அதிருகையில் ஒலி கடத்தப்படுகிறது. காற்றில் தோராயமாக மூன்று நொடிகளுக்கு ஒரு கி.மீ என்ற வேகத்தில் (விநாடிக்கு 330 மீட்டர்) காற்றில் பரவுகையில், இடைப்படும் எல்லாப் பொருட்களிலும் பட்டுச் சிதறும். சிதறுகையில், இருவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன.

ஒன்று ஒலி உருவாவதற்கும், வேறு ஒரு பொருள் மீது மோதிச் சிதறுவதற்கும் இடைப்பட்ட நேரம் குறுகலாய் இருந்தால், அந்த ஒலி கொஞ்சம் நீண்டு ஒலிக்கிற மாதிரி தெரியும். இதற்கு ரெவர்பரேஷன் (reverberation) என்று பெயர். கச்சேரிகளில், சிறிய அரங்குகளில் இது இசையில் உயிர்ப்பை ஏற்றுகிறது. பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாமாவை “ஆஹா” என்று கண்மூடி சிலாகிக்க வைக்கிறது. இந்த ரெவர்பரேஷனை ஒலிப்பதிவில் கொண்டுவருவதற்காக, இசைக்கருவிகளோடு சில கருவிகளைப் பொருத்தி ஒலிப்பதிவு செய்கிறார்கள். சில மென்பொருள் சித்துவேலைகள்கூட செய்து இதைக் கொண்டுவருகிறார்கள். ஒரு நல்ல கச்சேரிக்கு ரெவர்பரேஷன் வேண்டும்

இதுவே, சிதறும் ஒலி அலைகள் “சாரி! லேட்டாயிடுச்சு” என்று திரும்ப நம் காதுகளை எட்டினால் அது எதிரொலி. (எக்கோ – Echo). மலைகளில், பள்ளத்தாக்குகளில், கோயில் பிராகாரங்களில் என்று நீண்டிருக்கும் இடங்களில் எதிரொலி கேட்கும். ஸ்ரீரங்கம் கோவிலில் கருடாழ்வாரைச் சேவித்துவிட்டு, தாயார் சந்நதி போகும் வரையில், ஒரு சுவர் முடுக்கில் ரெங்கா என்று கத்தினால் ‘ங்கா’ என்று எதிரொலி கேட்கும். அதை நான் சம்ப்ரதாயமாகவே செய்து வந்திருக்கிறேன்.

மேற்சொன்ன வகை இடங்களில், ஒலி அலைகள் நீள நெடுகப் போய் எதிர்ப்பக்கம் தொலைவில் இருக்கும் பொருளைத் தொட்டுவிட்டு திரும்ப வர வேண்டும் அல்லவா? அதனால் ஏற்படும் காலதாமதத்தால், இது அசல், இது எதிரொலி என்று ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பதுபோல், காது சொல்லிவிடும். நொடிக்கு 330 மீட்டர் பயணிக்கும் ஒலி, மோதித் திரும்பி வருகையில் ஒரு நொடியில் பத்தில் ஒரு பங்கு நேரமானால், அதை எதிரொலி என்று காதுகள் கண்டுபிடித்துவிடும். சுமார் 17 மீட்டர் தூரத்தில் உள்ள பொருளில் போய் மோதித் திரும்புவதற்கு, ஒலிக்கு நொடியில் பத்தில் ஒரு மடங்கு நேரம் ஆகும். உக்காந்து கணக்கு போட்டு காட்டிக்கொண்டிருந்தால் ‘ப்ச்’ என்று மூடிவிடுவீர்கள். அதனால், எதிரொலியை நாம் துல்லியமாக உணர்வதற்கு, பதினேழு மீட்டர் தூரத்தில் ஒரு தடை இருந்தால் உணர முடியும் என்ற அளவில் புரிந்துகொண்டால் போதும்.

கிரேக்கப் புராணங்களில் ஒரு கதை உண்டு. நம்மூர் இந்திரன்போல, கிரேக்கப் புராணங்களில் ஸ்யூஸ் (Zeus). சக பெண் கடவுளர்கள், அரைக் கடவுள்கள் (semi and demi gods), நம்முடைய ரம்பா, ஊர்வசி, மேனகா போன்ற அவர்கள் புராணத்தின் nymph எனப்படும் பெண்டிர், மனித குலப் பெண்கள் என சல்லாபத்துக்கு யாரையுமே விட்டுவைக்காத ஆள். The entire Greek mythology came because Zeus cannot keep... என்று அந்தப் புராண ஆய்வாளர்கள் விரசமாக ஒரு வசனம் சொல்வார்கள். அந்த ஸ்யூஸுக்கு இந்த நிம்ப்கள் என்னும் அரம்பையர்கள் மீது தனி கண்.

ஒருமுறை, ஸ்யூஸ் இப்படி ஜலக்ரீடைக்காக வந்திருக்க, ஸ்யூஸின் மனைவி ஹீராவுக்கு சேதி போய்விடுகிறது. “அந்தாளை கையும் களவுமா பிடிக்கறேன், அது யார்றி என் சக்களத்தி” என்று அள்ளி முடிந்துகொண்டு வரும் ஹீராவிடம் இருந்து ஸ்யூஸை காப்பாற்ற, அந்த அரம்பையர்களுள் ஒருத்தியான எக்கோ (echo) முடிவு செய்கிறாள். வேகமாகப் போய்க்கொண்டிருக்கும் ஹீராவைத் தடுத்து, “நேத்தி என்ன சமையல், வம்சம் சீரியல் பாத்தீங்களா? இந்த நெக்லஸ் எங்க வாங்குனீங்க? ரெண்டாயிரத்துக்கு உங்க பக்கமெல்லாம் சில்லறை கிடைக்குதா?” என்று கேள்வி கேட்டு திசை திருப்பப் பார்க்கிறாள்.

எப்படியோ எக்கோவின் எண்ணத்தைப் புரிந்துகொள்கிற ஹீரா, அவளுக்குப் பேச்சு வராமல் போகும்படியும், பிறர் சொல்வதன் கடைசி வார்த்தையை மட்டும் திருப்பிச் சொல்பவளாகவும் சபிக்கிறாள். அன்றிலிருந்து, ஒரு காட்டில் தனிமையில் சுற்றித்திரியும் எக்கோ, ஒருநாள் வேட்டையாட வந்திருக்கும் பேரழகனான நார்சிஸை (Narcissus) கண்டு, அவன்மேல் காதல் கொள்கிறாள். தன் அழகை ஓயாமல் தானே வியக்கும் நார்சிஸ், அவன்  மேல்கொண்ட காதலை அவனிடம் சொல்ல முடியாமலேயே தவித்து மருகி, கடைசியில் எலும்பெல்லாம் கல்லாகிச் சமைகிறாள் எக்கோ. ஆனால், அவளின் வாக்கியத்தின் கடைப்பகுதியைத் திருப்பிச் சொல்லும் திறன் மட்டும் அப்படியே காட்டில் இருக்கிறது என்று புராணக் கதை சொல்கிறது.

சோனார் (SONAR) எனப்படும் கடல்படுகை ஆய்வில் இந்த எதிரொலி பயன்படுகிறது. SOund Navigation And Ranging என்பதன் சுருக்கமே சோனார். நீரில், மீயொலிகளைப் (ultrasonic waves) பாய்ச்சி, அது கடல்படுகையிலோ, அல்லது நீர்மூழ்கிகளிலோ மோதித் திரும்புகிற நேரத்தையும், நீரில் ஒலி பாயும் வேகத்தையும் கொண்டு, கீழே இவ்வளவு தூரத்தில் தரை இருக்கிறது அல்லது நீர்மூழ்கிகளின் இருப்பிடம் இது எனத் தெரிந்துகொள்ள முடிகிறது.

இன்னொரு முக்கியமான உபயோகம், கருவுற்றிருக்கும் பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் படம் பிடித்தல். வேறு எந்த சோதனை என்றாலும், கதிரியக்கம் அல்லது வேதிப்பொருட்களால் பாதிப்பு உண்டாகும். ஆனால், நம்மால் கேட்க முடியாத ஒலியலைகளை வயிற்றின் தோல் வழியாக உட்செலுத்தி, அந்த ஒலியலையின் எதிரொலியைக் கொண்டு ஒரு முப்பரிமாண படம் மூலம், குழந்தையின் அசைவைக் காண முடியும்.

வவ்வால்கள் இந்த எதிரொலியை நம்பித்தான் பிழைப்பையே ஓட்டுகின்றன. என்னதான் கண்கள் இருந்தாலும், அவற்றின் கண்பார்வை என்னவோ “தம்பி! லாரி போயிருச்சா? போலாமா?” என்று என்னத்த கண்ணையா கேட்பதுபோல்தான். படுசுமார். ஆனால், சின்னச் சின்ன கீச்சுகளாக அதிக அதிர்வெழ ஒலிகளை வெளியிட்டு, அதன்மூலம், “கம்பம் இருக்காப்ல இருக்கு, லெஃப்ட்ல வாங்கிக்கோ; முட்டுச்சந்து போல! அபவுட் டர்ன்” என்று, பறப்பதற்கு எதிரொலியையே பயன்படுத்துகிறது.

இதைப்போலவே, பார்வையற்றோரில் சிலர் வெறும் க்ளிக் க்ளிக் என்று வாயினால் ஒலியெழுப்பி, அதன் எதிரொலியைக் கொண்டு நகர்கிறார்கள். இந்த முறைக்கு, echolocation என்று பெயர். சில வருடங்களுக்கு முன் வந்த தாண்டவம், படத்தில் ஒரு பார்வையற்ற உளவுத்துறை அதிகாரியாக வரும் விக்ரம், இந்த எதிரொலியின் மூலம் வழிகாணும் முறையைப் பயன்படுத்துவதாகக் காட்டியிருப்பார்கள்.

பெரிய பெரிய அரங்குகளில் ரெவர்பரேஷன் தேவை. எனினும், எதிரொலி என்பது இசையனுபவத்தைக் கெடுக்கும். பாவயாமி கோபால பாலம் என்றவுடன், கொஞ்சம் இடைவெளிவிட்டு ‘லம்’ மட்டும் கேட்டால் எப்படி இருக்கும். கடுப்பாகும் அல்லவா? அதனால்தான், அரங்கங்களில், திரையரங்குகளில் என்று எங்கெல்லாம் எதிரொலி தேவையில்லையோ, அங்கெல்லாம் கட்டுமானத்தில் சில அமைப்புகளைச் செய்திருப்பார்கள். சுவர்களை அம்மி கொத்தியதுபோல் சொரசொரப்பாக வைத்திருப்பார்கள். அரங்கில் திரைச்சீலைகள் நிறைய தொங்கவிட்டிப்பார்கள். தரை முழுக்க நல்ல கனமாகக் கம்பளம் விரித்திருப்பார்கள். இருக்கைகள் பெரும்பாலும் குஷன் வைத்ததாக இருக்கும். இது எல்லாமே ஒலியை அதிகம் சிதறாமல் கவருகின்ற முறை.

பொதுவாகவே, பொருட்கள் தம்மீது பட்டுத் தெறிக்கும் ஒலியின் ஒரு பகுதியை உறிஞ்சிவிடுபவை. அதுவும், சொரசொரப்பான பரப்பு எனில், ஒலியை அதிகம் சிதறடிக்காமல் உறிஞ்சிவிடும். அதுதான் இசையோ, படத்தின் வசனமோ துல்லியமாகக் கேட்கும். இல்லையெனில், குறுக்கே குறுக்கே பேசும் ஆளைப்போல், எதிரொலி தொணதொணத்துக்கொண்டே இருக்கும். ஆக, அந்த அம்மி கொத்திய சுவர் இல்லாவிடில், அடானாவில் அவர் காட்டுகிற ஜாலமெல்லாம் தெளிவாகக் கேட்காது.

அடுத்த முறை வேறு ஒரு தகவலுடன் சந்திக்கிறேன்...

கிறேன்…

றேன்…

ன்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com