மலேரியாவும் சுத்து மிட்டாயும்..!

ப்ளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் (Plasmodium falsiparum) என்ற ஒட்டுண்ணி ஏற்படுத்தக்கூடிய மலேரியா, மரணம் வரை இட்டுச் செல்லக்கூடியது. மீதமிருக்கும் மலேரியா ஒட்டுண்ணிகள் அவ்வளவு ஆபத்தில்லை என்றாலும்

சிறுவயதில் சுத்து மிட்டாய் வாங்கிச் சாப்பிட்ட அனுபவம் இருக்கிறதா? மிட்டாயின் நடுவே இரண்டு துளைகள் இருக்கும். அதில் நூல் கோர்த்து (பெரும்பாலும் பச்சை நிற நூல்) முடிச்சுபோட்டு விற்பார்கள். வாங்கிய உடனே கடித்துச் சாப்பிடும் ஆட்களுக்கு அது சரிப்பட்டு படாது. இருபுறமும் கயிற்றைப் பிடித்துக்கொண்டு நடுவில் இருக்கும் மிட்டாயை சுற்றுவார்கள். சுற்றச் சுற்ற நூல் இறுகும். பின்னர் நூலைப் பிடித்து இழுக்கையில் மிட்டாய் எதிர்ப்புறமாகச் சுற்ற ஆரம்பிக்கும். முறுக்கிக்கொண்டதெல்லாம் இயல்பாகி, இப்போது எதிர்திசையில் முறுக்கிக்கொள்ளும். பின்னர் மீண்டும் எதிர்ப்புறம். நாம் கயிற்றை இழுத்து இழுத்து நாள் முழுதும் விளையாடிக்கொண்டே இருக்கலாம்.

சுத்து மிட்டாய், பந்துக்குள் ஐஸ்கிரீம்.. இது எல்லாமே ஒரு வகையில் நம் வேட்டை மனப்பான்மைக்குத் தீனி போடுபவை. வேட்டை விலங்குகளில் சில விலங்குகள் தன் இரையோடு விளையாடும். பின்னரே அதைப் புசிக்கும். அல்லது புசித்துவிட்டு விளையாடும். கால்பந்தாட்டத்தின் தொடக்க வரலாற்றைக் கேட்டால் பகீரென்று இருக்கும். ஆனால் விஷயம் அதில்லை. இந்த விளையாட்டுப் பொருளின் அடிப்படை, மலேரியாவுக்கான ரத்தப் பரிசோதனை செய்யப் பயன்படும் ஒரு கருவியை வடிவமைக்க பயன்பட்டிருக்கிறது.

மலேரியா! அந்தப் பெயருக்கு கெட்ட காற்று என்று பொருள். ப்ளாஸ்போடியம் என்ற வகையைச் சேர்ந்த ஒட்டுண்ணிகளால் ஏற்படக்கூடிய நோய். மொத்தம் ஐந்து வகை ப்ளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகள் இருக்கின்றன. அதில் ப்ளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் (Plasmodium falsiparum) என்ற ஒட்டுண்ணி ஏற்படுத்தக்கூடிய மலேரியா, மரணம் வரை இட்டுச் செல்லக்கூடியது. மீதமிருக்கும் மலேரியா ஒட்டுண்ணிகள் அவ்வளவு ஆபத்தில்லை என்றாலும், உடலுக்குப் பெருஞ்சேதம் விளைவிப்பவை. அந்த ஒட்டுண்ணி பெண் அனாஃபிலஸ் கொசுக்களால் பரவுகிறது.

உலகின் மக்கள்தொகையில் பாதி பேர் மலேரியாவால் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் sub saharan africa என்று அழைக்கப்படக்கூடிய மத்திய மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள். அதிலும் கருவுற்ற பெண்களும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும் லட்சக்கணக்கில் பாதிப்படைகிறார்கள். மருத்துவ முறைகள் இருக்கின்றன. ஆனாலும் சரியான நேரத்தில் நோயறிதல் (diagnosis) செய்ய முடியாததால் இறப்புகள் அதிகமாகின்றன. காரணம், மலேரியாவுக்காகச் செய்யப்படும் ரத்தப் சோதனைக்கான போதுமான உள்கட்டமைப்புகள் கிடையாது.

ரத்தத்தின் உட்பொருட்களை, சென்ட்ரிஃப்யூஜ் (centrifuge) என்ற மையவிலக்கு விசை இயந்திரத்தால், எடைவாரியாகப் பிரித்து அதை நுண்ணோக்கியால் சோதித்து உறுதிப்படுத்துவார்கள். அந்த இயந்திரம், நிமிடத்துக்குப் பத்தாயிரம் தடவைக்கு மேல் சுழலும். சுழலும்போது, ரத்தத்தின் எடை அதிகமான கூறுகளான சிவப்பணுக்கள், ரத்தத் திட்டுகள் எல்லாம் அடியில் தங்கிவிடும். நீர்மமாய் இருக்கும் ப்ளாஸ்மா மேலே இருக்கும். மலேரியாவைப் பரப்பும் ஒட்டுண்ணி இரண்டுக்கும் இடையில் இருக்கும். ஆனால், அந்த இயந்திரம் இயங்க மின்சாரம் வேண்டும். மலேரியா என்பது பொருளாதாரத்தால் பின்னடைந்த நாடுகளின் குறிகாட்டி நோய். பாதி நாடுகளில் ஊர்ப்புறங்களில் மின்சாரம் கிடையாது. அப்படியெனில் சென்ட்ரிஃப்யூஜ்கள் வேலைக்கு ஆகாது. அங்குதான் நாம் முதலில் பார்த்த சுத்து மிட்டாய்களின் இயற்பியல் அடிப்படை உதவிக்குப் பயன்படுகிறது.

ஸ்டான்ஃபோர்டு பல்ல்கலைக் கழகத்தின், உயிர்ப்பொறியியல் துறைப் பேராசிரியரான மனு ப்ரகாஷ், பேப்பர்ஃபூஜ் என்ற எளிய, செலவில்லாத, ரத்தப் பரிசோதனைக்காக ரத்தத்தை எடைவாரியாகப் பிரிக்கும் கருவியை வடிவமைத்திருக்கிறார். ஒருமுறை உகாண்டா நாட்டில் இருக்கும்போது, ஒரு கிராமத்தின் சுகாதார மையத்தில் சென்ட்ரிஃப்யூஜ் இயந்திரத்தை மின்சார வசதி இல்லாத காரணத்தால் கதவு திறக்காமல் முட்டுக் கொடுக்கப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறார். இப்படிப்பட்ட நிலை கிட்டத்தட்ட ஆப்பிரிக்கா முழுவதும் நிலவுவதால், இதற்குக் குறைந்த செலவில் தீர்வு காணத்தான் பேப்பர்ஃப்யூஜை வடிவமைக்கிறார்.

ஒருநாள், ஏதோ விளையாட்டாக ஒரு பட்டனுக்குள் நூல் நுழைத்து சுற்றி விளையாடிக்கொண்டிருந்தபோது, மனு ப்ரகாஷுக்குப் பொறி தட்டியிருக்கிறது. உடனேயே, ஒரு அதிவேக காணொளிக் கருவி மூலம் அந்த பட்டன் சுற்றுவதைப் படம் பிடிக்கிறார். அது நிமிடத்துக்கு 1,25,000 முறை சுழல்கிறது. அந்த வேகம் ஒரு நவீன, மின்சாரத்தால் இயங்கும் சென்ட்ரிஃபூஜ் கருவியின் இயங்கு வேகத்தைவிட அதிகம். உடனே, எம்.ஐ.டி. கல்லூரியின் மூன்று பொறியியல் மாணவர்களை இந்தப் பட்டன் சுழலும் விளையாட்டுப் பொருளை இயற்பியல் மற்றும் கணித ரீதியாக ஆராய பணியில் அமர்த்துகிறார். அந்த ஆய்வு முடிவுகள் துல்லியமாக இருக்கவே, சற்றே தடிமனான தாள், வலுவான அதே நேரம் மெல்லிய கயிறு, ரத்த மாதிரியை வைக்க சிறு U வடிவ குழாய், கயிற்றின் இரு பக்கமும் கைப்பிடி என்று எளிமையான பொருட்களால் இந்த பேப்பர்ஃபூஜை வடிவமைத்திருக்கிறார்.

நீரிழிவு நோய்க்கு ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதிக்க விரல்முனையில் ரத்தம் எடுப்பதுபோல் எடுத்து, அந்த U வடிவக் குழாயில் வைத்து அந்த பேப்பர்ஃப்யூஜை, சுத்து மிட்டாய் சுற்றுவதுபோல் சுற்றினால், ஒன்றரை நிமிடத்தில் ரத்தத்தை, அதன் கூறுகளின் எடைவாரியாகப் பிரித்துவிடுகிறது. அதன்பின், நுண்ணோக்கியின் கீழ் வைத்து அந்த ரத்தத்தைச் சோதித்தால், மலேரியா இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துவிடும். (frugal science என்ற பெயரில் காகிதத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு நுண்ணோக்கியை மனு ப்ரகஷே வடிவமைத்திருக்கிறார் என்பது உபரித் தகவல்).

20 சென்ட் (இந்திய மதிப்பில் சுமார் 14 ரூபாய்) மட்டுமே செலவாகும் இந்த பேப்பர்ஃப்யூஜ், வளரும் நாடுகளின் மருத்துவம் மற்றும் நோயறிதல் முறைகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து, பலரின் உயிரைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com