அண்ணலின் அடிச்சுவட்டில்...13

காந்தியின் மூத்த மகனான ஹரிலால் கெட்ட பழக்கங்களின் உருவமாக இருந்ததால் அவரை காந்தி தன்னோடு வைத்திருக்கவில்லை.
அண்ணலின் அடிச்சுவட்டில்...13

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள் 

காந்தியும் ஹரிலாலும் 
காந்தியின் மூத்த மகனான ஹரிலால் கெட்ட பழக்கங்களின் உருவமாக இருந்ததால் அவரை காந்தி தன்னோடு வைத்திருக்கவில்லை. ஆனாலும் அவரது இறுதிக் காலம் வரை பல இடங்களிலும் ஹரிலால் காந்தியைச் சந்திப்பதுண்டு. ஆனால் கல்யாணம் ஒரு தடவை கூட அவரைச் சந்தித்ததில்லை. அவரைப் பற்றி நிறைய ஆஸ்ரம நண்பர்கள் மூலமாக அறிந்திருக்கிறார்.

ஹரிலால் வரும் போதெல்லாம் காந்தி அவரிடம் தனது வெறுப்பைக் காட்டாமல் அறிவுரை கூறுவார்.  "புகை, மது போன்ற கெட்ட பழக்கங்களை விட்டு விட்டாயா'' எனக் கேட்பார். "இனி நன்றாக இரு'' என அறிவுரை கூறுவார். அவர் எல்லாவற்றிற்கும் சரியென்று தலையாட்டி விட்டு மீண்டும் அந்தப் பழக்க, வழக்கங்களிலேயே மூழ்கிக் கொண்டிருந்தார். காந்தி அவரைச் சந்திக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அவரை நல்வழிப்படுத்தி தன்னோடு வீட்டில் சேர்த்துக் கொள்ள முயற்சித்தார். ஆனால் ஹரிலால் அவரது தீய பழக்கங்களிலிருந்து வெளிவர இயலவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஹரிலால் முஸ்லீமாக மதம் மாறினார்.

1936 செப்டம்பர் 27 ஆம் தேதி கஸ்தூர்பா காந்தி தன் மகன் ஹரிலாலுக்கு எழுதிய மிகவும் உருக்கமான கடிதம். 

அன்புள்ள ஹரிலால், 
இன்று எந்த மாதிரி அவமானத்திற்குரிய செய்தி செய்தித்தாளில் வரப்போகிறதோ என்ற அச்சம் மிகுந்த நடுக்கத்துடனேயே ஒவ்வொரு நாள் காலையும் நான் எழுந்து கொள்கிறேன். சில நேரங்களில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. "நீ எங்கே இருக்கிறாய், எங்கே தூங்குகிறாய், என்ன சாப்பிடுகிறாய்' என்று.

உண்மையில் சாப்பிடக் கூடாதவற்றை நீ சாப்பிடுகிறாயென்றும் அதைப் போன்ற உனது மற்ற துர் எண்ணங்களும் எனக்கு தூக்கமற்ற இரவுகளைக் கொடுத்து விட்டன. அடிக்கடி உன்னைச் சந்திக்கலாம் போல் தோன்றுகிறது. ஆனால் உன்னை எங்கே காண்பதென எனக்குத் தெரியவில்லை. நீ ஏன் உனது பழைய மதத்தை மாற்றினாயென்று எனக்குத் தெரியவில்லை. அது உனது விருப்பம். ஆனால் ஒன்றுமறியாத அப்பாவி மக்களையும் உன்னைப் போல் மாறச் சொல்லுகிறாயென நான் கேள்விப்படுகிறேன். உன்னுடைய எல்லைகளை ஏன் நீ உணர மறுக்கிறாய்? மதத்தைப் பற்றி நீ என்ன தெரிந்து வைத்திருக்கிறாய்? உன்னுடைய மனநிலைக்கு நீ என்ன தீர்மானிக்க இயலும்? நீ உன்னுடைய தந்தையின் மகனென்ற காரணத்தினாலேயே மக்கள் உனக்கு கட்டுப்படுபவர்களாக இருக்கிறார்கள்.  மதத்தைப் போதிக்க நீ தகுந்தவனில்லை. வரும் காலங்களில் நீ இப்படியே போனால் எல்லோராலும் ஒரே மாதிரி நீ விலக்கி வைக்கப் படுவாய். இதையெல்லாம் மனதில் நிறுத்தி ஆலோசித்துப் பார். உன்னுடைய முட்டாள்தனத்திலிருந்து மீண்டு வா. உன்னுடைய மதமாற்றத்தை நான் விரும்பவில்லை.

ஆனால் உன்னை வளர்த்துக் கொள்ள நீயே தீர்மானித்திருப்பதாக உன்னுடைய அறிக்கையை நான் பார்த்தபோது,  நீ ஒரு கண்ணியமான வாழ்க்கையை இனியாவது தொடங்கப் போகலாமென்ற நம்பிக்கையில் உன் மதமாற்றத்தில் கூட நான் ரகசியமாக மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அந்த நம்பிக்கையும் சுக்கு நூறாகி விட்டது.
-மிகுந்த விரக்தியில் கஸ்தூர்பா காந்தி இந்தக் கடிதத்தை எழுதி இருந்தார்.

தனது வாழ்க்கையில் இரண்டே இரண்டு நபர்களை புரிய வைத்து அவர்களிடம் தனது நியாயமான கருத்தை ஏற்றுக் கொள்ள வைப்பதிலுள்ள தனது இயலாமையையே வாழ்க்கையின் மிகப் பெரிய துயரமாக மகாத்மா காந்தி ஒரு தடவை ஒத்துக் கொண்டிருக்கிறார். 

அவர்களில் ஒருவர் முகமது அலி ஜின்னா. அவரது கோரிக்கையான இஸ்லாமியர்களுக்கென்று தனி நாடென்பது, 1947 ஆகஸ்டில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிய  வைத்து ஒருங்கிணைந்த சுதந்திர இந்தியாவென்ற காந்தியின் கனவை நிறைவேறாமல் செய்து விட்டது.  மற்றொருவர் காந்தியின் மூத்த மகனான ஹரிலால் காந்தி. மகாத்மாவின் ரத்தத்தில் வாழ்ந்து காந்தியின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராய் அலைந்து கேளிக்கையில் மூழ்கி வீழ்ந்தவர். 

காந்தி மதுவை வெறுத்தார். 
ஹரிலால் மதுவை விரும்பினார். 
காந்தி எளிய வாழ்க்கை வாழ்ந்தார். 
ஹரிலால் கேளிக்கை வாழ்க்கை வாழ்ந்தார். 
அயல் நாட்டு பொருட்களை காந்தி புறக்கணித்தார். 
ஹரிலால் இறக்குமதி செய்யப்பட்ட பிரிட்டீஷ் பொருட்களை விற்பனை செய்தார். 

ஹரிலால் இஸ்லாமியராக மதம் மாறி தன் பெயரை அப்துல்லா என மாற்றிக் கொண்டு காந்திக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார். 

ஹரிலால் பிறந்த போது காந்திக்கு 18 வயது. 1888 செப்டம்பரில் பாரிஸ்டர் பயிற்சி பெறுவதற்காக காந்தி குடும்பத்தை தென் ஆப்ரிக்காவில் விட்டு விட்டு லண்டன் புறப்பட்டபோது ஹரிலால் ஆறு மாதக் குழந்தையாக இருந்தான். ஹரிலாலின் குழந்தைப் பருவம் தந்தை அருகிலில்லாமலேயே அப்போது கழிந்தது.  

காந்தி லண்டனில் வெற்றிகரமாக பாரிஸ்டர் பயிற்சி முடித்து தென் ஆப்ரிக்கா வந்த போது காந்தி நல்ல வருவாயுடன் பொருளாதார வளத்துடன் இருந்தார். சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் காந்தியின் வசதி மிகுந்த வாழ்க்கையினூடே ஹரிலால் வளர்ந்தான். பின் வறுமையை எதிர்த்தும் அரசியல் போராட்டங்களில் தீவிரமாய் ஈடுபட்டும் திடீரென காந்தி மேற்கொண்ட எளிய வாழ்க்கையும் உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகளும் ஆடம்பர வாழ்விற்கு பழகிய ஹரிலாலுக்கு ஒவ்வாமையாய் இருந்தன. காந்தியின் வாழ்வின் திருப்பு முனையின் இரண்டு பக்கங்களிலும் பயணித்தவர் ஹரிலால். அந்த திருப்பு முனையில் ஹரிலால் தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை.  மற்ற மூவரும் காந்தியின் எளிய வாழ்க்கையில் பிறந்தவர்கள். 

ஒரு தடவை காந்திக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் காந்தியிடம் அவரின் பிள்ளைகளில் ஒருவருக்கு இங்கிலாந்தில் கல்வி உதவித் தொகையோடு படிப்பதற்கு வாய்ப்பளிப்பதாக கூறினார். அதற்கு காந்தி "கல்வித் தொகையானது எனது பிள்ளைகளில் ஒருவருக்கா அல்லது தென் ஆப்ரிக்காவிலிருக்கிற இந்திய இனத்தினரில் மிகுந்த தகுதி வாய்ந்த இளைஞருக்கானதா?'' என்றார். உடனே அந்த நண்பர் மிகுந்த தயக்கத்துடன், "அந்த வாய்ப்பானது தகுதி வாய்ந்த இந்திய இளைஞருக்கானது''  என்று கூறினார். உடனே காந்தியடிகள் தகுதி வாய்ந்த வேறு இரண்டு இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை இங்கிலாந்திற்கு படிக்க அனுப்பினார். 

காந்தியின் பிள்ளைகளுக்கு கிடைக்க இருந்த அந்த வாய்ப்பு அவ்வாறு பறிபோனது. கஸ்தூர்பா காந்தி இதைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தார். "எனது பிள்ளைகளை மனிதர்களாக்குவதற்கு முன்னதாகவே உங்களுக்கு அவர்களை சாதுக்களாக்க வேண்டுமென்கிறீர்கள்'' என்றார். ஆனால் காந்தி அவரது குழந்தைகளை ஒரு புதிய இந்தியாவின் மாதிரி மனிதர்களாக உருவாக்க நினைத்தார். 

நாளுக்கு நாள் காந்திக்கும் ஹரிலாலுக்குமான உறவு விரிசலடைந்து கொண்டே வந்தது. ஹரிலாலின் முதல் மனைவி இறந்த பின் ஹரிலால் மறுமணம் செய்ய முயன்ற போது அது காந்திக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. பாலியல் விருப்பங்களை விட்டு விடுவதற்காக வாதிடும் நான் எவ்வாறு அவனது திருப்திக்கு இணங்கி அவனை அந்த வழியில் ஊக்கப்படுத்த முடியும்? எனது விருப்பத்திற்கு மாறாக அவன் மறுமணம் செய்ய வேண்டுமானால், அவனை எனது மகனாக நினைத்துக் கொள்வதை நிறுத்த வேண்டி இருக்கும். காந்திக்கும் ஹரிலாலுக்குமிடையே வாதங்கள் நிறைந்த உறவே எப்போதும் இருந்தது. 

இன்னொரு சம்பவம். ஆஸ்ரமத்தில் கல்யாணத்தின் சக நண்பர்கள் கூறிய நிகழ்வு இது:
காந்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ரயிலில் மும்பையிலிருந்து டெல்லிக்கு கஸ்தூர்பாவோடு சென்று கொண்டிருந்தார். சூரத் நிலையத்தில் ரயில் நின்றபோது அங்கே நிற்கும் கூட்டத்தில் ஹரிலாலை தான் பார்க்க காத்திருப்பேன் என கஸ்தூர்பாவிடமிருந்து ஹரிலாலுக்கு ஒரு செய்தி முன்னதாகவே கிடைக்கிறது. அந்தக் கால கட்டமானது காந்திக்கும் ஹரிலாலுக்குமிடையே பெரும்புயல் வீசிய தருணம்.

சூரத் ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. கஸ்தூர்பா காந்தி பதட்டத்துடன் காத்திருந்தார். காந்தியும் கஸ்தூர்பாவும் ரயிலை விட்டு நிலையத்தில் இறங்கியபோது ஹரிலால் ஓடி வந்து கஸ்தூர்பாவின் காலடியில் விழுந்து வணங்கினான். அம்மாவை ஆரத்தழுவி அரவணைத்தான். கண்ணீர் விட்டு அழுதான். 

அவனது பையிலிருந்து ஓர் ஆரஞ்சை எடுத்து "அம்மா! இது உனக்கு'' என்று கொடுத்தான். 

உடனே திரும்பிய காந்தி  ஹரிலாலைப் பார்த்து  "அப்போ எனக்கு?'' என்று கேட்டார். 

உடனே ஹரிலால் உரத்த குரலுடன் காந்தியைப் பார்த்து "உனக்கு ஒன்றும் கிடையாது. நீ என்ன செய்திருக்கிறாய்?  நீ ஒன்றுமில்லை. நினைவில் வைத்துக் கொள். நீ பெரிய ஆளாக இருக்கிறாயென்றால் அது அம்மாவால்தான். அவள்தான் தியாகங்கள் செய்தாள். எப்போதும் அதை நீ மறக்காதே'' என்றான் மிகுந்த கோபத்துடன். 

ரயில் அந்த நிலையத்திலிருந்து புறப்பட்டபோது எல்லாவற்றையும் தனது மனதிற்குள் ஒரு துளியாய் சுருக்கிக் கொண்டார் மகாத்மா. தனது இருக்கையில் வந்து அமர்ந்த அவர் பின் இருபது நிமிடங்கள் யாரிடமும் எதுவும் பேசாமல் சன்னலையே  பார்த்து கொண்டிருந்தார். அமைதியும் பொறுமையும் அவரை விரைவில் இயல்பிற்கு கொண்டு வந்தது.

இளமையில் தனக்கிருந்த அளவுக்கதிகமான புலன் விருப்பத்திற்காக கடவுள் அப்போது பிறந்த ஹரிலாலை மோசமான மகனாகக் கொடுத்து தன்னை தண்டித்திருக்கிறாரென காந்தி தத்துவார்த்தமாக நம்பினார். 

காந்தியடிகள் கூறிய ஒரு நல்ல கதையினை இங்கு குறிப்பிட வேண்டும்: 
காந்தியடிகளுக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து வந்தது. பிரின்சிபல் கலேல்கர் அதில் மிகுந்த ஆர்வத்திற்குரிய ஒரு சீனக் கதையையும் குறிப்பிட்டிருந்தார். காந்தியடிகளுக்கு அவர் அதை குஜராத்தியில் எழுதி இருக்க காந்தியடிகள் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஹரிஜன் வாசகர்களுக்காகத் தந்திருந்தார்.   

லண்டனில் டாக்டர் வெலிங்டன் கூ பங்கேற்ற பல கூட்டங்களில் ஒன்றில் அவரொரு சீனக் குடும்பத்தைப் பற்றிய ஒரு சுவையான கதையைக் கூறினார். வீட்டில் மூத்த குடும்ப உறுப்பினரே அங்கே குடும்பத் தலைவராகக் கருதப்பட்டார்.  எப்போதெல்லாம் குடும்பத்தில் தவறு நடக்கிறதோ அப்போது அதை தண்டிக்க அந்தக் குடும்பத்தின் பழைய  பாரம்பரியமான ஒரு கம்பை பயன்படுத்தும் உரிமையை குடும்பத் தலைவரே பெற்றவர் ஆவார். ஒரு தடவை 100 வயது தந்தை அவரது 75 வயது மகனின் பின்னால் அந்தக் கம்பால் அடித்த போது மகனின் கண்களில் கண்ணீர் வந்தது. அதுவரை தந்தை அந்த கம்பால் அவரை அடித்தபோதெல்லாம் மகன் இவ்வாறு அழுததில்லை. அதனால் தந்தை அவனிடம் காரணத்தை கேட்டார்.  உடனே மகன் சொன்னான்..  "இதுவரை நீங்கள் என்னை கம்பால் அடித்தபோதெல்லாம் நான் உணர்ந்த உங்கள் கைகளின் வலிமை இப்போது உங்கள் அடியில் இல்லை. உங்களது முதுமை என் மேல் விழுந்த அடியில் தெரிகிறது. உங்கள் உடலின் பலகீனம் என்னை மிகவும் துன்பப்படுத்துகிறது. அதனாலேயே அழுதேன்'' என்றாராம்.  

இந்த கதையோடு வந்த கடிதத்தினை காந்தி படித்துக் கொண்டிருந்தபோது காகா சாப் கலேல்கர் காந்தியின் அருகில் இருந்திருக்கிறார். காந்தி இந்தக் கதையை அவரிடம் பகிர்ந்த போது அவர் மற்றொரு கதையைச் சொல்லி இருக்கிறார். அது அவருக்கு ஒரு தமிழ் நண்பர் கூறிய கதை. ஒருநாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தனது அலுவலகப் பணிக்கு பின் தனது நண்பரோடு வெளியே சென்று விட்டார். அவர் வீட்டிற்கு கால தாமதமாய் சென்ற போது அவரது அம்மா கவலையுடன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தார். அவர் நீதிபதியிடம் "ஏன் இன்று இவ்வளவு கால தாமதம்'' என கண்டிப்புடன் கேட்டுக் கொண்டு கோபத்தில் நீதிபதியின் கன்னத்தில் அறைந்தும் விட்டார். நீதிபதியின் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது. பலரும் அந்தஸ்தான நீதிபதியை அம்மா அடித்து அவமானப்படுத்தியதால் அவர் அழுததாகக்  கருதினார்கள். ஆனால் காரணம் அப்படி இருக்கவில்லை.  அவர் தனது அம்மாவிடம் "அம்மா! நீங்கள் என்னை அடித்ததற்காக நான் அழவில்லை. என்னை அடிப்பது உமது கௌரவத்திற்குரிய முழு உரிமை. நான் அழுதது இப்போது நீங்கள் அடித்த அடியில் உங்கள் கையில் வழக்கமான வலிமையில்லையே என்றுதான்'' என்று கூறினாராம். 

அத்தகைய ஒரு நல்ல பிள்ளையாய் ஹரிலால் இருக்க ஆசைப்பட்ட காந்தியின் வட்டத்தை விட்டு, வெகு தொலைவிலிருந்தார் ஹரிலால். அவரின் மற்ற பிள்ளைகள் காந்தியின் சேவைப் பணியில் உறுதுணையாகவே இருந்தனர். 

காந்தியின் இரண்டாவது புதல்வனான மணிலால் காந்தி, தென் ஆப்ரிக்காவில் டர்பனில் காந்தி ஆரம்பித்த ஃபீனிக்ஸ் ஆஸ்ரமத்தை கவனித்து வந்தார். அங்கிருந்து வந்த ஒரு வார இதழின் ஆசிரியர் பொறுப்பேற்று அதையும் கவனித்து வந்தார். இப்போதும் அவரது குடும்பம் அங்கே ஃபீனிக்ஸ் ஆஸ்ரமத்திலேயே இருக்கிறது.  

காந்தியின் மூன்றாவது மகனான ராம்தாஸ் காந்தி நாக்பூரில் டாடா ஆயில் மில்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்தார். 

நான்காவது மகன்தான் தேவதாஸ் காந்தி. அவர்தான் ராஜாஜியின் புதல்வியை திருமணம் செய்திருக்கிறார். அவர் டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸின் மேனேஜிங் எடிட்டராக இருந்தார்.

(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com