அண்ணலின் அடிச்சுவட்டில்...15

1946 ஆகஸ்ட் 16 அன்று கல்கத்தாவில் நேரடி நடவடிக்கை தினமென (direct  action day) ஜின்னா ஆரம்பித்த ஒரு நிகழ்வினைத் தொடர்ந்து
அண்ணலின் அடிச்சுவட்டில்...15

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
ஒரு சுதந்திரக் கனவு

1946 ஆகஸ்ட் 16 அன்று கல்கத்தாவில் நேரடி நடவடிக்கை தினமென (direct  action day) ஜின்னா ஆரம்பித்த ஒரு நிகழ்வினைத் தொடர்ந்து  இந்துக்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டனர்.  இந்து முஸ்லிம் கலவரம் பல இடங்களில் கொழுந்து விட்டு எரிந்தது.  

இந்த கலவரமான சூழ்நிலையில் 1947 மே 15 ஆம் தேதியன்று காந்தியின் பேத்தி மனு காந்திக்கு அப்பென்டிசிட்டிஸ் அறுவைச்  சிகிச்சை  செய்ய  வேண்டி
இருந்தது.  பீகாரில் பாட்னாவிலுள்ள மருத்துவமனையில் அப்போதைய சிறந்த அறுவைச் சிகிச்சை மருத்துவரான கர்னல் டி.பி.பார்கவாதான் அந்த அறுவைச் சிகிச்சையினைச்  செய்தார்.  அந்த அறுவைச் சிகிச்சையின் போது காந்தியும் உடன் இருந்தார்.  மனு காந்தி குணமடைந்தார்.  சுதந்திரத்திற்கு பின் செப்டம்பர் 9 அன்று காந்தியும் அவரது குழுவினரும் புதுடெல்லி வந்த போது புதிய அரசாங்கம் தனது பணிகளைத் தொடங்கி இருந்தது. அப்போது மனுவுக்கு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவரான பார்கவா, காந்தியைச்  சந்தித்தார். தனக்கு டெல்லி வெலிங்டன் மருத்துவமனையில் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் பணியினை வாங்கித் தர காந்தியிடம் உதவி கோரினார். உடனே காந்தியும் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமாரி அமிர்த் கெüரிடம் அந்தப் பணியை அவருக்கு வழங்கக் கூறினார். உடனே அவர் டெல்லி வெலிங்டன் மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இன்றைய ராம் மனோகர் லோகியா மருத்துவமனையே அன்றைய  வெலிங்டன் மருத்துவமனையாக இருந்தது. 

காந்தியைப் பொருத்தவரை அவர் மிகவும் நல்லவரென்பதால் எதையும் அவர் ஆலோசிக்காமலேயே பரிந்துரைத்து விட்டார். காந்திக்கு அரசாங்க விதிமுறைகள், அரசாங்க நடைமுறைகள் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. காந்தி பார்கவாவை நியமிக்க பரிந்துரைத்ததால் அந்தப் பணிக்காக ஏற்கெனவே காத்திருந்த அவரை விட மூத்த மருத்துவர்களின் மனதில் நிச்சயம் கொஞ்சமாவது வருத்தம் குடி கொண்டிருக்கும். அவர்கள் வருத்தப்படுவார்களென்று காந்தி அறியவே இல்லை. அந்த எண்ணம் அவருக்கு எட்டி இருந்தால் நிச்சயமாக அவரை நியமிக்க பரிந்துரைத்திருக்க மாட்டார். 

காந்தியுடன் சக பணியாளர்களோடு கல்யாணமும் காஷ்மீருக்குப் போனார். முதலில் காந்தி காஷ்மீரில் 15 நாட்களிருக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கே மூன்றே நாட்கள்தான் இருக்க முடிந்தது. அங்குள்ள அழகான பல சுற்றுலாத் தலங்களையும் காந்தி பார்க்க வேண்டுமென நேரு விரும்பினார்.

அதற்காக அவர்கள் புறப்படுவதற்கு முன் காஷ்மீரின் வரைபடத்தையும் கையோடு கொண்டு வந்திருந்தார் நேரு.  பார்க்க  வேண்டிய இடங்களை காந்தியிடம் வரைபடத்தில் சுட்டிக் காட்டினார். ஆனால் காந்தியின் பொழுது போக்கானது வேலை செய்து கொண்டே இருப்பது... அதுவும் மக்களுக்காக சேவை செய்து கொண்டே இருப்பது... அதன் மூலம் எல்லா மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பதேயாகும். அதனால் காந்திக்கு அங்கு எந்த இடத்தைப் பார்ப்பதற்கும் நேரம் அனுமதிக்கவில்லை. அவரோடு சென்ற கல்யாணத்திற்கும் மற்றவர்களுக்கும் காஷ்மீரிலுள்ள அழகான அந்தக் காட்சிகளையும் இடங்களையும் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது. ஆனால் காந்தியின் அயராத சேவைப்பணி அவர்களை அதற்கு அனுமதிக்கவில்லை.

ஆகஸ்ட் - 1 மாலையில் காந்தி குழுவினர் காஷ்மீரை அடைந்தார்கள்.  4 ஆம் தேதி காலை அங்கிருந்து ஜம்முவிற்கு புறப்பட்டனர். அங்கே கிஷோர்லால் சேத்தியின் மாளிகையில் தங்கினர். அங்கே பல்வேறு மக்கள் காந்தியைச் சந்திக்க வந்திருந்தனர். பெரும்பாலானவர்கள் ஷேக் அப்துல்லாவை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுமென காந்தியிடம் தெரிவித்தனர். அதற்கு காந்தி தான் அரசியல் பணியாக அங்கு வரவில்லையெனக் கூறி அந்த விஷயத்தில் தலையிட மறுத்தார். 

காந்தி காஷ்மீருக்குப் புறப்படுவதற்கு முன்பே காஷ்மீரில் தான் எந்தக் கூட்டத்திலும் பேசப் போவதில்லையென கூறி இருந்தார். பக்கத்து கிராமங்களிலிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகளென பல்வேறு மக்கள் காந்தியைத் தரிசிக்க மிகுந்த ஆவலோடு அங்கே குழுமியிருந்தனர். கிஷோர்லால் சேத்தியின் மாளிகைக்குள்ளேயே காந்தி வழிபாட்டினை நடத்த அவர்கள் அனுமதித்திருந்தும் காந்தி வழிபாட்டை வெளி வளாகத்திலேயே நடத்தினார். 

ஜம்முவிலிருந்து ராவல்பிண்டிக்கு பின் மோட்டார் வாகனத்தில் சென்றனர். அங்கிருந்து வாஹாவிற்கு பயணம் தொடர்ந்தது. அங்கே சுமார் 10,000 இந்து அகதிகள் மிகுந்த துயரத்தோடு அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்த முகாமிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏற்கெனவே மிகுந்த பயத்துடன் வெளியேறி இருந்தனர். தாங்கள் மேற்கு பஞ்சாபில் இனியும் இருந்தால் தாங்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படுவோம் அல்லது பலவந்தமாக மத மாற்றம் செய்யப்படுவோமென்ற அச்சமே அதற்கு காரணமாக இருந்தது. 

வங்காளத்தில் கலரவரம் உச்சத்தை எட்டியது. அந்த கலவரத்தை நிறுத்த காந்தி அங்கே சென்றார். அகிம்சை என்ற ஆயுதமே அங்கே அவருக்கு மிகுந்த நம்பிக்கைக்குரியதாக இருந்தது.

1947-இல் நமது நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் கல்கத்தாவில் பெலியாகாட்டா என்கிற இடத்தில் காந்தியோடு கல்யாணம் இருந்து கொண்டிருந்தார். காந்தி அங்கே சென்றதற்கு அங்கே கொழுந்து விட்டெரிந்த இந்து முஸ்லிம் கலவரமே காரணமாக இருந்தது. 

அப்போது காந்தியின் விடாமுயற்சியால் ஓரளவு கலவரக் களம் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. அங்கிருந்து நவகாளியில் பரவிய கலவரத்தை நிறுத்த காந்தி குழு அங்கே சென்றனர். அப்போதுதான் இந்தியாவிற்கு சுதந்திர அறிவிப்பு வந்தது. ஆகஸ்ட் 15 அன்று நள்ளிரவு இந்தியா ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் போவதாகவும் அதில் பங்கேற்க தாங்கள் வர வேண்டுமென்று நேருவும், மவுன்ட் பேட்டனும் காந்திக்கு 13 ஆம் தேதி தகவல் அனுப்பினார்கள். அதற்கு மகாத்மா காந்தி இன்னும் உங்கள் சுதந்திரத்தை விட இங்கே நிகழ வேண்டிய அமைதியே எனக்கு மிகவும் முக்கியமானதென்றும், சுதந்திரத்திற்கு இந்த அமைதியே மிகவும் தேவையானதால் தன்னால் இப்போது வர முடியாதென்றும் மறுத்து விட்டார். இங்கே கலவரம் முழுமையாக நின்று முழு அமைதி வந்த பின்தான் தன்னால் அங்கு வர முடியுமென்றும் கூறி விட்டார். 

காந்தி இல்லாமலேயே அங்கே சுதந்திரக் கொடி ஏறியது. சுதந்திரம் கிடைத்து விட்டது. இனி நாடே சொர்க்க பூமியாகுமென்ற கனவில் நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். 

கல்கத்தாவில் முழு அமைதி உருவான பின் செப்டம்பர் 9 ஆம் தேதிதான் காந்தி டெல்லிக்கு சென்றார். அப்போதோ டெல்லியில் கலவரம் ஆரம்பித்து விட்டது. அகதிகள் முஸ்லிம் மக்களின் கட்டடங்களை ஆக்ரமித்தனர். அதனால் பதட்டம் உருவாகியது. 

டெல்லி ரயில் நிலையத்தில் அதிக கூட்டம் வந்து விடுமெனக் கருதி முந்தைய நிலையத்திலேயே காந்தி தனது பணியாளர்களோடு இறங்கினார். அங்கே அந்தக் காலை நேரத்தில் பட்டேலும் ராஜ்குமாரி அம்ரித் கெளரும் வந்திருந்தனர்.   காந்தி டெல்லி சென்றதும் வழக்கமான பின்தங்கிய மக்கள் தங்கி இருக்கிற பங்கி காலனிக்கே செல்ல எண்ணினார். அங்கே எல்லா இடங்களிலும் அகதிகள் தங்க வைக்கப்பட்டதால் அவரை பிர்லா மாளிகையில் தங்க வேண்டுமென பட்டேல் வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு அவர் பிர்லா மாளிகையில் தங்கினார். 

அப்போது காந்தியே பிரதமராகி இருக்கலாமே என பொதுமக்களில் பலரும் கூற கல்யாணம் கேட்டிருக்கிறார்.
(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com