அண்ணன் அடிச்சுவட்டில்...30

ஓரிரு மாதங்கள் கழித்து எந்த அளவிற்கு வீட்டு வேலை முடிந்திருக்கிறதென ஆசையோடு பார்க்கப் போனார்.
அண்ணன் அடிச்சுவட்டில்...30

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
ஓரிரு மாதங்கள் கழித்து எந்த அளவிற்கு வீட்டு வேலை முடிந்திருக்கிறதென ஆசையோடு பார்க்கப் போனார். அப்போது அங்கே எந்த வேலையும் நடக்கவே இல்லை. அவரிடம் கொடுத்த நிலையிலேயே வீடும் இருந்தது. உடனே ராயப்பேட்டை நெடுஞ்சாலையிலுள்ள அவருடைய அலுவலகத்திற்கு மிகுந்த வருத்தத்துடன் சென்றார் கல்யாணம். ஏழெட்டு தடவை அலைந்தும் அவரைப் பார்க்கவே இயலவில்லை.. "அங்கே போயிருக்கிறார்.. இங்கே போயிருக்கிறார்' என்ற பதிலே வந்தது. தன்னுடைய அலுவலக வேலையோடு கிருஷ்ணமூர்த்தியை தேடிப் பிடிப்பதென அவர் மிகுந்த கடினத்துக்குள்ளாகி இருந்தார். அதன் பின் இவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென தீர்மானித்து, அலுவலகத்திற்கு இரண்டு நாள் விடுப்பு எடுத்தார். மிகுந்த அலைச்சலுக்கு பின் அவரைத் தேடிக் கண்டு பிடித்தார். 
மிகுந்த வருத்தத்துடன் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து "ஆறு மாதத்தில் வீட்டை முடித்து தருவதாக கூறினீர்களே. இன்னும் வேலையை ஆரம்பிக்கவே இல்லையே'' எனக் கேட்டார். அதற்கு அவர், உடனடியாக வேலையை ஆரம்பித்து விடுவதாகக் கூறினார். உடனே கல்யாணம் "நீங்கள் வேலையை ஆரம்பித்த பின்புதான் அலுவலகத்திற்குச் செல்வேன்'' என்றார். 
இரண்டு நாட்களில் கல்யாணத்தின் வீட்டு வளாகத்தில் செங்கற்கள் இறங்கின. மணலும் வந்தது. இரும்புக் கம்பிகளும் இறங்கின. கல்யாணத்தின் மனதில் மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது. இனி கட்டி முடித்து விடுவாரென்ற மிகுந்த நம்பிக்கையுடன் பழைய படி வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். 
மீண்டும் ஒரு வாரம் கழித்து அங்கே எந்த அளவில் வேலை நடந்திருக்கிறதென பார்க்கப் போன போது அங்கே இறக்கிய எந்தப் பொருட்களும் இல்லை.. எந்த வேலையும் நடக்கவும் இல்லை. பின் மிகுந்த ஏமாற்றத்துடன் வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுத்தார். இறுதியில் வேலையைக் கூட விட்டு விட்டார். எல்லோரும் பணத்திற்காக இவ்வளவு அலைகிறார்களே என்று வெறுப்பாகவும் வியப்பாகவும் இருந்தது. ஒப்பந்தக்காரர் திவாலாகி எல்லாப் பணத்தையும் கொண்டு சென்றிருந்தார். 
நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். மிகச் சிறிய அளவிலேயே பணம் கிடைத்தது. பின்புதான் இவர் பலரை ஏமாற்றி இருப்பதும் குறைந்த தரத்தில் பலருக்கும் வீடு கட்டிக் கொடுத்திருப்பதைப் பற்றியும் அறிய முடிந்தது. அவர் ஏமாற்றியவர்களின் வரிசையில் ராஜாஜியுமிருந்தார் என்பது தான் இன்னும் வியப்பிற்குரிய விஷயம். 
ராஜாஜியின் வீடு கல்கி தோட்டத்திற்கு பின்னால் நெüரோஜி சாலையில் இருந்தது. 1959-இல் ராஜாஜி சுதந்திராக் கட்சியைத் தொடங்கினார். அப்போது அவ்வப்போது அவர் அலுவலகத்திற்கு சென்று கல்யாணம் உதவி செய்வார். 1964-இல் கமிஷனர் பணியினை விட்டதும் கல்யாணம் ராஜாஜியிடமே தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். ஏற்கெனவே இஸ்லாமிய நண்பர் ஒருவர் ராஜாஜி வசித்த வீட்டின் சுமார் இரண்டரை கிரவுண்ட் இடத்தை அவருக்கு தானமாகக் கொடுத்திருந்தார். ராஜாஜி எவ்வளவோ வற்புறுத்தி அவருக்குப் பணத்தைக் கொடுத்த போதும் அந்த இஸ்லாமிய நண்பர் பணம் வாங்க மறுத்து விட்டார். அந்த இடத்தில் இதே கிருஷ்ணமூர்த்திதான் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். 
இதையறிந்து கல்யாணமும் ராஜாஜியிடம் சென்று கிருஷ்ணமூர்த்தி குறித்து மிகுந்த வேகத்துடன் புகார் செய்தார். ஆவேசமாக அவரைத் தண்டிக்க வேண்டுமென மிகுந்த சீற்றத்துடன் பேசினார். சபித்தார். அதற்கு ராஜாஜி தத்துவார்த்தமாகப் பேசினார்... 
"நீ இவ்வாறு கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது. "கடவுளின் வேலையை நாம் செய்ய இயலாது. யாரையும் சபிக்க நமக்கு உரிமையில்லை. நீ இவ்வாறு பேசக் கூடாது'' என்று கண்டிப்பாகச் சொன்னார். 
கல்யாணமும் அதை உணர்ந்து நிதானமானார். உடனே ராஜாஜி கல்யாணத்தை அவரதுப் பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றார். "எனக்கும் அவர் அவ்வாறே கட்டித் தந்திருக்கிறார் பார்'' என்று கூறி அங்கிருந்த சுவரின் பெரிய விரிசலைக் காட்டினார். "நான் உன்னைப் போல் ஏதாவது சொல்கிறேனா... அதை அப்படியே விட்டுவிடு'' என்று அறிவுறுத்தினார். கல்யாணத்தின் கஷ்டத்தைப் பார்த்து ஆயிரம் ரூபாயும் தந்தார்.
அப்போது தான் சேமித்து வைத்திருந்த எல்லாப் பணத்தையும் இழந்து மிகுந்த கடினத்துக்குள்ளாகி இருந்தார் கல்யாணம். கல்யாணத்தின் மனைவிக்கு 300 ரூபாய் சம்பளம். அலுவலகத்தில் நிறைய கடன் வேறு வாங்கி இருந்ததால் அந்த கடன் தொகை போக அவருக்கு வெறும் 100 ரூபாய்தான் மாதம் சம்பளமாக வந்தது. அப்போது அவருக்கு முதற் குழந்தை வேறு பிறந்திருந்தது. அவள் பெயர் மாலினி. அவளுக்கு ஆறு மாதமாகி இருந்தது. சாப்பிடுவதற்கு காலணாக் கூட இல்லை. 12 அணாவிற்கு கண்டன்ஸ்டு மில்க் விற்பனைக்கு இருந்தது. அதை வாங்கித்தான் மாலினிக்கு பால் கொடுத்து வந்தார்.
ஹவுசிங் போர்டு தந்த வீட்டின் மற்ற அறைகள் கட்டுவதற்கான அஸ்திவாரத்திற்காக கல்யாணமே ஆறடி குழி தோண்டினார். அவரது மனைவி சரஸ்வதி வேலைக்குப் போயிருப்பார். குழந்தை அழும். அதை எடுத்து வைத்துக் கொண்டு அவருக்கு வேலை பார்க்க முடியாது. அதனால் ஸ்பென்சரில் போய் ஒரு சக்கரம் வைத்த குழந்தை இருக்கை ஒன்றை அறுபது ரூபாய்க்கு வாங்கி அதில் உட்கார வைத்தார். குழந்தை மாலினி அப்பா வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருக்க அவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்படி இரண்டு மாதம் வரைக்கும் தானே வீடு கட்டுவதற்கான அடிப்படை வேலைகளை ஒற்றை மனிதனாய் தனியாகச் செய்தார். யாரையும் வேலைக்கு வைக்கவில்லை. 
அதன் பின் சத்ய நாராயணா சகோதரர்களென்ற கட்டட ஒப்பந்ததாரரை வைத்து வேலைகளை முடித்தார். ஓர் ஆங்கிலேயனின் வீட்டினைப் போன்ற நவ நாகரிக வசதிகளுடன் அந்த வீட்டைக் கட்டினார். 1972-இல் தான் அந்த வீட்டிற்குள் குடி புகுந்தார். அப்போது மிகவும் கஷ்டப்பட்டார். தனது மனைவியின் தாலியைக் கூட விற்று விட்டார். சரஸ்வதி மிகுந்த ஆட்சேபணை தெரிவித்தார். அதற்கு "தாலியிலென்ன இருக்கிறது. அன்பும் மரியாதையும் மனதில்தான் இருக்க வேண்டும். உனக்கு அதே போல் இன்னொரு தாலி பணம் வந்ததும் வாங்கித் தருகிறேன்'' என்று கூறினார் கல்யாணம். ஆனால் கடைசி வரை தாலி வாங்கவே இல்லை. 

கல்யாணத்தின் மனைவி 
கல்யாணத்தின் மனைவி சரஸ்வதி மிகவும் திறமையான உறுதியான பெண்மணி. கருணை மனம் கொண்டவர். அழகும் அறிவும் சேர்ந்திருப்பது அபூர்வமானது. ஆனால் கல்யாணத்தின் மனைவி இரண்டிலும் உயர்நிலையிலிருப்பவர். ஆடை உடுத்துவதில் அவரது மனைவிக்கு நிகர் அவரே. குறையற்ற நேர்த்தியுடன் ஆடை உடுத்துவார். பல தருணங்களில் சரஸ்வதி கடைக்குச் செல்லும்போது பொதுமக்களில் பலர் அவரை நடிகை பத்மினி என நினைத்து அவரிடம் ஆட்டோகிராஃப் கேட்பார்களாம். சிகையலங்காரத்திலிருந்து காலணி அணிவது வரை கல்யாணத்தின் மனைவி சிறப்பு கவனம் செலுத்துவார். அவரது பிளவுûஸ அவரே வடிவமைத்து அதற்கு அவரே சிறப்புப் பெயர்கள் வைப்பார். டிராஃபிக் ஸ்டாப்பர், லைம்லைட் என நிறைய பெயர்களில் அவர் வடிவமைத்திருக்கிறார். 
ஆனால் அவரது இரண்டு புதல்விகளான மாலினி, நளினியென இருவருக்கும் நாகரீகமாக ஆடை உடுத்துவதில் அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், அவரது மனைவி சாதாரண ஆடை உடுத்தினால் கூட அது மிகவும் நாகரீகமாக இருக்கும். கல்யாணத்தின் பெண்களின் அம்மாவாக மட்டுமல்லாமல் அவர்களின் தோழிகளுக்கும் அம்மாவாக அவர் இருந்தார். அவர்களெல்லோரிடமும் மிகவும் நெருக்கமாக மிகுந்த பாசத்துடன் பழகினார். அதனால் அவர்களும் அவரது மனைவியிடம் ஒரு சொந்த அம்மாவைப் போல அறிவுரைகள் கேட்பதோடு தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் தனது சொந்த அம்மாவிடம் காட்டாத மனப்பகிர்வை கல்யாணத்தின் மனைவியிடம் பகிர்ந்து கொண்டனர்.
இரண்டு பெண்களின் கல்லூரிப் பருவத்தில் அவர்களின் நிறை குறைகளை ஒரு காகிதத்தில் எழுதி அவர்களைப் படிக்க வைத்தார். பின் அவர்கள் சமுதாயத்தில் நல்ல நிலையை அடைவதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்தார். பெண்களை "பொத்திப் பொத்தி' வளர்க்கிற அந்தத் தலைமுறை அம்மாக்களிடமிருந்து மிகவும் மாறுபட்டவராக சரஸ்வதி இருந்தார். பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டுமென விரும்பினார். ஒருவர் தனது நடத்தையை சரிவர உருவாக்கிக் கொள்வதையே அவர் மிகவும் முக்கியமானதாகக் கருதினார். நாணயம், நேர்மை, ஒழுக்கம், நேரம் தவறாமை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென தன் பெண்களுக்கு வலியுறுத்துவார். மேலும் நல்ல உரையாடும் ஆற்றல், தன்னூக்கம், மனத்தளர்ச்சியை எதிர்கொள்ளல், தலைமைப் பண்பு, குழு மனப்பான்மை ஆகிய இயல்புகளை வளர்த்துக் கொள்ள நல்ல உதாரணங்களுடன் ஊக்கமளிப்பார். ஆண் என்றோ, பெண் என்றோ என யாரையும் பிரித்து பார்ப்பதில்லை. எந்தப் பேதமுமின்றி இருவருக்கும் சமமான அந்தஸ்துடன் மரியாதை அளிப்பார்.
சரஸ்வதி மிகவும் அபூர்வமாகவே குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டுவார். அப்படி கோபம் வருகையில் அவரது பாசம் மிகுந்த கண்களே அதைக் காட்டிக் கொடுத்துவிடும். உடனே பிள்ளைகளும் அவை அம்மாவிற்குப் பிடிக்காதவையென அதிலிருந்து பின்வாங்கி விடுவர். மகள்கள் இருவரும் இறுதியில் அம்மாவிடம் கொஞ்சலாய் மன்னிப்பு கேட்க அந்த விளையாட்டு மகிழ்ச்சியான கலகலப்பில் போய் முடியும்.
சரஸ்வதி குழந்தைகளோடு எப்போதும் சந்தோஷமாகவே இருப்பார். அவசியம் வரும்போது மிகவும் கண்டிப்பாகவும் இருப்பார். பாரம்பரியமான 
நற்பழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து அதைக் கடைப்பிடிக்குமளவிற்கு நல்ல ஊக்கம் கொடுப்பார். அலுவலக வேலைகளோடு பிள்ளைகளுக்கு மாலை நேரங்களில் பாடமும் சொல்லிக் கொடுப்பார். 
சில நேரங்களில் மாலினியும் நளினியும் படிப்பதற்கு இயலாத களைப்பிலிருக்கும்போது ஒரு டேப் ரிக்கார்டரை எடுத்துக் கொண்டு வந்து அதன் பொத்தானை அமுக்குவார். அதில் அவர்கள் படிக்க வேண்டிய பாடம் சரஸ்வதியின் குரலில் ஒலிக்கும். அதைத் திருப்பித் திருப்பிக் கேட்கச் சொல்வார். அப்படி அம்மாவின் குரலில் அவர்கள் அந்தப் பாடத்தைப் படித்திருப்பார்கள். அப்படி குழந்தைகளுக்காகத் தேவை வரும்போது அவர்களின் பாடத்தை தனது குரலில் ஒலிப்பதிவு நாடாவில் பதிய வைத்து படிக்க வைப்பார். 
மாலினி அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிப்பவர். அவரை காலை 4 மணிக்கு எழுப்பிவிட்டு வேண்டிய உதவிகளும் செய்து விடுவார் சரஸ்வதி. நளினி இரவு விழித்து படிப்பவர். அவர் தூங்கும் வரை காத்திருந்து உதவி செய்வார். 
கல்யாணத்திற்கு ஜாதகங்கள், ஜோதிடங்கள் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கிடையாது. சரஸ்வதி ஜோதிடக் கலையைச் சுயமாக கற்றுக் கொண்டவர். பலருக்கும் இலவசமாக ஜாதகங்கள் எழுதிக் கொடுப்பார். அவர் இந்திய தலைமைக் கணக்காளர் அலுவலகத்தில் முதுநிலை கணக்குத் தணிக்கையாளராகப் பணியாற்றி 1988 மே மாதத்தில் ஓய்வு பெற்றார். அவர் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவரது சக பணியாளர்களால் "ஏஜிஎஸ்' அலுவலகத்தின் இந்திரா காந்தி என செல்லமாக அழைக்கப்பட்டார். 
மூத்த மகள் மாலினியை சரஸ்வதி தங்களது ஆண் பிள்ளை என்பார். மாலினிக்கு கடைக்குப் போவது போன்ற வீட்டிற்குத் தேவையான வெளி வேலைகளைச் செய்வதற்கான பயிற்சியை அளித்தார். வீட்டிற்குள் சமையலறை உட்பட்ட பொறுப்புகளில் நளினிக்கு அதிக இடமிருந்தது. சரஸ்வதியை மிகவும் அபூர்வமாகத்தான் சமையலறையில் காண இயலும். காரணம், சமையல் வேலை என்பது கல்யாணத்திற்கு மிகவும் பிடித்தமானது. அதனால் பெரும்பாலும் அவரே சமையலறைப் பொறுப்பை எடுத்துக் கொண்டார். வெளிநாடுகளுக்குச் செல்லும் தருணங்களில் மகள் நளினி அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார். 
சரஸ்வதிக்கு அலுவலகம் மற்றும் குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுப்பது ஆகிய பொறுப்புகளுக்கே நேரம் சரியாக இருந்தது. அபூர்வமாக சரஸ்வதி சமையல் செய்யும் தருணங்களில் அவளது ரசத்தின் மணம் வீட்டைச் சுற்றி சுகந்தமாய் வீசும். இளைய மகள் நளினி ஏழெட்டு வயதிலேயே தேநீர் மற்றும் சப்பாத்தி செய்வது போன்ற சமையற்கலையை முறையாகக் கற்றுக் கொண்டாள். அவளுடைய சமையலும் அந்த அளவிற்கு நல்ல சுவை மிகுந்ததாக இருந்தது. 

(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com