அண்ணலின் அடிச்சுவட்டில்... 31

சரஸ்வதி அலுவலகத்திலிருந்து வந்ததும் நல்ல உபயோகமான தலைப்புகளில் குழந்தைகளோடு கலந்துரையாடுவார். நல்ல சிறுகதைகளைப் படித்துச் சொல்வார். சில புத்தகங்களின் நல்ல பத்திகளைப் படித்துக் காட்டுவார்.
அண்ணலின் அடிச்சுவட்டில்... 31

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
சரஸ்வதி அலுவலகத்திலிருந்து வந்ததும் நல்ல உபயோகமான தலைப்புகளில் குழந்தைகளோடு கலந்துரையாடுவார். நல்ல சிறுகதைகளைப் படித்துச் சொல்வார். சில புத்தகங்களின் நல்ல பத்திகளைப் படித்துக் காட்டுவார். புராண காவியக் கதைகளையும் அவ்வப்போது சொல்வார். அவர் ஒரு புத்தகப்புழு. தமிழில் கவிதைகள் கூட எழுதுவார். தனது சுயதிருப்திக்காகவே அந்தக் கவிதைகளை எழுதுகிறேன் என்பார். அவை தன்னை வளர்த்துக்கொள்ள உதவுவதாகவும் தனது மனக் கவலைகளையும் மனத்தளர்ச்சியையும் போக்குபவை என்பார். சரஸ்வதியின் இந்த கவிதையார்வம் அவரது குடும்பத்திலும் ஒட்டிக்கொண்டது. அவரது தம்பி கடவுளைப் பற்றி கவிதை எழுதத் தொடங்கினார். அவையெல்லாம் அப்போது பல பத்திரிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. 
இத்தோடு மாலையில் வீட்டில் நகைச்சுவைக்கென்று ஒரு குறிப்பிட்ட நேரமுண்டு. அதற்கிடையில் அளவான நொறுக்குத் தீனியும் அவர்களின் நகைச்சுவை கச்சேரிக்கு பக்கவாத்தியமாக இருக்கும். இந்தப் பழக்கம் குழந்தைகளின் தேவையற்ற வெட்க உணர்வுகளை விலக்கி அவர்களுக்கு சமூகப் பழக்க
வழக்கங்களை நன்கு கற்றுக் கொடுத்தது. 
கல்யாணம் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களிலிருப்பார். அப்போதெல்லாம் வீட்டுப் பொறுப்புகளை மிகத் துல்லியமாக அவரே கவனித்துக் கொள்வார். அலுவலகம், வீடென பணி அழுத்தம் காரணமாக மன அழுத்தங்கள் இருந்தால் கூட அதை யாரிடமும் எந்த வகையிலும் வெளிக்காட்ட மாட்டார். 
ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரத்திலேயே ஒரு முக்கியமான நாளுக்காக பிள்ளைகள் காத்திருப்பார்கள். அது அடுத்த மாதத்தின் முதல் தேதி. அன்றுதான் சரஸ்வதி அவரது அலுவலக கேன்டீனிலிருந்து தவறாமல் பாதாம் அல்வா வாங்கி வரும் நாள். அது மிகவும் சுவையாக இருக்கும். 1970-இலேயே அப்போது ஒரு துண்டு பாதாம் அல்வாவின் விலை இரண்டு ரூபாய் ஐம்பது காசாக இருந்தது. மாலினிக்கும் நளினிக்கும் அந்த அல்வா மிகவும் பிடித்தமானது. ருசித்து ருசித்து சாப்பிடுவார்கள். 
ஒருநாள் அவர்கள் அம்மாவிடம், "இந்த அல்வா இன்னும் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. இரண்டு பொட்டலம் வாங்கி வர வேண்டியதுதானே?'' என்று சொன்னார்கள். 
உடனே சரஸ்வதி "இந்த அளவிற்கு இனிப்பான அல்வா கிடைத்ததற்கே நாம் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த அளவிற்காவது நமக்குப் பிடித்ததைக் கடவுள் கொடுத்ததற்கு அவருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். நான் இன்னொரு பொட்டலம் வாங்கினால் அலுவலகத்தில் யாரோ ஒருவருக்கு அந்த இனிப்பு கிடைக்காமல் போய்விடும். மேலும் இந்த உலகில் வீடில்லாமல் எவ்வளவு பேர் நடைபாதையில் படுத்து உறங்குகிறார்கள். உடுத்த உடையில்லாமல் கிழிசல் துணிகளை உடுத்தி வெயிலிலும் குளிரிலும் அவதிப்படுகிறார்கள். ஒரு வேளை உணவுகூட இல்லாமல் எவ்வளவு பேர் பசியில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் ஒப்பிட்டு நோக்கினால் கடவுள் நமக்குக் கொடுத்திருப்பது மிக அதிகம்'' என்று அறிவுறுத்தினார். மாலினியும் நளினியும் அமைதியாகி விட்டார்கள். 
சரஸ்வதியின் உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். அவரது தந்தை உதவி தலைமை ஆசிரியர். ஆங்கிலம் கற்பிப்பவர் கூட. அவர்கள் வீட்டின் பொருளாதாரச் சூழலால் ஏழைகளின் கடினத்தை அறிந்தவர். 
அவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். தினமும் "லலிதா திரிசதி'யினை எழுதி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார். அரசு மருத்துவமனை மருத்துவர் சரஸ்வதியின் இறக்கும் நாளை நேரத்தோடு குறிப்பிட்டு சொன்னபோது
கூட அவர் அதை நம்பவில்லை. அவரின் மன வலிமை அதிகமானது. "என்னை எமன் இப்போது ஒன்றும் அழைத்துச் செல்ல மாட்டான். இன்னும் சில காலம் இருப்பேன்'' என்றார். 
நோயோடு போராடி தற்காலிகமாக வெற்றி பெற்றார். ஐந்து வருடங்கள் உயிரோடிருந்தார். 
அப்போது சரஸ்வதியின் பயணம் மருத்துவமனையும் வீடுமாக இருந்தது. தனது கடைசி விருப்பமாக "வீட்டிலேயே நான் உயிர் துறக்க வேண்டும். அதனால் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டா''மென்றார். ஆனால், அதற்கு கல்யாணமோ அவரது குழந்தைகளோ உடன்படவில்லை. மருத்துவமனைக்குக் கொண்டு சென்று நன்றாக சிகிச்சை செய்தார்கள். பலனளிக்கவில்லை. 
சரஸ்வதியின் கடைசி நாளை தானே குறித்தார். அன்றே அவரின் மரணம் நிகழ்ந்தது. ஒன்றை உறுதியாகச் சொன்னார், "எனது முதல் ஓய்வூதியத்தை வாங்கிய பின்தான் நான் இந்த உலகை விட்டுச் செல்வேன்'' என்று பிடிவாதமாகச் சொன்னார். 
அந்த விருப்பத்தையும் அவர் நிறைவு செய்தார். 

மாலினி அளித்த சிறுநீரக தானம் 
சிறுநீரக தானம் என்பது இப்போது எல்லோரும் அறிந்த ஒன்றாகி விட்டது. ஆனால் எண்பதுகளில் அது பிரபலமடையவில்லை. 1982-இல் கல்யாணத்தின் மனைவி சரஸ்வதி எதிர்பாராமல் சிறுநீரகப் பாதிப்பால் மிகுந்த அவதிக்குள்ளானார். அவர் பம்பாயிலுள்ள பெரிய மருத்துவமனையான ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே மிகப் பிரபலமான சிறுநீரகத் துறை மருத்துவரான மணியே அவருக்கு சிகிச்சை அளித்தார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகப் பிரச்னையால் ஜெயபிரகாஷ் நாராயண் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அப்போது பெரும்பாலான நாட்களில் அந்த மருத்துவமனையில் அவரோடு தங்கி அவருக்கு கல்யாணம் பெருமளவில் உதவி செய்திருந்தார். அதனால் அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு கல்யாணம் மிகவும் பரிச்சயமுள்ளவராக இருந்தார். அதனால் அங்கே கல்யாணத்தின் மனைவிக்குச் சிறப்பான சிகிச்சையும் மருத்துவக் கட்டணத்தில் சில சலுகைகளும் கிடைத்தன. 
ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு உதவியாக அந்த மருத்துவமனையில் கல்யாணம் அப்போதிருந்த போது அவரது மனைவிக்கும் அந்த மருத்துவமனையில் பிற்காலத்தில் சிகிச்சை செய்ய வேண்டி வருமென அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மாற்று சிறுநீரகம் மூலமாகவே சரஸ்வதியைக் காப்பாற்ற முடியுமென்றார் மருத்துவர் எம்.கே.மணி. தனது மனைவிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சிறுநீரக தானத்திற்காக பல்வேறு பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். ஒரு லட்சம் இரண்டு லட்சமென பணம் கொடுக்க வேண்டுமென பல கோரிக்கைகள் வந்தன. ஏற்கெனவே சிகிச்சைக்காக பணம் நிறைய செலவழித்ததால் அந்த அளவிற்குப் பணம் அப்போது அவரிடம் இல்லாமல் இருந்தது. 
இறுதியில் மூத்த மகள் மாலினி அம்மாவிற்கு தனது சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க முன் வந்தார். அப்போது அவருக்கு வயது 17. கல்யாணத்திற்கு மிகுந்த வருத்தமாகவே இருந்தது. தனது மனைவி இன்னும் குறைந்தது ஐந்து வருடங்கள் உயிரோடிருக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். மாலினி தனது அம்மாவிற்கு சிறுநீரகத்தை தானமாகக் கொடுப்பதில் மிகுந்த உறுதியாக இருந்தார். ரத்த உறவிலுள்ளவர்களின் சிறுநீரகத்தை நோயாளியின் உடல் எளிதாக ஏற்றுக் கொள்வதால் அம்மா நிச்சயமாக காப்பாற்றப்பட்டு விடுவார் என்ற நம்பிக்கை மாலினிக்கு இன்னும் உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுத்தது. 
வழக்கமாக கல்யாணமும் மாலினியும் சேர்ந்துதான் மருத்துவரைப் பார்ப்பார்கள். மாலினி சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்த பின் முதலாவதாக அப்போதுதான் கல்யாணமும் மாலினியும் மருத்துவரின் அறையினுள் நுழைந்தனர். மருத்துவர் கல்யாணத்தை வெளியே இருக்கச் சொன்னார். கல்யாணம் மனைவியைக் காப்பாற்றுவதற்காக மாலினியை நிர்ப்பந்தம் செய்து அவரை சிறுநீரக தானத்திற்குச் சம்மதிக்க வைத்திருப்பாரோவென அவருக்கு சந்தேகம். மாலினியிடம் தனியாக அந்த மருத்துவர் உரையாடினார். சிகிச்சை குறித்தும் சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைக் கூறியும் அதிலுள்ள சிக்கல்கள், பாதிப்புகளென விவரமாக மாலினியிடம் பேசினார். இறுதியில் சிறுநீரகத் தானத்திற்கு அவருக்கு சம்மதமாவென கேட்டிருக்கிறார். 
மாலினியும் தான் அம்மாவிற்கு சிறுநீரக தானமளிப்பது தான் சுயமாக எடுத்த முடிவென உறுதியாகக் கூறினாள். அவர் சம்மதித்த பின்பும் அவரது சிறுநீரகத்தை அப்போது எடுப்பதில் ஒரு சட்ட சிக்கல் இருந்தது. காரணம் அவருக்கு 18 வயதாகவில்லை. 18 வயதான பின்னரே மாலினியின் சிறுநீரகத்தைத் தானமாகப் பெற முடியுமென்றார் மருத்துவர். 
மீண்டும் ஒரு வருடம் காத்திருந்தனர். டயாலிசிஸ் முறையில் சரஸ்வதியின் உயிரை ஒரு வருடம் பிடித்து வைத்திருந்தனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டி இருந்தது. ஒரு வருடம் கழித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலமாக மாலினியின் சிறுநீரகத்தை சரஸ்வதிக்குப் பொருத்தினர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. கல்யாணத்தின் மனைவி உயிர் பெற்றார். ஆறு வருடங்கள் உயிரோடிருந்தார். ஆனால் அந்த ஆறு வருடங்களும் மிகவும் சோதனையான வருடங்களாகவே இருந்தன. காரணம் இரண்டு நாட்கள் அவர் நலமாக இருப்பார். மூன்றாம் நாள் ஏதாவது நோய் வந்துவிடும். தோல் காச நோயும் வந்தது. அடிக்கடி மஞ்சள் காமாலை வேறு. அவருக்கு உடலில் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருந்ததால் எளிதில் நோய் தொற்று வந்தது. அதைத் தவிர்ப்பதற்காக வீட்டில் நிறைய முகக் கவசங்களை வாங்கி வைத்திருந்தனர். பார்க்க வரும் உறவினர்களையும் நண்பர்களையும் அதை முகத்தில் கட்டிக் கொண்டு அவரைப் பார்க்க அனுமதித்தனர். 
தினமும் மருத்துவமனை வீடென்று அலைந்து கொண்டிருந்தனர். ஆறு வருடங்களுக்கு பின் கல்யாணத்தின் மனைவி இறந்து போனார். 
(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com