அண்ணலின் அடிச்சுவட்டில்...8

வழக்கமாக காந்தி மெளன விரதமிருக்கும் அந்த திங்கட்கிழமை. காந்தியோடு ரயிலில் வழக்கமாக அவரோடு செல்பவர்களும் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அண்ணலின் அடிச்சுவட்டில்...8

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்

வழக்கமாக காந்தி மெளன விரதமிருக்கும் அந்த திங்கட்கிழமை. காந்தியோடு ரயிலில் வழக்கமாக அவரோடு செல்பவர்களும் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர் 12 மணி நேரம் மெளன விரதம் இருப்பார். அந்த தருணம் கல்யாணம் அவரிடம் பணியில் சேர்ந்த புதிது. அவர் ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தார். கல்யாணம் இன்னொரு மூலையில் இருந்தார். அவர் மெளன விரதம் இருந்ததால் கல்யாணத்தை சைகையால் அழைத்தார். கையில் ஏதோ மிகச் சிறிய அளவில் எழுதி வைத்திருந்தார். அந்தக் குறிப்பை கல்யாணத்திடம் கொடுத்தார். அவர் அவ்வாறு கொடுத்தாலே அவர் அதை தட்டச்சு செய்ய வேண்டுமென்றே பொருள்.

முதலில் அவரோடு பயணிப்பதால் கல்யாணம் அவரோடு தட்டச்சு இயந்திரம் எதையும் கொண்டு வரவில்லை. தட்டச்சு செய்வதற்கான அந்தக் குறிப்பை வாங்கி வைத்துக் கொண்டு வெறுமனே அங்கே வந்து உட்கார்ந்து கொண்டார் கல்யாணம். அந்தக் கடிதம் வைஸ்ராய் லார்டு வேவலுக்கு எழுதிய மிக முக்கியமான கடிதமாக இருந்திருக்கிறது. அந்தக் கடிதத்தை பாட்னாவில் சென்றதும் மிருதுளா சாராபாயிடம் கொடுக்க வேண்டும். அவர் அதை புது டெல்லிக்கு அனுப்ப வேண்டும். அந்த விவரங்கள் ஏதும் கல்யாணம் அப்போது அறிந்திருக்கவில்லை.

அவர் ஆறு மணிக்கு மெளன விரதத்தை கலைத்ததும் "கல்யாணம் வா'' என்று அழைத்தார்..
"அந்தக் கடிதம் எங்கே'' என்று கேட்டார்.

"கடிதத்தை அடிக்க என்னிடம் டைப்ரைட்டர் இல்லை'' என்று தயக்கத்தோடு சொன்னார் கல்யாணம்.

"நான் ஒரு சவரம் செய்பவனை அழைத்தால் அவன் சவரம் செய்வதற்கான அந்தத் தொழிலுக்குரிய எல்லா கருவிகளோடுதான் வருவானென்பதே எனது எதிர்பார்ப்பாக இருக்கும்'' என்றார் காந்தி.

அவர் அவ்வாறு கூறியது அந்தச் சின்ன வயதில் கல்யாணத்திற்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.

இவர் இப்படி பேசுகிறாரே என்று அங்கேயே உட்கார்ந்து மிகுந்த வருத்தத்துடன் ஒரு கடிதம் எழுதினார் கல்யாணம். கடிதம் எழுதியது ஆஷாதேவி ஆர்ய நாயகம் என்ற பெண்மணிக்கு. அவர் சேவாகிராமத்தில் அடிப்படைக் கல்வி திட்டத்தை பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்த இ. டபிள்.யு. ஆர்யநாயகத்தின் மனைவி.

அவர் வங்காளத்தைச் சேர்ந்தவர். அவருடைய கணவரோ இலங்கையைச் சேர்ந்த தமிழர். அவர் கல்யாணத்திடம் தமிழில் பேசுவார். சேவாகிராமத்தில் காப்பி ஒன்றும் கிடைக்காததால் அவர் வீட்டில் அங்கிருக்கும் போதெல்லாம் அங்கே சுவையான காப்பி சாப்பிடுவார்.

கல்யாணம் அன்று எழுதிய அந்தக் கடிதத்தில் தன் வருத்தத்தை வார்த்தைகளால் கொட்டினார். நடந்த எல்லா விவரங்களையும் எழுதி "காந்தி இவ்வாறு பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. நான் ஆஸ்ரமத்திற்கு வந்து விடுகிறேன்'' என்றும் எழுதி இருந்தார்.

சில நாட்களில் ஆஷாதேவியிடமிருந்து பதிலும் வந்தது. அதில் அவர் "காந்தி அப்படிதான் சொல்வார்.. அவை யாவும் உனது நன்மைக்காகத்தான். அங்கேயே பணியினைத் தொடர வேண்டும்'' என குறிப்பிட்டு பதிலெழுதி இருந்தார். அது வேறு கதை.

கல்யாணம் மீண்டும் காந்தியோடே பயணத்தை தொடர்ந்திருந்தார். காந்தி கண்டிப்போடு கூறிய அந்த வார்த்தை மனதில் மிகவும் உறுத்திக் கொண்டே இருந்தது. அன்றைய பயணத்தில் காந்தி வைஸ்ராய்க்கு எழுதிய கடிதத்தை தட்டச்சு செய்வதற்கான வேறு வழிகளேதுமின்றி மிகுந்த வருத்தத்தில் இருந்தார்
கல்யாணம்.

ஆபாவும் மனுவும் அதற்கொரு வழி காட்டினார்கள்.

சாதாரணமாக காந்தி ரயிலில் பயணம் செல்லும் போது பத்திரிகையாளர்களும் அவருக்கு அடுத்தப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் தனியாக பயணச்சீட்டு எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் கையில் தட்டச்சு இயந்திரங்கள் இருக்கும். காந்தி குறித்த செய்திகளை அவ்வப்போது அடித்து ஆங்காங்கு அவரவர் செய்தித் தாள் அலுவலகங்களுக்கு அனுப்பிக் கொண்டிருப்பார்கள். பக்கத்து பெட்டியில் பத்திரிகையாளர்களிடமிருந்து தட்டச்சு இயந்திரம் வாங்கி அடிக்கலாமென்று ஆபாவும் மனுவும் ஆலோசனை கூறியபோது கல்யாணத்திற்கு மிகுந்த ஆசுவாசமாகவே இருந்தது.

அடுத்த நிலையத்தில் இறங்கி பத்திரிகையாளர்கள் இருக்கும் பெட்டிக்குச் சென்றார். அவர்களிடமிருந்து ஒரு தட்டச்சு இயந்திரத்தை வாங்கி கடிதத்தை அடித்தார். அது மிக மோசமான இயந்திரமாக இருந்தது. நிறைய எழுத்துக்கள் மேலும் கீழுமாகவும் நன்றாகப் பதியாமலும் இருக்க மிகுந்த சலிப்புடனேயே அந்தக் கடிதத்தை அடித்து காந்தியிடம் கொடுத்தார். அதில் நிறைய தவறுகளும் இருந்தன. மீண்டும் ஒரு பதட்டம். காந்தி கோபப்படுவாரென்ற அச்சம் அவருக்கு இருந்தது.

காந்தி அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்தார்.

சிறிதும் கோபப்படவில்லை. எல்லாவற்றையும் திருத்தி அப்படியே வைஸ்ராய்க்கு அனுப்பியும் விட்டார்.

கல்யாணம் மிகுந்த ஆறுதல் அடைந்தார்.

காந்தி கோபமேபடமாட்டார். கோபம் வந்தால் அவர் அதை அடக்கிக் கொள்வார். அந்த கோபத்தை சிறிதளவும் இன்னொருவர் மீது செலுத்த மாட்டார். கல்யாணம் காந்தியிடம் பணிக்குச் சேர்ந்தபோது அவருக்கு எழுபத்தைந்து வயது இருக்கும். எளிய உணவு சாப்பிடும் அவரிடம் கோபம் குடி கொள்வதில்லை.

கையை ஓங்கி ஒருவரை காயப்படுத்த முற்படுவதையே சாதாரணமாக நாம் வன்முறையாக கருதுகிறோம்.

காந்தியைப் பொருத்தவரை வன்முறையின் பொருளானது அதிநுட்பமானது. கோபத்துடன் முறைத்துப் பார்ப்பதே வன்முறை. பல்லைக் கடிப்பதும் மனதிற்குள் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வதும் வன்முறை, அவருக்கு தீங்கு நிகழ வேண்டுமென எண்ணுவதும் வன்முறை என்பதே காந்தியின் சித்தாந்தமாக இருந்தது.

மூட்டை மூட்டையாகப் பணம்

அந்தக் காலத்தில் ரயில் பயணத்தில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, இன்டர் எனப்படும் இடைநிலை வகுப்பு, மூன்றாம் வகுப்பென நான்கு பிரிவுகள் இருந்தன. சுதந்திரம் கிடைத்த பின் அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த சந்தானம் இன்டர் வகுப்பை எடுத்து விட்டார்.

அப்போதெல்லாம் ரயில் நிலையங்களில் ஓய்வறைகள், தேநீர், தண்ணீரென எல்லாவற்றிலும் மதத்தைத் தொடர்புபடுத்தியே இருந்தன. ரயில் நிலையங்களில் இந்து ஓய்வறை, முஸ்லிம் ஓய்வறையென தனித்தனியாக இருந்தன. விற்பனையாளர்கள் இந்து சாய், முஸ்லிம் சாய், இந்து பானி, முஸ்லிம் பானி என தனித் தனியாக கூவி விற்றுக் கொண்டிருந்தனர்.

முஸ்லிம் பானி விற்பவர்கள் ஆட்டுத் தோலினாலான பெரிய பையில் தண்ணீரை சுமந்து அலைந்து கூவி விற்பர். 30 லிட்டருக்கு மேல் அதில் தண்ணீர் இருக்கும். அதைத் தூக்கிக் கொண்டு அவர்கள் விற்பதைப் பார்க்க பரிதாபகரமாக இருக்கும். ஆட்டுத் தோலில் தண்ணீர் விற்பதை "பிஸ்தி' என்று சொல்வார்கள். ஒருதடவை கல்யாணம் மாறுவேடப் போட்டியில் பிஸ்தி எனப்படும் தண்ணீர் விற்கும் வேடத்தை சுமந்து அந்தப் பையை சுமக்க இயலாமல் கீழே விழுந்து விட நேர்ந்தது வேறு கதை...

சுதந்திரம் கிடைத்ததுமே ரயில் நிலையங்களில் இந்து உணவறையும் முஸ்லிம் உணவறையும் முறையே சைவ, அசைவ உணவகங்களாக மாறின. தேநீர், தண்ணீர் விற்பவர்கள் இந்து, முஸ்லிமென தனித் தனியாக விற்கும் முறையும் ஒழிந்தது.

அப்போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எப்போதுமே ரயிலில் மூன்றாம் வகுப்பு பயணத்தில் இருக்கைகளில் சிறிய மரத்துண்டுகள் இணைக்கப் பட்ட இருக்கைகளே இருக்கும். மரத்துண்டுகளினிடையே இடைவெளிகள் இருக்கும். அந்த இருக்கைகளில்தான் படுக்க வேண்டும். மெத்தைகளெல்லாம் இருக்காது. காற்றாடியும் கிடையாது. அதனால் மரப் படுக்கையில் காந்தியின் உடம்பு வலிக்கக் கூடாதென்பதற்காக ஆஸ்ரமத்தினரே மெத்தை கொண்டு வருவர். ஒரு தலையணையும் வைத்திருப்பர். காந்தி வெளியிலே தேநீர், காப்பி என எதுவும் அருந்துவதில்லையாதலால் அவருக்காக காலையில் வெந்நீர் வைப்பதற்கு சிறிய ஸ்டவ் இருக்கும். வெந்நீரில் எலுமிச்சம் பழம் பிழிந்து அதில் தேன் விட்டு அவருக்கு கொடுப்பர். அதே போன்று காய்கறிகளையும் சிறிது அவித்து உணவாக அவருக்கு வழங்குவர்.

காந்திக்கு மிகவும் வேண்டிய ஒரு தொழிலதிபர் இருந்தார். அவருடைய பெயர் மிருதுளா சாராபாய். அவர் அகமதாபாத்திலுள்ள காலிகோ மில்லின் உரிமையாளர் சர் அம்பாலா சாராபாயின் மகள். விக்ரம் சாராபாயின் சகோதரி. மிருதுளா பாட்னாவில் வேலை செய்து கொண்டிருந்தார்.

காந்தி பாட்னாவிலிருந்து திரும்பி வரும் போது அவர் வெப்பத்தில் சிரமப்படக்கூடாதென்பதற்காக காந்தியின் பெட்டியின் சன்னலளவிற்கு பெரிய ஐஸ் கட்டிகளை சன்னல் பாதையில் மிருதுளா கட்டி வைத்து விடுவார். அதற்கு காந்தி ஒன்றும் சொல்ல மாட்டார். ஆனால் அந்த ஐஸ்கட்டிகள் உருகி ரயில் பெட்டியில் ஒழுகிக் கொண்டே இருக்கும்.. எங்கும் தண்ணீராய் இருப்பதால் உடன் பயணிப்பவர்களுக்கு கொஞ்சம் அது சிரமமாகவே இருக்கும்.

சாதாரணமாக ரயில் நிலையம் வந்ததுமே கல்யாணம் ரயிலை விட்டு இறங்குவார். ஆபாவோ மனுவோ ரயில் பெட்டியின் உள்ளேயே இருந்து காந்தியை கவனித்துக் கொள்வர். காந்தி தனது இருக்கையிலிருந்து கொண்டே மக்களுக்கு வணக்கம் செலுத்துவார். மக்கள் அவரைப் பார்க்க வேண்டுமென்று மிகவும் விருப்பப் பட்டால் ரயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டே கை கூப்பி வணக்கம் செலுத்துவார். கல்யாணமும், உடனிருக்கும் சக பணியாளர்களும் அங்கே கூடி இருக்கிற மக்களிடமிருந்து தாழ்த்தப் பட்டவர்களுக்கான நிதியை வாங்குவர். நிறையப் பணம் வரும். நகைகள் வரும். பொருட்கள் வரும். கல்கத்தா போய் சேர்வதற்குள் பணம் மூன்று நான்கு மூட்டை அளவுக்கு இருக்கும்.

அது தவிர, ஒவ்வொரு ரயில்நிலையத்திலும் காந்தி பசும் பால் சாப்பிட மாட்டாரென்று அவருக்காக ஆட்டுப் பால் கறந்து சின்ன கிண்ணத்தில் கிராமவாசிகள் கொண்டு வருவார்கள். நிறைய பேர் பால் கொண்டு வந்து விடுவார்கள். நிறைய காய்கறிகள் வரும்.. பயணத்தை ஆரம்பிக்கிற போது காந்தியோடு நாலு பேர் மட்டும் இருப்பர். இடங்கள் எல்லாம் காலியாக இருக்கும். ஊர் போய் சேரும் போது பெட்டி நிறைய பண மூட்டைகளும் சாமான்களுமாய் நிரம்பி இருக்கும்.

எல்லாவற்றையும் அவர்கள் தங்குமிடத்திற்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். வழக்கமாக போகும் ஊரிலுள்ள அரிஜன சேவா சங்கம் உட்பட்ட சமூக சேவை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் காந்தியை சந்திக்க ரயில் நிலையத்திற்கு வருவார்கள். அவர்களிடம் அந்தப் பொருட்களைக் கொடுத்து விடுவர். அவர்கள் அதைக் கொண்டு போய் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்குவார்கள்.

தங்குமிடத்திற்கு காந்தியை அழைத்துச் செல்ல ரயில் நிலையத்தில் கார் வந்திருக்கும். அதில் பண மூட்டைகளை ஏற்றி தங்குமிடத்திற்கு செல்வர். அதற்கு பின் காந்தியுடைய வங்கியான யுனைடெட் கமர்ஷியல் வங்கிக்கு காந்தியின் வருகையைத் தெரிவிப்பர். வங்கி அலுவலர்கள் காந்தி தங்கி இருக்கும் இடத்திற்கு வந்து அந்த பண மூட்டைகளை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள்.

அப்போது பிர்லாதான் அந்த வங்கியின் தலைவராக இருந்தார். காந்தியின் பணியாளர்கள் அந்தப் பணத்தை எண்ணவே மாட்டார்கள். அப்படியே வங்கிக்கு போய் விடும். அவ்வளவு நம்பிக்கை அந்த நாணயங்களோடு ஒட்டி இருந்தது. இப்போது காந்தியின் உருவம் மட்டும்தான் அந்த நாணயங்களில் ஒட்டி இருக்கிறது.
(தொடரும்)

எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com