அண்ணலின்  அடிச்சுவட்டில்...11

கஸ்தூர்பா காந்தியை கல்யாணம் பார்த்ததே இல்லை என்றாலும் காந்தியின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை சக ஆஸ்ரமவாசிகள்
அண்ணலின்  அடிச்சுவட்டில்...11

காந்திஜியின்   செயலர்   கல்யாணத்தின்  அனுபவங்கள்
காந்தியின் உப்பு சத்தியாக்கிரகம்

கஸ்தூர்பா காந்தியை கல்யாணம் பார்த்ததே இல்லை என்றாலும் காந்தியின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை சக ஆஸ்ரமவாசிகள் மூலமாக அறிந்திருக்கிறார். கஸ்தூர்பா காந்திக்கு உடல் நலமின்றி ஓர் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின் சிறிது நலமாக இருந்தார். அதற்குள் அவருக்கு ரத்தப் போக்கு அதிகமாகி விட்டது. நோய் குறையவில்லை. காந்தியின் நீர் சிகிச்சையும் பயனளிக்கவில்லை. காந்தியின் சிகிச்சை முறைகளை கஸ்தூர்பா காந்தி எதிர்க்கவில்லையென்றாலும் அவருக்கு காந்தியின் சிகிச்சை முறைகளில் பெரிய நம்பிக்கை இல்லை. வெளியில் சிகிச்சை செய்யவும் அவர் கோரவில்லை.  

காந்தியின் எல்லா சிகிச்சை முறைகளும் பயனளிக்காமல் போகவே இறுதியாக அவர், கஸ்தூர்பாவிடம் உப்பையும் பயறு வகைகளையும் விட்டுவிட மிகவும் பரிவுடன் கெஞ்சினார். ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவே இல்லை. உரிய காரணங்களை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கஸ்தூர்பா அதற்கு உடன்படவில்லை. உப்பையும் பயறையும் விடுவதற்கு அவர் பிடிவாதமாய் மறுத்தார். 

காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்த,  "இதையெல்லாம் விட்டுவிட உங்களிடம் சொன்னால் உங்களால் இயலுமா'' என்று காந்தியிடம் கேட்டார். இச் செய்கை காந்திக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அதே அளவிற்கு மகிழ்ச்சியையும் அளித்தது. இதனை  கஸ்தூர்பா மீது தான் கொண்ட காதலை வெளிப்படுத்துவதற்கான நல்ல தருணமாக காந்தி எடுத்துக் கொண்டார். 

"ஆம்! நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டாய். ஒரு வேளை எனக்கு உடல்நலமில்லாமலிருந்து மருத்துவர் இவை மட்டுமல்ல, வேறு எதை உட்கொள்ளக் கூடாதென்று சொன்னாலும் கூட அதை நான் அப்படியே எந்தத் தயக்கமுமின்றி  கடைப்பிடிப்பேன்'' என்றார் காந்தி. 

இன்னும் ஒன்றை உறுதியாகக் கூறினார். "நீ உப்பையும் பயறையும் விடுகிறாயோ இல்லையோ, எந்த மருத்துவ அறிவுரையுமில்லாமலேயே நான் ஒரு வருடத்திற்கு உப்பையும் பயறையும் விட்டுவிடப் போகிறேன்'' என்றார்.

கஸ்தூர்பாவிற்கு அது பயங்கரமான அதிர்ச்சியைத் தந்தது. அவர் மிகுந்த வருத்தத்துடன் காந்தியைப் பார்த்து, "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் இயல்பைத் தெரிந்த பின்னும் நான் இப்படி உங்களை சினமூட்டி இருக்கக் கூடாது. கடவுளுக்காக நீங்கள் உங்கள் சபதத்தை வாபஸ் பெற வேண்டும். உங்களின் இந்த சபதம் எனக்கு மிகுந்த கடினத்தை தந்துள்ளது'' என்றார்.

"உப்பையும் பயறையும் விட்டுவிடுவது உனக்கு மிகவும் நல்லது. இதனை விடுவதால் நீ நலம் பெறுவாயென்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகமில்லை. என்னைப் பொருத்தவரை மிகவும் சிரத்தையுடன் எடுத்துக் கொண்ட ஒரு சபதத்தை என்னால் வாபஸ் வாங்க முடியாது. நம்மை நுகரத் தூண்டும் எல்லா விஷயங்களிலுமுள்ள கட்டுப்பாடுகளும் மனிதனுக்கு நற்பயனே அளிப்பதால், இந்த சபதம் நிச்சயமாக எனக்குப் பலனளிக்கும். அதனால் என்னைத் தனியாக விட்டுவிடு. இது எனக்கு ஒரு சுயசோதனையாகவும் இருக்கும். நீ கடை ப்பிடிக்கப் போகிற அந்தக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு அறம் சார்ந்த ஒரு பக்கபலமாகவும் இது இருக்கும்'' என்றார் காந்தி. 

"நீங்கள் மிகவும் பிடிவாதக்காரர். எதைச் சொன்னாலும் கேட்க மாட்டீர்கள்'' என்று கஸ்தூர்பா அழுது கொண்டே காந்தியின் சபதத்தை விட்டுவிடக் கோரினார். அது சாத்தியமில்லாததென்று கஸ்தூர்பாவிற்கே தெரியும். 

இருவருமே அதன்பின் உப்பையும் பயறையும் எடுத்துக் கொள்ளவில்லை. கஸ்தூர்பாவின் உடல்நலம் தேறத் தொடங்கியது. அந்த ஆரோக்கியத்திற்கான காரணம் அவர் உப்பும் பயறும் எடுக்காததினாலா அல்லது உடல் ஆரோக்கியத்திற்காக காந்தியின் நுணுக்கமான கண்காணிப்பா அல்லது இந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வில் கஸ்தூர்பாவின் மனதில் உருவான மகிழ்ச்சியின் கிளர்ச்சியா என காந்தியால் ஊகிக்க இயலவில்லை.  இறுதியில் கஸ்தூர்பாவின் ரத்தப் போக்கு நின்றுவிட்டது. அது காந்திக்கும் கஸ்தூர்பாவிற்கும் மிகுந்த மகிழ்ச்சியினை அளித்தது.  
காந்தியின் இந்த சத்தியாக்கிரகம் அவர் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வாகும்.

சர்வாதிகாரி காந்திக்கு...
காந்தியடிகளுக்கு வரும் கடிதங்களில் குறிப்பாக சுதந்திரத்திற்கு பின் வந்த கடிதங்களில் அவரது முகவரியை எழுதும்போது பல்வேறு விதமாக காந்தியைக் குறிப்பிட்டிருந்தார்கள். ஒரு கடிதத்தில் சர்வாதிகாரி காந்தி என்றே முகவரியிட்டிருந்தார்கள். அந்த வரிகளினுள் அவர்களின் இதயபூர்வமான அன்பு இழையோடியிருந்தது.

கையெழுத்தின் விலை
காந்தியடிகளுக்கு வருகிற கடிதங்களில் பெரும்பாலும் நமது நாட்டிலிருந்தும் வரும் - வெளிநாடுகளிலிருந்தும் வரும். சிலர் அவரது ஆட்டோ கிராஃபிற்காக கையெழுத்து கேட்டு எழுதுவார்கள். சிலர் புகைப்படத்துடன் கூடிய கையெழுத்து கேட்பார்கள். கல்யாணம் அவர்களுக்கெல்லாம் முதலில் பதில் கடிதம் எழுதி விடுவார். 

அதில் "இந்தியாவானது பல சாதி, இன, மதங்களைக் கொண்ட நாடு.  இங்கு சமூகரீதியாகவும் பொருளாதார அளவிலும் சில குறிப்பிட்ட இன மக்கள் உயர்நிலையிலும் பலர் தாழ்ந்த நிலையிலும் உள்ளனர். அவ்வாறு தாழ்த்தப்பட்ட இன மக்களை மற்ற மக்களுக்கு சமமாக உயர்நிலைக்கு கொண்டு வருவதற்காக அவர்களின் வளர்ச்சிக்காக பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. அதற்காகவே காந்தியடிகள் அவரது ஒவ்வொரு ஆட்டோகிராஃபிற்கும் ஐந்து ரூபாய் கேட்கிறார்'  என்றும் அதை அனுப்புமாறு கடிதத்தில் தெரிவிப்பார். உடனடியாக அவர்கள் பணத்தை அனுப்பி விடுவார்கள். 

ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று நான்கென்று நிறைய இதே போன்று ஆட்டோகிராஃப் கேட்டு கடிதங்கள் வரும். ஒவ்வொரு நாளும் இந்த மாதிரி கடிதங்கள் வரும் போதெல்லாம் அடிக்கடி அவரிடம் கையெழுத்து வாங்க இயலாது. காரணம் காந்தி வேறுபல முக்கிய வேலைகளில் இருக்கும்போது கையெழுத்திற்காக அவரைத் தொல்லைப்படுத்த கல்யாணம் விரும்பவில்லை.

அதற்காகவே வேலைப் பளு குறைவாக இருக்கும் நேரங்களில் பத்து பதினைந்து ஆட்டோகிராஃபும் அதேபோல் புகைப்படத்துடன் கூடிய கையெழுத்துகளும் வாங்கி கல்யாணம் தயாராக வைத்து விடுவார். 

ஒரு தடவை ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் காந்திக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் "நான் பரம ஏழை. எனக்கு உங்கள் ஊரில் ஐந்து ரூபாய் மதிப்பிற்கு எங்கள் நாட்டு பணத்தில் எவ்வளவு மதிப்பென்று எனக்குத் தெரியாது. என்னிடம் பணமும் இல்லை. அதை எப்படி அனுப்புவதென்றும் தெரியவில்லை'' என்று எழுதி இருந்தார். 

கல்யாணம் இந்த விஷயத்தை காந்தியிடம் சென்று சொன்னார். அவர் அந்தப் பெண்மணிக்கு வெறும் ஆட்டோகிராஃப் ஒன்று அனுப்பச் சொல்லுவாரென்றே கல்யாணமும் நினைத்தார். ஆனால் காந்தியோ தனது விலை மதிப்பற்ற நேரத்தைச் செலவழித்து ஒரு பெரிய கடிதமே எழுதி விட்டார். கல்யாணத்திற்கு அது மிகுந்த வியப்பாகவே இருந்தது. 

வெறும் கையெழுத்து மட்டும் கேட்ட பெண்ணிற்கு காந்தியடிகளின் கையெழுத்தில் ஒரு நீண்ட கடிதமே கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்? ஒரு கையெழுத்திற்கு ஐந்து ரூபாயென்றால் ஒரு கடிதத்திற்கு அந்த பெண் எவ்வளவு பணம் தர வேண்டும்.. பணமே தராமல் ஒரு நெடிய கடிதத்தையே அந்தப் பெண்ணிற்கு பரிசாகக் கொடுத்தார் காந்தி.  
அந்தப் பெண்ணின் கடிதம் இது...

அந்தோணி ஸ்டிராச்சோவா.
மிலாடோநோவிகோவா 22
அன்புள்ள ஐயா,
ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று இரண்டாவது தடவையாக உங்களது அஞ்சலட்டை எனக்குக்  கிடைத்தது. நீங்கள் என்னிடம் கேட்ட பணத்தை ( ஷில்லிங்ஸ் )
என்னால் உங்களுக்கு அனுப்ப இயலாமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன். காரணம் செக்கோஸ்லோவேகியா குடியரசிலிருந்து எந்த நாடுகளுக்கும் எந்த மதிப்பிலும் பணமனுப்ப இங்குள்ள சட்டம் அனுமதிப்பதில்லை. 

பிரபல மனிதர்களிடமிருந்து வழங்கப்படும் கையெழுத்திட்ட காகிதத்திற்கும் கையெழுத்திட்ட புகைப்படத்திற்கும் அவர்கள் ஏதாவது பணம் கேட்பதென்பது எனக்கு இதுவே முதல் தடவையாகும். 

இத்துடன் ஆட்டோகிராஃப்  அட்டையுடன் உரிய அஞ்சல் வில்லையும் (இணைக்கப்பட்டுள்ள கூப்பனுக்கானது இது - ரிப்போஸ் இன்டர்நேஷனல் அஞ்சல் மதிப்பினை சர்வதேச அஞ்சல் அமைப்பின் கீழுள்ள எந்த நாட்டின் சாதாரண அஞ்சலுக்கான அஞ்சல் வில்லைகளாக மாற்றிக் கொள்ள இயலும். அவ்வாறு இன்னொரு நாட்டிற்கு சாதாரண அஞ்சலை அனுப்ப இந்த அஞ்சல் மதிப்பினை பயன்படுத்திக் கொள்ள இயலும்) இணைத்துள்ளேன். ஆட்டோகிராமிற்காக சிறப்புக் கட்டணம் இந்தியாவில் கேட்கிறார்களா என எனக்குத் தெரியாது. இது வரைக்கும் என்னிடம் யாரும் எந்த நாட்டிலிருந்தும் இதற்காக சிறப்புக் கட்டணம் கேட்டது கிடையாது.

பிரபலமான மகாத்மா காந்தியின் ஆட்டோகிராஃபை என்னுடைய பெரும் சேகரிப்பில் வைத்துக் கொள்வதென்பது எனது அதீத ஆசையாக இருப்பதால் எல்லாவற்றிற்கும் நீங்கள் கேட்ட பணத்தை அனுப்ப எனக்கு விருப்பம்தான். ஆனால் நீங்கள் கேட்ட மாதிரி அனுப்புவதென்பது எனது சக்திக்கு அப்பாற்பட்டதாகும். அதனால் எந்த சிறப்புக் கட்டணமுமின்றி நான் வேண்டிக் கொண்ட ஆட்டோகிராஃபை இயலுமானால் தாங்கள் தயவுகூர்ந்து அனுப்ப அவசரமாக எழுத முனைந்தேன். 

ஒரு புதிய ஆட்டோகிராஃபுடன் ஈடான அஞ்சல் வில்லையும் இணைத்துள்ளேன். உங்களுக்கு குறிப்பாக மிகுந்த மரியாதைக்குரிய மகாத்மா காந்தி அவர்களுக்கு எனது சிறப்பான உண்மையான நன்றிகள். உலகின் மிகவும் பிரபலமான மனிதராக, செக்கோஸ்லோவேகியாவில் எல்லோராலும் மாபெரும் மனிதர்களில் ஒருவராக அறிந்தவராக அவர் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பார். 

உங்கள் மீது உண்மையான மிகுந்த பக்தியும் நன்றியும் கொண்டமேடம் அந்தோணி ஸ்டிராச்சோவா.
டெக்னிக்கல் எழுத்தரின் மனைவி,
பிராஹா 11, 
மிலாடோநோவிகோவா 22
அதற்கு காந்தி எழுதிய நெடிய பதில் கடிதம்...
(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com