அண்ணலின் அடிச்சுவட்டில்...12

எனது செயலாளருக்கு நீங்கள் அனுப்பிய குறிப்பினைப் படித்தேன். புகைப்படங்களை நான் வைத்துக் கொள்வதில்லை.
அண்ணலின் அடிச்சுவட்டில்...12

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
அன்புள்ள தோழிக்கு,

எனது செயலாளருக்கு நீங்கள் அனுப்பிய குறிப்பினைப் படித்தேன். புகைப்படங்களை நான் வைத்துக் கொள்வதில்லை. எனது ஆட்டோகிராஃபை நான் ஐந்து ரூபாய்க்கு அளிக்கிறேன். இது ஒரு விற்பனை அல்ல. ஆட்டோகிராஃப் கேட்பதென்பது சொல்லப் போனால் ஒரு பிளேக் போல பரவி விட்டது. அதனாலேயே  ஆட்டோகிராஃபிற்கு ஐந்து ரூபாயென கட்டணம் வைக்க நினைத்தேன். அந்தப் பணமெல்லாம் எனது சொந்த செலவிற்காக அல்ல. அவையெல்லாம் உலகத்தில் குறிப்பாக இந்தியாவில் சேவை அறக்கட்டளைப் பணிகளுக்காகவேயாகும். நமது மனித இனத்தின் ஒரு பகுதியினர் மதமென்ற பெயரால் தீண்டத்தகாதவர்களாக மதக் கொள்கைகளுக்கு மிகவும் எதிராகவே நடத்தப்படுபவர்களாக உள்ளனர். சரியான வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் குற்றங்களை விட  இன்னும் அதிக குற்றம் இழைக்கப் பட்ட இந்த மனிதர்களை மீட்பதற்காகவே இந்தப் பணம் கேட்கப்படுகிறது. என்னுடைய இந்தக் குறிப்பின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டால், இந்தப் பணத்தை உங்களுக்கு அனுப்ப இயலும் திறனிருந்தால் நீங்கள் ஐந்து ரூபாயோ அல்லது அதற்கு ஈடான தொகையோ அனுப்பலாம். மற்றபடி இந்தக் கடிதத்திலுள்ள எனது கையெழுத்தையே எனது ஆட்டோகிராஃபாக நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.
உங்கள் உண்மையுள்ள,
எம். கே. காந்தி.

ஆட்டோகிராஃப் கேட்ட பெண்மணிக்கு எந்தப் பணமும் அளிக்காமலேயே காந்தியின் கையெழுத்திட்டக் கடிதம் கிடைத்த போது அந்தப் பெண்மணி எந்த அளவிற்கு மகிழ்ந்திருப்பார்?
காந்தியுடைய செயலாளர்களில் சுதீர் கோஷும் ஒருவர். அவர்தான் காந்திஜியின் கடிதங்களை வெளிநாட்டுத் தூதர்களுக்கு நேரடியாகச் சென்று கொடுப்பார். இந்தியா சுதந்திரமடைந்ததுமே அவரை லண்டனில் கிருஷ்ணமேனனின் கீழ்,  மக்கள் தொடர்பு அதிகாரியாக அரசு நியமனம் செய்தது. கிருஷ்ணமேனனுக்கும் சுதீர் கோஷுக்கும் தினமும் தகராறு இருந்து கொண்டே இருந்தது. கிருஷ்ணமேனனைப் பலருக்கும் பிடித்தமில்லாமலேயே இருந்தது. நேருவுக்கு மட்டுமே அவர் பிடித்தமானவராக இருந்தார். அப்போது அங்கே ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் இருந்தார். அவரது பெயர் தோராத்தி ஹாவ்க். அவருக்கு அங்கே நடக்கும் எல்லாப் பிரச்னைகளும் தெரிய வந்தன. அவர் கிருஷ்ணமேனனைப் பற்றி காந்திக்கு கடுமையாக எழுதினார். அந்தக் கடிதம் எழுதிய காலக்கட்டத்தில் காந்தியின் இடுப்பிலிருந்த கடிகாரம் வேறு தொலைந்து போயிருந்தது. அந்த ஆங்கிலேயப் பெண்மணி அதையும் குறிப்பிட்டு காந்திக்கு கடிதம் எழுதி இருந்தார். நீங்கள் கடிகாரத்தை தொலைத்ததால் எல்லையற்ற நேரங்களுக்கு வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று எழுதி இருந்தார். அதாவது நீங்கள் கடிகாரம் பார்க்காமல் வேலை செய்பவரானதால் உங்களுக்கு கடிகாரம் தேவையில்லை என்பதுபோல் எழுதி இருந்தார். இறுதியில் நாட்டைப் பற்றியும் சொல்லிவிட்டு கிருஷ்ண மேனனைப் பற்றியும் கூறி இருக்கிறார். அந்தக் கடிதத்தின் எல்லாப் பகுதிகளையும் அரிஜனில் வெளியிட்ட காந்தி கிருஷ்ண மேனனை  குறித்தப் பகுதியை மட்டும் பென்சிலால் வெட்டி அதை தவிர்த்தார். கிருஷ்ண மேனனை ஒரு பாம்பைப் போன்றவரென ஒப்பிட்டு அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சுத்தம்... பரிசுத்தம்...
 காந்தியுடன் கல்யாணம் சேர்வதற்கு முன்னால் கல்யாணம் ஓர் ஆங்கில கலாசாரப் பாதிப்புள்ள மனிதனைப் போலவே இருந்தார். ஆங்கிலேயர்களைப் போலவே அழகாக ஆடம்பரமாக ஆடை  உடுத்துவார். சாதாரண காலணிகளுக்கு பதில் ஷூக்களே அணிந்து வந்தார். தினமும் அதற்கு பாலீஷ் போட்டு மிகுந்த பளபளப்பாக வைத்திருப்பார். அவர்களின் நாகரிகப் பாதிப்புகள் கல்யாணத்திடம் நிறைய ஒட்டி இருந்தன. 

காந்தியிடம் பணிக்கு சேர்ந்த பின்தான் கதராடை அணிவதையும் எளிய வாழ்க்கை வாழ்வதையும் கற்றுக் கொண்டார். காந்தியிடம் பணிக்கு சேர்ந்த போது காந்தி எளிமையான ஒரு காலணி அணிந்திருந்தார். கல்யாணமும் அப்போது ஷூவிலிருந்து சாதாரண காலணிக்கு மாறி இருந்தார். ஆனாலும் பாலீஷ் போடும் பழைய வழக்கம் கல்யாணத்திடம் மாறி விடவில்லை. அவர் தனது காலணிக்கு தினமும் பாலீஷ் போட்டு பளபளப்பாக போட்டு வந்தார்.

காந்தி ஒரே ஒரு ஜோடி காலணிதான் வைத்திருந்தார். அத்தோடு அவரது கீழாடைத் துண்டும் மேலாடைத் துண்டும் இரண்டு மட்டுமே இருந்தன. அவர் தேவைக்கு மேல் எதையும் வைத்திருப்பதில்லை. தேவைக்கு மேலிருப்பவையெல்லாம் திருட்டுப் பணமென்று சொல்வார். 

ஒரு நாள் கல்யாணம் தன்னுடைய காலணியை பாலீஷ் போட்டுக் கொண்டிருந்த போது காந்தியின் கருப்பு தோலாலான காலணியைப் பார்த்தார். அது சிறிது பளபளப்பு குறைவாக இருந்தது. உடனே அதை எடுத்து பளபளவென பாலீஷ் போட்டு வைத்தார். 

அடுத்த நாள் காந்தி வெளியே செல்லும் போது காலணியினை அணிய வந்த போது அவரது பளபளக்கும் காலணியைப் பார்த்தார். மனுவிடம் "'இது என்னுடைய செருப்பில்லை போலிருக்கிறதே'' எனக் கூறினார். 

"ஏன் அப்படி சொல்கிறீர்கள்?'' என்று மனு அவரிடம் கேட்டாள். 
உடனே காந்தி "இந்த செருப்பு மிகவும் புதிதாக இருக்கிறது. அதனால்தான் என்னுடைய செருப்பு போல் இல்லையென்றேன்'' என்று கூறினார். 

உடனே மனு  "இந்தச் செருப்பு உங்களுடையதுதான். கல்யாணம் அதற்கு பாலீஷ் போட்டிருக்கிறார்'' என்று கூற "ஓஹோ அப்படியா'' என்று கூறி அந்தக் காலணியைப் போட்டுக் கொண்டார். 

அதற்கு பின்னரும் அவரது காலணியை தேவை ஏற்படும் போதெல்லாம் அடிக்கடி பாலீஷ் போடுவார் கல்யாணம். அவர் காரிலேயே செல்வதால் அவ்வளவு தூரம் அவை அழுக்காவதில்லை. அதனால் அவருடைய காலணிகளைத் தினமும் பாலீஷ் போடுவதற்கான தேவை இருப்பதில்லை. 

பிர்லா மாளிகையில் கல்யாணத்தின் அறை வெளி வாசலுக்கு பக்கத்திலிருந்தது. அன்றாடம் காந்தியைப் பார்க்க நிறைய மக்கள் வருவார்கள்.. அவரை பேட்டி எடுக்கவும் பலர் வருவார்கள்.. அவர்களது சந்திப்பிற்கான அனுமதியைப் பெற்ற பின் கல்யாணம்தான் அவர்களை காந்தியிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கு வசதியாக வாசலுக்கு பக்கத்து அறையே அவரின் இருப்பிடமாக இருந்தது. கல்யாணத்தின் அறைக்கு பக்கத்தில் ஒரு சிறிய புல்வெளி இருந்தது.

வாசலுக்கும் அந்த அறைக்குமிடையே உள்ள அந்தப் புல்வெளி இருபது அடி நீளத்திலிருக்கும். காந்தியைப் பார்க்க வரும் பொது மக்களை அந்த புல்வெளியில் உட்காரச் சொல்வார் கல்யாணம். காந்தியடிகள் வசிக்கும் அறை அங்கிருந்து சுமார் ஐம்பதடி தூரத்தில் அந்த பங்களாவின் உட்பகுதியிலிருக்கும். ஓர் ஐம்பது அறுபது பேர் சேர்ந்ததும் அவர்களையெல்லாம் கூட்டிக் கொண்டு சென்று ஃபைல் பாஸ் பண்ணச் சொல்லுவார் கல்யாணம். அவர்களை அங்கு நிற்கவோ உட்காரவோ கூட அனுமதிக்க மாட்டார். 

காந்தி அங்கு உட்கார்ந்து அவருடைய வேலைகளை செய்து கொண்டேயிருப்பார். பார்க்க வருபவர்கள் காந்தியை நமஸ்கரித்து விட்டு மட்டும் செல்லலாம். அவர்களை அங்கு நெடுநேரம் நிற்க கல்யாணம் அனுமதிப்பதில்லை. 

காந்தி ஒரு நாள் பிர்லா மாளிகையிலிருக்கிற போது மவுண்ட் பேட்டனை பார்ப்பதற்காக சென்றார். அப்போது கல்யாணத்தின் தோளில் கையை போட்டுக் கொண்டு அவரையும் அழைத்துச் சென்றிருந்தார். காரில்தான் பயணம். மவுண்ட் பேட்டன் வீட்டிற்கு சென்ற போது காந்தி அவரிடம் முக்கியமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். கல்யாணம் வெளியேதான் காத்திருந்தார். அவர் பேசி முடித்து விட்டு வெளியே வந்ததும் அவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை மிக அதிகமாக இருந்தது. அங்கேயே சிறுநீர் கழிக்க அவருக்கு விருப்பமில்லை . வந்த இடத்தில் அவரது வீட்டில் சிறுநீர் கழிப்பதை சிரமமாக அவர் கருதி இருக்க வேண்டும். வெளியே வந்ததும் கல்யாணத்திடம் "ஓட்டுநரிடம் சீக்கிரமாக போகச் சொல் எனக்கு பாத்ரூம் போக வேண்டும்'' என்றார். 

பிர்லா ஹவுஸ் வந்ததுமே "'உன்னுடைய அறை எங்கே'' என்றார் கல்யாணத்திடம். காந்தியினுடைய அறைக்கு செல்லுமளவிற்கு கூட அவரால் தனது இயற்கையின் அழைப்பை கட்டுப்படுத்த இயலவில்லை. அங்கே காந்தியைக் காண்பதற்காக மக்கள் புல்வெளியில் காத்துக் கொண்டிருந்தனர். கல்யாணம் தனது அறையைக் காட்டினார். அந்த அறையை ஒட்டிய குளியலறைக்குள் நுழைந்தார். உள்ளே கழிப்பறையானது மிகவும் அசுத்தமாக மூக்கைத் துளைக்கிற வாடையுடன் சுகாதாரமற்று இருந்திருக்கிறது. 

அவரைப் பொறுத்த வரை கல்யாணம் எல்லோரையும் விட சுத்தமாகவும் மிகுந்த அழகாகவும் நேர்த்தியாகவும் ஆடை அணிபவனென்று அவருக்குத் தெரியும்.

கல்யாணம் வெளியே காத்திருக்க, கழிப்பறையிலிருந்து வெளியே வந்த அவரின் முகம் மிகவும் சுருங்கி இருந்தது. அவரது அறையை நோக்கி நடந்து கொண்டே கல்யாணத்தை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தார். பின் மிகுந்த கண்டிப்புடன் "நீ என்ன இவ்வளவு அழகா சட்டை எல்லாம் போட்டுக்கறே. ஆனா கழிப்பறையை மட்டும் இவ்வளவு அசிங்கமா வச்சிருக்கிறாயே'' என்று வருத்தப்பட்டார்.. 

அப்போதுதான் கல்யாணத்திற்கு உண்மையை அவரிடம் தெளிவு படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. 

விளக்கமாகக் கூறினார்: "உங்களைத் தேடி அன்றாடம் நாற்பது ஐம்பது பேர் வருகிறார்களே... அவர்களெல்லாம் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அப்போது அவர்களில் பலருக்கும் கழிப்பறை செல்ல வேண்டிய அவசரம் வருகிறது. அதனாலேயே என்னுடைய அறையிலுள்ள கழிப்பறைக்கு பின்னால் உள்ள கதவை பார்வையாளர்களின் வசதிக்காக எப்போதும் திறந்து வைத்திருப்பேன். அதை பயன்படுத்துகிற பல பார்வையாளர்கள் கழிப்பறையை பயன்படுத்தி விட்டு தண்ணீரே விடுவதில்லை.. அதனால்தான் அவ்வளவு மோசமாக இருக்கிறது. நான்தான் அவ்வப்போது அதை சுத்தம் செய்து வருகிறேன்'' என்று கூறினார் கல்யாணம். 

அதைக் கேட்ட காந்தியடிகள் அவரைக் கண்டித்ததற்காக வருந்தினார். 
கல்யாணத்தைப் புன்னகையுடன் ஒரு பார்வை பார்த்தார்.
(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com