அண்ணலின் அடிச்சுவட்டில்... 5

காந்திஜி பாலருந்துவதை திடீரென ஒருநாள் நிறுத்தி விட்டார். அதற்கும் காரணம் இருக்கிறது. ஒருநாள் காந்திஜியிடம் ஒருவர்,
அண்ணலின் அடிச்சுவட்டில்... 5

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்

காந்தி எந்த அளவிற்கு உயிர்களை நேசித்தாரென்பதற்கு இன்னொரு சம்பவமும் உண்டு. 

காந்திஜி பாலருந்துவதை திடீரென ஒருநாள் நிறுத்தி விட்டார். அதற்கும் காரணம் இருக்கிறது. ஒருநாள் காந்திஜியிடம் ஒருவர், "கறவைக்காரர்கள்  பால் அதிகம் கறப்பதற்காக குச்சியால் பசுவின் பின் பகுதியில் குத்திக் குத்தி பாலை அதிகமாக கறக்க வைக்கிறார்கள்'' என்று சொன்னார். இதைக் கேட்ட காந்திஜி மிகுந்த அதிர்ச்சி அடைந்து அப்படி விலங்குகளைச் சித்திரவதை செய்து கறக்கும் பால் இனி தனக்கு வேண்டாமென்று பால் குடிப்பதையே நிறுத்தி விட்டார். ஆட்டின் பாலை அவ்வாறு பின்னால் கம்பால் குத்திக் கறக்கும் வழக்கமில்லாததால் ஆட்டுப்பாலை மட்டும் அருந்தினார்.

கல்யாணம் கூறுவார்: "அகிம்சை என்றால் என்னவென்றே எனக்கு அப்போது தெரியாமல் இருந்தது. வன்முறை என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். ஒருவரை அடித்துக் காயப் படுத்துவது வன்முறை. ஆனால் அகிம்சை என்றால் என்னவென்று எனக்கு புரியவில்லை'' என்பார். அதற்கு ஆஸ்ரம நண்பர் ஒருவர்தான், "அகிம்சை என்றால் எந்த உயிரையும் கொல்லக் கூடாது, துன்புறுத்தக் கூடாது அதுவே அகிம்சை'' என்று அகிம்சைக்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதன் பின் அவர் கூறிய மாதிரியே அகிம்சை முறையினைக் கடைப் பிடித்து அங்கேயே தங்கி இருந்தார் கல்யாணம்.

அகிம்சை என்பதற்கு கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் விளக்கம் நம் நினைவிற்கு வருகிறது. 

வீரம் என்பது கொலை அல்ல. 
வெற்றியும் அதனால் நிலை அல்ல. 
குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த 
கோடாரி ஒரு புறத்தைப் பிளக்க 
ரத்தம் வர தடியால் ரணம் உண்டாக்க 
நாற்புறமும் பலர் உதைக்க 
அத்தனையும் ஒருவர் 
பொறுத்துக் கொள்வதே அகிம்சை. 
அதனை காந்தியடிகள் 
கடைப்பிடித்து வெற்றி கண்டார் 

என்று ராமலிங்கம் பிள்ளை அகிம்சைக்கு விளக்கம் தந்திருக்கிறார்.

டெல்லியிலிருந்து ஆஸ்ரமம் வந்த அன்று கல்யாணத்திற்கு மிகவும் பசியாக இருந்தது. அவர்கள் ஆஸ்ரமத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்களென்றும் எதுவும் முழுமையாக அவருக்குப் புரியாமலேயே இருந்தது. உணவுக்கு என்ன செய்கிறார்கள்? அவர்கள் எவ்வாறு இங்கு வாழ்கிறார்கள்? என்று அவருக்கு மிகுந்த ஆச்சரியமாகவும் இருந்தது. 

ஒரு மணி அடித்தது. அங்கிருந்த ஒருவர் கல்யாணத்தை உணவளிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே மிகவும் எளிமையான உணவு இருந்தது. சப்பாத்தியும் பருப்பும் இருந்தது. சிரத்தையுடன் சாப்பிட்டார். தரையில் உட்கார்ந்தே சாப்பிட வேண்டும். அவரவர் உபயோகித்த பாத்திரங்களை அவரவரே சுத்தம் செய்ய வேண்டும். இதையெல்லாம் கல்யாணம் ஏற்கெனவே டெல்லியிலேயே செய்து, பழக்கமாகக் கொண்டிருந்ததால் அவருக்கு அது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. உணவோடு அவர்களது பழக்க வழக்கங்களும் மிகவும் பிடித்துப் போனது. 

ஆஸ்ரமத்தில் கல்யாணம் நிறைய கற்றுக் கொண்டார். தோட்டக்கலை, சமையற்கலை, பொருளாதாரம், ஒழுங்கு முறை, நேரம் தவறாமை, சுத்தம் சுகாதாரம், எல்லாவற்றையும் பற்றி அங்கு முழுமையாகத் தெரிந்து கொண்டார். டெல்லியிலிருக்கும் போது இவை குறித்து கல்யாணம் தெரிந்து வைத்திருந்தாலும் அதைவிட அதிகமாக இங்கு கற்றுக் கொண்டார். ஆஸ்ரமத்தின் எதிர்பார்ப்புகளுக்கேற்றாற் போல் அவர் அங்கு பணியாற்றினார். 

அங்குள்ள கழிப்பறைகள் கூரையால் வேயப்பட்டு ஒரே வரிசையில் இருந்தன.  அவையனைத்தும் தட்டியிட்டு தடுக்கப்பட்ட அறைகளாக இருந்தன. சுமார் மூன்றடி நீளத்திலும் நான்கடி அகலத்திலுமாக அவை இருந்தன. அதற்குள் நுழைந்ததுமே கல்யாணத்திற்கு மிகவும் ஆச்சரியமளிக்கும் விதமாக ஒரு குழி இருந்தது. அதன் ஒரு மூலையில் மண் குவிக்கப் பட்டிருந்தது. அதனருகே தேங்காய் கொப்பரையில் கைப்பிடி இணைக்கப்பட்ட ஓர் அகப்பையும் இருந்தது. மலம் கழித்தபின் அந்த அகப்பையில் மண்ணை எடுத்து மலத்தின் மேல் போட்டு மூடி விட வேண்டும். பக்கத்தில் ஒரு வாளி நிறைய தண்ணீரும் வைத்திருந்தார்கள்.

முதலில் கழிப்பறையானது கல்யாணத்திற்கு ஒரு கடினமான அனுபவத்தைக் கொடுத்தாலும் அது மிகவும் சுகாதாரமானதாக இருந்தது. எந்த மோசமான வாடையையும் அது பரவ விடவில்லை. கொசுக்கள் ஈக்கள் அங்கே பறக்கவில்லை. முழுச் சுகாதாரமான அனுபவத்தை அது தந்தது. காந்தியின் தலைமை அலுவலகம் போல் செயல்பட்ட இந்த ஆஸ்ரமத்திலேயே காந்தியின் முக்கிய சத்திய சோதனைகள் நிகழ்ந்திருக்கின்றன.

காந்திஜியின் விடுதலை
கல்யாணம் காந்தியின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த போது மகாத்மா காந்திஜி ஆகாகான் மாளிகையிலேயே சிறையிலிருந்தார். காந்திஜியின் முதல் நிலைச் செயலாளரான மகாதேவ தேசாய் மிகவும் முக்கியமானவராக காந்தியைப் போலவே மதிக்கப்பட்டார். அப்போது கல்யாணத்திற்கு காந்தியின் முதல்நிலை செயலாளரைத் தெரியாது. அவரோடு ஒப்புநோக்கும் போது தன்னை ஒரு சாதாரண எழுத்தர் என்பார் கல்யாணம். காந்தியின் மனைவியையும் கல்யாணம் அறிந்திருக்கவில்லை. காரணம் அவர்கள் இருவருமே காந்திஜியோடு அங்கேயே சிறையிலிருந்தனர். 

1942 ஆகஸ்ட் 9-ஆம் தேதி "வெள்ளையனே வெளியேறு' இயக்கம் போராட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே அவரது செயலாளர் மகாதேவ தேசாய் மாரடைப்பில் மரணமடைந்தார். அவர் மரணமடைந்த நாள் ஆகஸ்ட் 15. அப்போது அவருக்கு 50 வயதுதான். அவரின் மரணத்தை காந்திஜியால் நம்ப இயலவில்லை. அந்த சம்பவத்தைக் குறித்து ஆஸ்ரமத்தில் பலரின் கருத்தும் கல்யாணத்தின் மனதில் இன்றும் பசு மரத்தாணி போல் இருக்கிறது.

மகாதேவ தேசாயின் மரணத்தில் காந்திஜி மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார். அவரது உடலருகே வந்த காந்தி "கொஞ்சம் கண்ணை விழித்துப் பார். உனக்கு உயிர் வந்து விடும்'' என்றாராம். காந்திக்கும் மகாதேவ தேசாய்க்கும் 23 வயது வித்தியாசம்.

"நீதான் எனக்கு தகனச் சடங்குகள் செய்வாயென்று நினைத்தேன். ஆனால் உனக்கு தகனச் சடங்குகள் செய்யும் சூழல் உருவாகிவிட்டதே'' எனக் கூறி காந்திஜி கண்ணீர் விட்டிருக்கிறார். மகாதேவின் மரணம் கஸ்தூர்பாவையும் உலுக்கியது. 

காந்திஜியே மகாதேவ தேசாயின் இறுதிச் சடங்குகளைச் செய்தார். ஆகாகான் மாளிகையிலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மகாதேவ தேசாயின் மரணம் காந்திஜிக்கு ஒரு பேரிழப்பாக இருந்தது. அதற்கு காரணம் காந்திஜி எதற்கும் எல்லாவற்றிற்குமாய் மகாதேவ தேசாயையே நம்பி இருந்தார். அவ்வாறு அவர் காந்திஜியின் வலது கரமாய் விளங்கினார். அங்ஙனம் அவர் ஒரு மாமனிதராய் விளங்கினார். 

அவரை அடுத்து 1944 பிப்ரவரி 22 ஆம் தேதி கஸ்தூர்பா காந்தி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். அந்த நேரத்தில் பிரிட்டனில் பென்சிலின் கண்டுபிடிக்கப் பட்டிருந்தது. 

தேவதாஸ் காந்தி தன் அம்மாவின் சிகிச்சைக்காக பென்சிலின் வாங்க முற்பட்டார். அதற்கு காந்தி மறுத்து விட்டார். அவர் எந்த அலோபதி மருந்துமே எடுப்பதில்லை. அன்று கஸ்தூர்பா காந்தி அந்த மருந்தை எடுத்திருந்தால் ஒருவேளை பிழைத்திருக்கலாம். 

இருவரும் இறந்து போக, காந்திஜியும் 1944 மே மாதம் மலேரியாவால் பாதிக்கப்பட்டார். நிறைய மருத்துவர்கள் வந்து பார்த்தும் அவருக்கு நோய் குறையவில்லை. அவர் சிறையிலிருந்து அங்கேயே இறந்துவிட்டால் அது ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமென ஆங்கிலேயர்கள் அஞ்சினர். அதனால் பிரிட்டிஷார் காந்திஜியை விடுதலை செய்ய எண்ணினர். எந்த நிபந்தனைகளுமின்றியே காந்திஜியை 1944 மே 19 அன்று விடுதலை செய்தனர். அந்த அளவிற்கு ஆங்கிலேயர்கள் காந்திஜியை நன்றாகப் பாதுகாத்து வந்தனர். அவர்களை எதிர்த்து காந்திஜி சுதந்திரத்திற்காகப் போராடினாலும் ஆங்கிலேயர்கள் எல்லாருமே காந்திஜிக்கு நண்பர்களாகவே இருந்தனர். ஆங்கிலேயரின் ஆட்சியை மட்டுமே அவர் எதிர்த்தார். ஆங்கிலேயர்களை அவரது நண்பர்களாகக் கருதினார். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய நற்பழக்கங்கள் நிறைய இருப்பதாக அடிக்கடி கூறுவார். 

கல்யாணம் சேவாகிராமம் ஆஸ்ரமத்தில் இருக்கும் அத்தருணத்தில் ஆஸ்ரமத்திலுள்ள சிலர் காந்திஜி விடுதலையாகிறாரென பேசிக் கொண்டனர். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் விடுதலையாகும் காந்திஜியைப் பார்க்க அவர்கள் தங்கள் ஆவலை வெளிப்படுத்தினர். அவர்களிடம் தானும் காந்திஜியைப் பார்க்க வேண்டுமென்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தார் கல்யாணம். 

பூனாவிலிருந்து விடுதலையாகி பம்பாய் வந்த காந்திஜி, கப்பல் தொழில் மாக்னெட்டான சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் தலைவர் சாந்தி குமார் மொரார்ஜியுடன் ஜுஹூவில் அவரது வீட்டில் தங்கி இருந்தார். 

காந்தியுடன் முதல் சந்திப்பு
 ஆஸ்ரமத்திலிருந்து ஒரு குழுவாக இரண்டு மூன்று பேர் காந்திஜியைச் சந்திப்பதற்காக பம்பாய் புறப்பட்டனர். அவர்களோடு கல்யாணமும் பயணமானார். சேவாகிராமம் ஆஸ்ரமத்திலிருந்து பம்பாய் செல்வதற்கு அப்போதைய கட்டணம் எட்டு ரூபாயோ, பத்து ரூபாயோ இருந்தது. கல்யாணத்திற்கான பயணச் செலவை அவரே செலவிட்டார். பம்பாயில் ஒரு ஹோட்டலில் தங்கினர். பின் ஒரு பேருந்தில் ஜுஹூ சென்றனர். அங்கே தனது வாழ்க்கையில் முதன் முதலாக பிரபலமாக அறியப்படுகிற காந்தியைப் பார்க்கப் போகிற ஆர்வத்தில் இருந்தார் கல்யாணம். 

அந்த வீடு மிகப் பெரிய மாளிகையாக இருந்தது. மற்றவர்களோடு முதலறையின் வாசலில் நின்று கொண்டிருந்தார் கல்யாணம். அப்போது முதலறையில் கோவணத்துடன் மெல்லிய ஆடையுடன் திறந்த உடலுடன் ஒரு மனிதரைப் பார்த்தார். முதலில் அவரை அந்த வீட்டின் வேலைக்காரனாக கருதினார் கல்யாணம். அவர் அங்கே நின்று கொண்டே நல்ல உடை அணிந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டிருந்த நபர் தனது வேலைக்காரனிடம் ஏதோ வேலை செய்ய சொல்லிக் கொண்டிருக்கிறாரென கல்யாணம் நினைத்தார். அவரிடம் பேசிய அந்த மனிதர் சென்றதும், வாசலில் நின்றவர்களைப் பார்த்துக் கொண்டே கீழே இருந்த மெத்தையில் வந்து உட்கார்ந்தார். அருகில் ஒரு தலையணையும் இருந்தது. அவரின் முன்பு ஒரு சிறிய மேசை இருந்தது. வாசலில் நின்று கொண்டிருந்த அவர்களை அழைத்தார். யார் இந்த மனிதரென்று மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தார் கல்யாணம். அவரோடு வந்தவர்களும் வணக்கம் தெரிவித்து அவரின் முன் உட்கார்ந்தார்கள். பின் கல்யாணத்தை அவரிடம் அறிமுகம் செய்தபோதுதான் அவர்தான் காந்திஜி என்று தெரிந்து கொண்டார். காரணம் அதற்கு முன் அவரது முகத்தை ஓரளவே புகைப்படத்தில் பார்த்திருக்கிறார். அவரது முகம் மனதில் நிற்கிற அளவிற்கு அவரது மனதில் அப்போது அவ்வளவு ஆழமாகப் பதிவாகவில்லை. இன்னும் அவரது உடல் வடிவைப் பார்த்ததில்லை. 

காந்திஜி என்று அறிந்த பின் அவர் குளிக்கப் போவதற்காக அந்த ஆடையிலிருப்பதாக கல்யாணம் முதலில் நினைத்துக் கொண்டார். பின்புதான் அதுவே அவரது நிரந்தர ஆடையென்பதைத் தெரிந்து கொண்டார். அவரது ஆடையைப் பற்றிக் கூறுகிற போது ஒரு சுவையான சம்பவம் நம் நினைவுக்கு வருகிறது.
 (தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com