அண்ணலின் அடிச்சுவட்டில் 6...

ஆங்கிலேயர்கள் வழக்கமாக பிளஸ் 4 என்ற ஒரு வகை ஆடை அணிவர். பிளஸ் 4 என்பது ஆங்கிலேயர்களில் குறிப்பாக கோல்ஃப் விளையாடுவோர் அணியும் ஆடையாகும்.
அண்ணலின் அடிச்சுவட்டில் 6...

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்

ஆங்கிலேயர்கள் வழக்கமாக பிளஸ் 4 என்ற ஒரு வகை ஆடை அணிவர். பிளஸ் 4 என்பது ஆங்கிலேயர்களில் குறிப்பாக கோல்ஃப் விளையாடுவோர் அணியும் ஆடையாகும். அது கால்மூட்டுக்கு மேற்பகுதி அகலமாகவும் மூட்டுக்கு கீழ்பகுதி உடலோடு ஒட்டி குறுகலாகவும் அணியப்படும் ஒருவித கீழாடையாகும். காந்தியடிகள் பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்றபோது தனக்கே உரிய வேட்டியுடனான அரையாடையுடன் நுழைந்தாராம். எல்லோரும் அவரிடம் இந்த ஆடையிலேயே அரண்மனைக்குச் செல்கிறீர்களேயென வியப்புடன் கேட்டனர். அதற்கு காந்தியடிகள் நகைச்சுவையாக, "நீங்கள் பிளஸ் 4 அணிகிறீர்கள். நான் மைனஸ் 4 அணிந்திருக்கிறேன்'' என்றாராம்.

கல்யாணத்தைப் பொருத்தவரை காந்திஜியின் அந்த எளிமையான உடையும் அவரைச் சந்தித்த முதல் அனுபவமும் விநோதமானது.

அவரோடு வந்த ஆஸ்ரம நண்பர்களில் ஒருவர் கல்யாணத்தை காந்திஜியிடம் அறிமுகம் செய்தார். "ஆஸ்ரமத்தில் பணியாற்றுவதற்காக உங்கள் புதல்வர் தேவதாஸ் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்டவன் இந்தப் பையனென்று'' காந்தியிடம் கூறினார் அந்த அறிமுகம் செய்த நண்பர்.

கல்யாணம் மிகுந்த பணிவுடம் கைகளைக் கூப்பிக்கொண்டு நின்றுகொண்டு இருந்தார். காந்தி அவரிடம் சில கேள்விகள் கேட்டார்.
கல்யாணத்தால் எதுவும் பதில் சொல்ல இயலவில்லை.
அவரிடமிருந்து "இஷ் இஷ்'ஷென்ற சப்தமே கேட்டதால் அவர் கூறியது எதுவுமே கல்யாணத்திற்கு புரியவில்லை. மேலும் அவருடைய குரல் மிகவும் தாழ்ந்த அளவிலிருந்தது. அவர் உரக்கப் பேசவும் இல்லை. கிசுகிசுப்பதுபோல் இருந்தது. குனிந்து அவரின் குரல் வரும் திசைக்கு வெகு அருகே செவிகளைக் குவித்து உற்றுக் கவனித்தார் கல்யாணம்.
இன்னும் புரியவில்லை. இன்னும் குனிந்தார்.
அவர் கூறியது புரியவே இல்லை.

இன்னும் குனிய முனைந்தபோது காந்திஜி சைகையில் கல்யாணத்தை உட்காரச் சொன்னார்.

காதிலே விழுந்த வார்த்தைகளை ஒன்றோடு ஒன்றாகக் கோர்த்து ஓரளவு அவர் என்ன கேட்டார் என்று ஊகித்துக் கொண்டார் கல்யாணம்.

அவர் கேட்ட கேள்வியானது "ஆஸ்ரமத்திலே வேலை செய்யறதுக்கு உனக்கு விருப்பம் இருக்குதா?'' என்று.
கல்யாணம் "ஆம்'' என்று பதில் சொன்னார்.
"பெற்றோர்கள் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்.
"ஆமாம்'' என்றார்.
"அவர்கள் உன்னை சார்ந்து இருக்கிறார்களா?'' என்று கேட்டார்.
அதற்கு, "இல்லை'' என்று பதில் சொன்னார்.
"அவர்கள் தனியாக வேலை செய்கிறார்களா அல்லது அரசாங்கத்தில் வேலை செய்கிறார்களா?'' என்று கேட்டார். அவர் இவ்வாறு கேட்டது அவர்கள் கல்யாணத்தை நம்பி இருந்தால் கல்யாணம் அவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டி இருக்கும். அந்த அளவிற்கு அவரால் சம்பளம் கொடுக்க இயலுமா என்பதுதான்.

"எவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்டார்
"இருநூற்று ஐம்பது'' எனச் சொன்னார். உடனே அவர் அதிக வருவாயை அவரிடம் கேட்கப் போகிறாரோவெனக் கருதி "ஓ'வென்று வாயைப் பிளந்து "என்னால் அவ்வளவு சம்பளம் தர இயலாது'' என்று சொன்னார்.
"அறுபது ரூபாயே சம்பளமாக தர முடியும்'' என்றும் கூறினார்.
கல்யாணம் அதற்கு, "நீங்கள் கூறுகிற அந்த அறுபது ரூபாயும் வாங்காமல் வேலை செய்யத் தயாராக இருப்பதாக கூறினார்.
அவர் கேட்ட கடைசிக் கேள்வி "தட்டச்சு பணி தெரியுமா?'' என்பதுதான்.
"தெரியும்'' என்றார்.

ஏன் அவர் இந்த கேள்வியைக் கேட்கிறாரென்று கல்யாணத்திற்கு நிரம்ப ஆச்சரியமாக இருந்தது. அதற்கு காரணம் அவருக்கு அலுவலக எழுத்து சார்ந்த இந்தப் பணிகளில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தது. அதை வெறுக்கவே செய்தார். அந்த மாதிரி பணிகளை விட்டு விலக விரும்பியே, உடல்ரீதியான ஆஸ்ரமப் பணிகளை செய்வதற்காகவே இங்கு வந்தார். எப்படி இருந்தாலும் அவர் ஏற்கெனவே பிரிட்டீஷாரிடம் வேலை செய்ததினால் தட்டச்சு தெரிந்தவராகவே இருந்தார். காரணம் பிரிட்டீஷ் அலுவலகப் பணி செய்யும் அனைவருக்கும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். அந்த அளவில் கல்யாணமும் தட்டச்சுப் பணியினைத் தெரிந்திருந்தார்.

அன்று காந்திஜியுடனான கல்யாணத்தின் முதல் சந்திப்பு இவ்வாறு இருந்தது.
அங்கிருந்து கிளம்பியதும் இரண்டு நாட்கள் அவர்கள் பம்பாயில் தங்கினர். பின் சேவாகிராமத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது காந்திஜி அவர்களோடு ஆஸ்ரமத்திற்கு உடனடியாக வரவில்லை. அவர் பம்பாயிலேயே சில நாட்கள் தங்கி இருந்தார். அவருக்கிருந்த மலேரியா மற்றும் சில நோய்களுக்கு இயற்கை சிகிச்சை செய்வதற்காக, அங்கிருந்து பஞ்சாக்கனி போன்ற சில இடங்களுக்குச் சென்று விட்டு மூன்று மாதங்களுக்குப் பின்னரே ஆஸ்ரமத்திற்குத் திரும்பினார்.
அவர் வரும்வரை கல்யாணம் அந்த ஆஸ்ரமத்திலுள்ள நிலங்களில் விவசாயப் பணிகளை மிகுந்த உற்சாகத்துடன் செய்து கொண்டிருந்தார். மதிய நேரங்களில் உணவு உட்கொண்டபின் சில அலுவலகப் பணிகள் செய்வார். காந்திஜி ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டிருந்த காலங்களிலும் காந்திஜியின் பெயரில் பல கடிதங்கள் சேவாகிராமம் ஆஸ்ரம முகவரிக்கு வந்தன. அவர் சிறையிலிருந்ததால் ஆகாகான் மாளிகை முகவரிக்கு அவற்றை திருப்பி அனுப்பவும் சட்டம் அனுமதிக்கவில்லை. ஆகாகான் மாளிகை முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களும் இங்கேயே வந்தன.

உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தியா முழுவதிலுமிருந்தும் நிறையக் கடிதங்கள் சேவாகிராமம் ஆஸ்ரமத்திற்கு வந்தன. அவை வெளிநாட்டு மொழிகளிலும் இந்திய மொழிகளிலுமாக இருந்தன. தமிழ், மலையாளம், தெலுங்கு, மராட்டியம், பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மானிய மொழி என பல்வேறு மொழிகளில் இருந்தன. அந்தக் கடிதங்களைச் சேர்த்து வைத்து அவற்றை மொழி வாரியாகப் பிரித்து வைப்பது கல்யாணத்திற்குக் கொடுக்கப்பட்ட பணியாக இருந்தது. காரணம் ஆஸ்ரமத்திலிருந்த பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. அவர்கள் முழுக்க முழுக்க கிராமவாசிகளாக இருந்தனர். கல்யாணம் அந்த ஆஸ்ரம வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்தார்.
சுகமான ஒரு தனி உலகம்
காந்திஜியிடம் சேர்ந்தபோது கல்யாணத்திற்கு 21 வயது. அப்போது ஒரு வங்கியில் கல்யாணம் கணக்கு வைத்திருந்தார். அதில் சேமிப்பாக அவரது ஒரு வருட வருமானமான 2600 ரூபாய் இருந்தது. காந்திஜியிடமே அவருக்கு உணவும் உறைவிடமும் கிடைத்துவிட்டதால், 2000 ரூபாயை காந்திஜியிடமே கொடுத்துவிட்டு 600 ரூபாயை மட்டும் தனது அவசரச் செலவிற்காக வைத்திருந்தார்.

ஆஸ்ரமமானது எளிய குடிசைகளைக் கொண்டிருந்தாலும் அங்கே எல்லாப் பொருட்களும் மிகவும் ஒழுங்காக சுத்தமாக அதனதன் இடத்திலிருந்தன. காந்தி தங்கியிருந்த குடிசையில் நூல் நூற்கும் ராட்டினம் மற்றும் அவரது எளிய உடமைகள் மட்டுமே இருந்தன. புத்தகங்களுக்கான அலமாரி ஒன்று இருந்தது. வெளியே காந்திஜி ஓய்வெடுப்பதற்காக ஆஸ்ரமவாசிகளால் செய்யப்பட்ட ஒரு கட்டிலும் இருந்தது. அதனை அடுத்து இரண்டு அறைகளைக் கொண்ட இன்னொரு குடிசை காந்திஜியின் அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டது. அங்கும் மர நாற்காலிகளோ மேசைகளோ கிடையாது. அங்கே ஒரு மூலையில் இரண்டு இலக்க எண்களுடன் ஒரு தொலைபேசி இருந்தது. அதனை உயரமான இடத்தில் வைத்திருந்ததால் நின்று கொண்டே அதில் பேச முடியும். தட்டச்சு செய்ய சிறிய டைப்ரைட்டர் இயந்திரம் இருந்தது. கல்யாணம் உட்பட ஆஸ்ரம பணியாளர்கள் தரையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டு ஒரு பெரிய அட்டையினை மடியினில் வைத்து எழுதுவர். முக்கிய கோப்புகளை பாதுகாப்பாய் வைக்க ஒரு இரும்பு அலமாரி இருந்தது. ஆஸ்ரமத்தில் நவீன கழிப்பறைகளில்லாமல் இருந்தாலும் அப்போதைய குழியிடப்பட்ட கழிவறைகள் இன்றைய நவீன கழிப்பறைகளைப் போல் மிகவும் சுத்தமாக இருந்தன. எந்த விதமான துர்நாற்றமேதுமின்றி நல்ல முறையிலிருந்தன.

காந்திஜி ஆஸ்ரமத்திற்கு திரும்பியபோது ஏற்கெனவே கூறியதுபோல் கல்யாணம் மட்டுமே அங்கே ஆங்கிலம் தெரிந்தவராக இருந்தார். அதனால் அவருக்கு அங்கே அலுவலக வேலையையே செய்வதற்கான சூழ்நிலை இயற்கையாக உருவானது. காந்திஜி வந்தபோதே என்ன மொழிகள் உனக்கு தெரியுமென்று கல்யாணத்திடம் கேட்டார். கடிதக் கட்டுகளை எடுத்து வரச் சொன்னார். கல்யாணம் அவற்றைக் கொண்டு அவரிடம் கொடுத்தார். கல்யாணம் மொழிவாரியாக முறையாகக் கடிதங்களை அடுக்கி வைத்திருந்தது அவரை நன்றாக கவர்ந்திருக்க வேண்டும். அன்றிலிருந்து அவரின் அலுவலக ரீதியான உதவிகளுக்கு கல்யாணத்தையே நாடினார். அவ்வாறு கல்யாணத்திற்கு அலுவலக வேலையிலேயே தன்னை அர்ப்பணிக்க வேண்டியதாயிற்று. காந்திஜி வாழுகிற எளிய உயர்ந்த வாழ்க்கையை கல்யாணம் அருகிலிருந்து உற்று நோக்கி உணர்ந்தார். மற்றவர்கள் செய்யாத மற்றவர்களால் செய்ய இயலாத பல செயல்களை காந்திஜியிடம் அவரது வாழ்க்கை முறையில் கண்டார்.

(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com