அண்ணலின் அடிச்சுவட்டில்... 26

குதிரைப் பந்தயம், சூதாட்டம், லாட்டரி, பந்தயம் கட்டுதல் போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும்.
அண்ணலின் அடிச்சுவட்டில்... 26

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
காந்தியின் கனவு

சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட வேண்டும்.
மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.
குதிரைப் பந்தயம், சூதாட்டம், லாட்டரி, பந்தயம் கட்டுதல் போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும்.
அரசு செலவுகளை வெகுவாகக் குறைக்க வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் உணவும் உறைவிடமுமின்றி தவிக்கும்   தருணத்தில் சுதந்திர தின விழாக்கள் போன்றவற்றை ஆடம்பரமாகக் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வருமானத்திற்குத் தகுந்தாற்போல் சிக்கனமான வாழ்க்கையுடன் பொருளாதாரத்தை வளமாக்குதல்.   அரசு அலுவலர்களின் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வது.  அதிகாரத்தை பஞ்சாயத்து, நகராட்சியென அடிமட்ட அளவில் பகிர்ந்து கொள்ளல்.
அடிப்படைக் கல்வியையும் கைத்தொழிலையும் வளர்ப்பது....
இதில் எத்தனை கனவுகள் நிறைவேறி இருக்கின்றன?
காந்தியின் கனவான இந்தியா வேறாக இருந்தது. நாம் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவற்றையும் பற்றி காந்தி நிறையக் கூறினார். காந்தியின் கருத்துப்படி ஜனநாயகம் என்பது எளிய மனிதனுக்கும் உயர் பதவிக்கு வரத் தகுந்த வாய்ப்பை அளிப்பதுதான். ஜனநாயகத்தில் வாழ்க்கைத் தரம், பதவியென எந்தப் பேதமுமின்றி சட்டத்தின் முன்பு எல்லா மக்களுமே சமமானவர்கள். இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்ததுமே அவர் தன்னை ஓர்  எதிர்க்கட்சி தலைவராக ஆக்கிக் கொண்டார். எல்லாத் தவறுகளையும் அரசிற்கு சுட்டிக்காட்டினார். அந்தத் தவறுகளெல்லாம் சரி செய்யப்பட்டு விடுமென நம்பினார். ஆனால் எதுவும் சரி செய்யப்படவில்லை. 
சுதந்திரத்திற்குப் பின் அவர்களுக்கு தான் தேவையற்றவராக இருப்பதை காந்தியே தன்னை உணர்ந்து கொண்டார். இன்றும் பெரும்பாலான தலைவர்கள் காந்தியின் கனவு இந்தியாவைத் தெரியாமலேயே தமது வளர்ச்சியை மட்டுமே கனவாகக் கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1947-இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்திய சுதந்திர மசோதா விவாதத்திற்கு வந்த போது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் அந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசினார். அப்போது அவர்  "நிறைய பேரின் முன் என்னால் கட்டளை இடத் தகுந்த நிறைந்த வலுவுடன் நான் இந்த இந்திய சுதந்திர மசோதாவை எதிர்க்கிறேன். இந்தியாவை இந்தியர்களிடம் வழங்குவதென்பது நாம் இந்தியாவை வெறும் பதராக இருக்கும் மனிதர்களிடம் வழங்குவதாகும். இந்த கதராடைக்காரர்கள் இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய உலகத்தின் சமூகப் பொருளாதார பொது ஆளுமையின் சிக்கல்களுக்கு பழக்கமற்றவர்கள். ஆட்சிக்குப் புதிதானவர்கள். இவர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அவர்களது பொருளாதாரத்தைக் கைவிடப்பட்ட நிலைக்குக் கொண்டு செல்லுமளவிற்கு மிகவும் மோசமாக நிர்வகிப்பார்கள். அவர்கள் சுவாசிக்கிற காற்றிற்கு கூட வரி செலுத்துமளவிற்கு வலியுறுத்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. இந்தப் பெயரளவிலான தேச பக்தர்கள், பெயரளவிலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்த அழகான புராதனமான இந்திய நாட்டின் எல்லா பொது அலுவலகத்தையும் தன்னலமற்ற பொதுச் சேவைக்கான வாய்ப்பாகப் பார்க்காமல் தன் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்கான போற்றுதற்குரிய தருணமாகப் பார்ப்பார்கள். இரைக்காக இருக்கும் இந்த விலங்குகளிடமிருந்து உதவிகளற்று இருக்கும் கோடிக்கணக்கான மக்களை விடுவித்துதவி கடவுளானவர் இந்தியாவையும் அதன் துரதிர்ஷ்டமான குழந்தைகளையும் காப்பாற்றட்டும்''  என்றார். அப்போது சர்ச்சில் பேசியது இந்தியாவின் சுதந்திரத்திற்கு எதிராக இருந்தாலும், இன்று அந்த உண்மை மக்களைச் சுட்டுக் கொண்டிருக்கிறது.
நாட்டையும் பல மாநிலங்களையும் சுமார் ஆயிரம் குடும்பங்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன. அவர்களே தலைமுறை தலைமுறையாய் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களே இந்தியாவின் கலை, கல்வி, இலக்கியம், விளையாட்டு என எல்லாத் துறைகளின் வளர்ச்சியை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் அடையாளத்தை நிர்ணயம் செய்பவர்களாகவும் அவர்களே இருக்கிறார்கள். 
காந்தியிடம் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. அவர் மற்ற தலைவர்களையும் தன்னைப்போல் எண்ணினார். நிறைய ஏமாற்றங்கள் அவரை எதிர்கொண்டன. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரசு பொறுப்பிலிருப்பதை காந்தி விரும்பவில்லை. அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டுபவர்களாக இருக்க வேண்டும் என்றார். 50 வயதிற்குட்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால்தான் அவர்களால் முழுத்திறனுடன் மக்களுக்குச் சேவை செய்ய முடியுமென காந்தி நம்பினார். காந்தி குடும்பத்திலிருந்து யாரும் பதவிக்காக வருவதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.
காந்தி இறக்கிறபோது அவரிடம் காலணாகூட கிடையாது. அவரிடம் இருந்தது ஒரு கோவணத் துண்டு. கண்ணாடி, பைபிள், குர்ரான், பகவத் கீதை, எச்சில் துப்புவதற்கு ஒரு கோப்பை, மூன்று குரங்கு பொம்மைகள்... இவ்வளவுதான்.
காந்தி நாட்டிற்காக தன்னையே தியாகம் செய்தார். நாட்டிலுள்ள எல்லா மக்களும் தங்களுக்குத் தேவையான எல்லா அடிப்படைத் தேவைகளான நல்ல உணவு, உடை, காற்று, உறைவிடம் இவற்றுடன் அமைதியான கெளரவமான வாழ்க்கை வாழ வேண்டுமென கனவு கண்டார். அதற்காகவே இன்றும் உலகம் அவரைப் போற்றிக் கொண்டிருக்கிறது. அவர் இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கித் தந்தார் என்பதற்காக அல்ல. 
ஜப்பானில் அணுகுண்டு வெடித்தபோது அதனை மிகவும் கண்டித்தார். உலக மக்களனைவரும் உற்றார் உறவினர்கள்போல் நட்புடன் வாழ விரும்பினார். உலகமே அமைதியுடன் வாழ விரும்பினார். சுதந்திரத்தைப் பொறுத்தவரை அவரது இலக்கானது இந்தியன் இந்தியாவை ஆள்வது என்பதல்ல. அதில் நிகழ்வது வெறும் தலைமையின் மாற்றம்தான். பிரிட்டீஷ் தலைமைக்குப்  பதிலாக வெறுமனே ஓர் இந்தியத் தலைமை வருவதால் மட்டுமே நம் நாடு உரிய வளர்ச்சி பெற்றுவிடுமென அவர் நம்பி விடவில்லை. 
அவரின் நோக்கமானது,  மக்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட வேண்டும். மக்கள் தாங்களாகவே தங்களது வளர்ச்சியை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று எண்ணினார். அவர்கள் எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தைச் சார்ந்து இருக்கக் கூடாதென எண்ணினார். அத்தகைய சுதந்திரமே அவரது இலக்காக இருந்தது. அவரது நோக்கத்தின்படி, அரசாங்கமென்பது ஒரு கண்காணிப்பு அமைப்பாகவே இருக்க  வேண்டுமென்பதேயாகும். சில மக்கள் இதை தவறாக எடுத்துக் கொண்டார்கள். எந்த அரசாங்கம் தவறுகளைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்கிறதோ, அந்த அரசாங்கத்தை நல்ல அரசாங்கமாக எடுத்துக் கொண்டார்கள். காந்தி எல்லா அரசாங்க சொத்துகளையும் உங்களது சொத்துகளாக பாவித்துப் பராமரிக்கச் சொன்னார். சிலர் அரசாங்க சொத்துகளை தங்களது சொத்துகளாகக் கருதி சுதந்திரமாகச் சுரண்டிக் கொண்டார்கள்.  இயற்கை வளங்களை அழித்து அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டினார்கள். வரும் தலைமுறைக்காக நிறைய சொத்துகளை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 
ஒன்றை மட்டும் அவர்கள் மறந்து விட்டார்கள். இந்த சமுதாயத்தோடுதான் அவர்களது குழந்தைகளும் நாளை வாழப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு பணங்களைப் பதுக்கி வைத்திருந்தாலும் அந்தப் பணத்தால் நாளை ஒரு நல்ல சமுதாயத்தையோ அமைதியான சூழலையோ அவர்களால் உருவாக்க இயலாது. அவர்களால் சீரழிக்கப்படும் இன்றைய சமுதாயத்தோடு நாளை அழிந்துபோவது அவர்களின் குழந்தைகளும்தான். 
1947 செப்டம்பர் மாதம் காந்தி நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 500 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்க வேண்டுமென்றார். அதை அரிஜனிலும் எழுதி இருக்கிறார். அவர்களெல்லாம் மக்களின் தலைவர்களல்ல.  மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டிய வேலைக்காரர்கள் என்றார். அரசாங்கத்தில் உயர்
பதவியிலிருப்பவர்களின் சம்பளத்திற்கும் கீழ்நிலை ஊழியர்களின் சம்பளத்திற்கும் உள்ள பெருத்த வேறுபாடு குறித்து காந்தி மிகுந்த வருத்தம் தெரிவித்தார்.
கராச்சி காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,  அரசாங்கத்தின் உயர் பதவியான ஆளுநருக்கான சம்பளம் 500 ரூபாய்தான் கொடுக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப் பட்டது. "நமது அமைச்சர்கள் மக்களிலிருந்து வந்தவர்கள். மக்களால் வந்தவர்கள். அவர்கள் பதவி வாய்ப்புப் பெறாத மற்ற அனுபவசாலிகளைவிட தாம் அறிவில் உயர்ந்தவர்களாக அகந்தை கொள்ளக் கூடாது'' என்றார்.
 இறுதியில் இன்னொன்றையும் சொன்னார்... "இப்பொழுது நடக்கும் இந்த மோசமான நிலைக்கு நான் பொறுப்பானவனல்ல; எனக்கும் இவர்கள் செய்யும் தீய செயல்களுக்கும் சம்பந்தமில்லை.  நான் சொல்வதை இவர்கள் கேட்பதில்லை'' என்றார். 
 சுதந்திரம் கிடைத்த சில நாட்களிலேயே தினம் ஐம்பது கடிதங்கள் காந்தியின் முகவரிக்கு வந்து கொண்டிருந்தன. அவற்றில் ஏழெட்டு கடிதங்கள் அரசாங்கத்திற்கு எதிரான கண்டனக் குரல்களுடன் இருந்தன. 
அந்தப் புகார்களுக்குப் பதிலாக காந்தி எழுதும் எல்லாக் கடிதங்களின் உள்ளடக்கமும் ஒரே மாதிரியாகவே இருந்தன. கடிதத்தில் யார் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறதோ அவருக்கு காந்தி உடனடியாக ஒரு கடிதம் எழுதி விடுவார். 
"இப்படியெல்லாம் உங்களைப் பற்றி குற்றம் சாட்டி எனக்கு கடிதம் வந்திருக்கிறது... இந்த புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில்தான் நான் இதன்மீது நடவடிக்கை எடுப்பேன். அதனால் இதெல்லாம் உண்மையா பொய்யா என்று அறிய விரும்புகிறேன்'' என்று எழுதி விடுவார். எல்லோருக்குமே இப்படியே எழுதுவார். 
குற்றம் சாட்டப்பட்ட பத்து பேருக்கு இந்தக் கடிதம் செல்லும் போது அவர்களில் ஆறு பேர் பதிலே எழுதாமல் விட்டு விடுவார்கள். மூன்று பேர் பதில் எழுதாமல் நேரடியாக காந்தியிடம் வந்து தங்களைக் குற்றமற்றவராக நம்புமளவிற்கு பேசி விடுவார்கள். அவர்களும் எழுத்து பூர்வமாக எந்தப் பதிவிற்கும் இடம் கொடுக்க மாட்டார்கள். குற்றம் செய்தவன் நிச்சயமாக தான் குற்றம் செய்தேனென்று சொல்லப் போவதில்லை. அதற்கான பதிலாக தன் மீது சாட்டப்பட்ட குற்றம் பொய்யென்றுதான் சொல்வார். ஆனால் தனது கடிதத்திற்கு அவர்கள் உண்மையான பதிலை அளிப்பார்களென காந்தி நம்பினார். ஆனால் குற்றம் செய்தவர்கள் எல்லோரும் பொய்யே கூறிக் கொண்டிருந்தார்கள். அப்படி அவரின் புகார் குறித்த காந்தியின் பதில் கடிதத்தில் எப்போதுமே if statement முதன்மையாய் இருக்கும்.
கல்யாணத்தைச் சந்திக்கும் பல நண்பர்களும் அடிக்கடி கேட்கும் கேள்வி... "நீங்கள் காந்தியோடு இவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறீர்கள். ஏன் இன்னமும் நீங்கள் காந்தியைப் பற்றியும் உங்களைப் பற்றியும் புத்தகம் ஏதும் எழுதவில்லை?'' என்று. அதற்கு கல்யாணம் கூறும் பதில்  "எதார்த்தத்தில் பார்த்தால் காந்தியின் கொள்கைகளைப் புதைத்து விட்டு காந்தியைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் காந்தியைப் பற்றி புகழ்ந்து சொன்னாலும் சொல்லாவிட்டாலும் காந்தி மகாத்மாதான். நான் செயல்படும் மனிதன். காந்தியின் கொள்கைபடி சேவை செய்வதிலேயே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரமானது காந்தியை கொல்வதற்கும் அவரது கொள்கைகளைப் புதைப்பதற்குமான எந்த கட்டுப்பாடுகளுமில்லாத சுதந்திரமாக ஆகி விட்டது'' என்று சொல்லி விடுவார்.
காந்தியின்  மனசாட்சியாக கருதப்பட்டவர் ராஜாஜி.  நாட்டின் இன்றைய மோசமான நிலை குறித்த முன்னறிதல் ராஜாஜிக்கு 1922 இலேயே இருந்திருக்கிறது. 1922 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதியன்று வேலூர் சிறையிலிருந்து ராஜாஜி எழுதிய நாட்குறிப்பே அதற்கு சான்றாகும். அதில் "'சுயராஜ்யம் உடனடியாக வரப்போவதில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல அரசாங்கத்திற்கும் மக்களின் நல்ல மகிழ்ச்சிக்கும் இன்னும் நிறைய நாட்களாகுமென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்களும் அவர்களின் ஊழல்களும், அதிகாரமும் அவர்களின் சொத்தின் கொடுங்கோன்மையும், ஆட்சியாளர்களின் திறமையின்மையும் நமக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டதுமே நமது வாழ்க்கையை நரகமாக்கி விடும். மக்கள் பழைய ஆட்சியாளர்களின் நீதி, திறன், அமைதி, நேர்மையான ஆட்சி ஆகியவற்றோடு ஒத்து நோக்கி வருந்துவார்கள். ஒரே லாபம், இனரீதியாக அவமரியாதையிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்து மட்டும் பாதுகாக்கப் பட்டிருப்போம்'' என்று ராஜாஜி மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
இதைப்போல்தான் நேதாஜியும் 1946 மார்ச்  8 ஆம் தேதி காபூலில் ஒரு செய்தித்தாளிற்கு அளித்த நேர்முகத்தில், " இருபது வருடங்களுக்கு இந்தியாவில் இரும்புக்கரத்துடனான ஒரு சர்வாதிகார ஆட்சியின் மூலமே இங்குள்ள கருத்து வேறுபாடுகளையும் உட்பூசல்களையும் ஒழிக்க இயலும். பிரிட்டீஷ் ஆட்சிக்கு பின் இந்தியாவில் இரும்புக்கரத்துடனான சர்வாதிகார ஆட்சி வேண்டும். வேறெந்த அரசியலமைப்பும் இந்தியாவில் வளமைபெற இயலாது'' என்றார். 
1947 நவம்பர் 1 அன்று உத்திர பிரதேசத்திலிருந்து ஒருவர் காந்திக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் ஜனநாயக ஆட்சிக்கு நமது அரசின் தற்போதைய நிலை தகுதியானதாக இல்லை. அதனால் காந்தி சர்வாதிகாரி பொறுப்பை ஏற்க வேண்டுமென அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் காந்தி மிகுந்த வயதானவரானதாலும் ஹிட்லரை விட மிகவும் அனுபவமிக்கவரானதாலும் அவரின் அந்தப் பொறுப்பால் நாட்டிற்கு எந்த தீங்கும் வரப் போவதில்லை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 
(தொடரும்) 
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com