அண்ணலின் அடிச்சுவட்டில்...29

கல்யாணம் ஒரு கார் வாங்கினார். பின் ஐந்து வருடங்களில் வேலையை விட்டபின் முழுக்க முழுக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். தனது வருமானத்தில் பெரும்பகுதியை ஏழைகளுக்கே தானம் செய்தார்
அண்ணலின் அடிச்சுவட்டில்...29

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
கல்யாணம் ஒரு கார் வாங்கினார். பின் ஐந்து வருடங்களில் வேலையை விட்டபின் முழுக்க முழுக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். தனது வருமானத்தில் பெரும்பகுதியை ஏழைகளுக்கே தானம் செய்தார். நுங்கம்பாக்கத்தில் 3,000 ரூபாய்க்கு ஓர்  இடம் வாங்கினார். பின்பு அதனுடைய மதிப்பு லட்சக்கணக்கில் உயர்ந்தது. அதை சைல்டு டிரஸ்ட் ஆஸ்பத்திரிக்கு நன்கொடையாகக் கொடுத்தார். அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு பல கோடிகள் இருக்கும்.
“தானம் கொடுப்பதுகூட யாருக்குக் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு மட்டுமே கொடுப்பேன்'' என்பார் கல்யாணம். அடையாறு கேன்சர் மருத்துவமனை, பப்ளிக் ஹெல்த் சென்டர், வாலன்டரி ஹெல்த் சர்வீஸ், சங்கர நேத்ராலயா, ஸ்பாஸ்டிக் சொசைட்டி, பள்ளிக்கூடங்களென இதுவரைக்கும் பல கோடிகள் மதிப்பில் நன்கொடையாக கொடுத்துள்ளார். இதுவே அவருக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தருகிறது. 

அளிப்பதிலுள்ள ஆனந்தம்
எல்லோருக்கும் உதவுவது, நன்கொடை அளிப்பது ஆகிய பழக்கங்களை கல்யாணம் தன் தந்தையிடமிருந்தே கற்றுக் கொண்டார். கல்யாணம் டெல்லியிலிருக்கும்போது அங்கு வாத்தியார் அசோசியேஷன் (Association of priests) என்ற ஓர் அமைப்பு இருந்தது. அதில் உறுப்பினர்களாய் இருப்பவர்களையே வீடுகளில் பூஜை செய்யவும், பிறப்பு இறப்பு போன்ற காரியங்கள் தொடர்பான சடங்குகள் செய்வதற்கும் அழைப்பார்கள். அவர்கள் அந்த சடங்குகள் செய்வதற்கு நாலணாவும் சாப்பாடும்தான் அளிப்பார்கள். நாலணா என்பது இன்றைய பணத்திற்கு இருபத்தைந்து காசுகள். அவர்களெல்லோரும் ஏழைகள். பெரும்பாலும் தென்னிந்தியர்களே அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் பெரும்பாலும் அரசு வீடுகளில் தங்கி இருந்தனர். அவர்கள் எல்லோரது வீடுகளிலும் இரண்டு மூன்று அறைகள் இருக்கும். அதில் ஓர் அறையை பலரும் வாத்தியார்கள் குடும்பத்துடன் தங்கிக் கொள்ள கொடுத்து விடுவர். அவ்வாறு ஒவ்வொரு வீட்டின் ஓர் அறையிலும் ஒவ்வொரு வாத்தியார் குடும்பம் இருக்கும்.
அவர்கள் அங்கே தங்கியிருந்து சமைத்து வாழ்க்கை நடத்துவர். 
 ஒருதடவை ஒரு புரோகிதருக்கு டைஃபாய்டு வந்து மருத்துவமனையில் சில நாட்கள் இருந்தார். மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு கல்யாணத்தின் தந்தை பண உதவியும் செய்தார். பின் அவர் குணமாகி வீடு சென்ற பின் ஒரு டோங்காவைப் பிடித்து அதில் ஒரு பெரிய மூடை பாசுமதி அரிசியை ஏற்றி கல்யாணத்திடம் அதை அந்தப் புரோகிதரின் வீட்டில் கொண்டு கொடுத்து வரச் சொன்னார். அப்போது அந்த பாசுமதி அரிசி மூட்டையின் விலை 12 ரூபாயாக இருந்திருக்கிறது. இதையெல்லாம் சிறுவயதில் பார்த்து வளர்ந்த கல்யாணத்தின் இதயத்துள் எல்லோருக்கும் உதவ வேண்டுமென்ற இயல்பு தானாகவே வந்துவிட்டது. அதில் கிடைக்கும் சந்தோஷத்தை அவர் தன் வாழ்நாள் முழுக்க அனுபவித்து கொண்டுதான் வருகிறார்.
நல்ல தலைவர்களுக்கு நன்கொடை அளிப்பதால் அது நல்ல வழியில் பயன்படுமென்ற எண்ணத்தில் கல்யாணம் நன்கொடையாக அவர்களுக்குப்  பணம் அனுப்பும் வழக்கமுண்டு. ராஜாஜி முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தவர். மகாத்மா காந்தியின் சம்பந்தியானவர். அவர் சுதந்திராக் கட்சி என்ற கட்சியினைத் தொடங்கியபோது அவருக்கு கல்யாணம் அடிக்கடி பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போதே சுமார் மூன்று லட்சம் அளவிற்கு பணம் கொடுத்திருக்கிறார். உடனே ராஜாஜி கல்யாணத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். 1961-இல் அவர் எழுதிய கடிதம் இது. 
 அப்போது ஒரு தடவை வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து கல்யாணம் பணம் கொடுத்ததற்கான ரசீது கேட்டு அவரிடம் பரிசோதனைக்காக வந்தார்கள். கல்யாணம் உடனே ராஜாஜி தனக்கு எழுதிய கடிதத்தைக் காட்டினார். அவரிடம் எல்லாவற்றையும் விசாரித்தார்கள். நன்கொடையாக பணம் கொடுத்தது ராஜாஜிக்கு என்ற போது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும். “நீங்கள் எந்த விளக்கமும் கொடுக்கத் தேவையில்லை. நீங்கள் நல்ல காரியத்திற்காக நன்கொடை அளித்திருக்கிறீர்கள்'' என்று கல்யாணத்திற்கு வணக்கம் கூறி விடைபெற்றுச் சென்றார்கள். இந்த விவரத்தை ராஜாஜியிடம் கல்யாணம் தெரிவித்தபோது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். 
தன்னிடம்  தேவைக்கு அதிகமாக இருக்கும்போதெல்லாம், ஜெயபிரகாஷ் நாராயண், ராஜ்குமாரி அம்ரித் கெüரின் குழந்தைகள் நிதியென பல சேவை அமைப்புகளுக்கும் கல்யாணம் பணத்தினை நன்கொடையாக அனுப்பி விடுவார். கல்யாணத்திற்கு "பாலாய் சென்ட்ரல் வங்கி'யில் கணக்கிருந்தது. அதனுடைய கிளைகள் டெல்லியிலும் சென்னையிலும் இருந்தன. அந்தக் கணக்கிலிருந்து நேருவுக்கு பிரதமர் நிவாரண நிதிக்காக ஒரு காசோலை அனுப்பி இருந்தார். கேரளாவில் பாலாயைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த பாலாய் சென்ட்ரல் வங்கி திடீரென மூடப்பட்டதால் நேருவுக்கு அனுப்பிய காசோலை செல்லாததாக ஆகி விட்டது. வங்கியில் செலுத்தியிருந்த அந்தக் காசோலையின் பின்னால் கையெழுத்திட்டிருந்த நேரு அவரது கையெழுத்தை வெட்டி மீண்டும் கல்யாணத்திற்கே அதைத் திருப்பி அனுப்பி
இருந்தார்.  

கல்யாணம் சென்னை வந்த சமயம் வாரியார் உரை எங்கு நடந்தாலும் சென்று விடுவார்.  கிருபானந்த வாரியார் தன்னுடைய சொற்பொழிவினிடையே தனக்குத் தெரிந்தவர்களைப் பற்றியும் பேசத் தவறுவதில்லை. அவ்வாறு பேசும் போது ஒரு தடவை கிருஷ்ணமூர்த்தி  என்ற வீடு கட்டுமான ஒப்பந்தக்காரரைப் பற்றிப் பெருமையாக கூறினார். அவர் ஒரு கட்டுமானப் பொறியாளரும் கூட. 
அந்தக் காலத்திலெல்லாம் இப்போதிருக்கும் அளவிற்கு வீடு கட்டுமானப் பொறியாளர்களும் ஒப்பந்ததாரர்களும் இல்லை. எல்லோருக்கும் தெரிந்த அளவில் ஐந்தாறு பேரே வீடு கட்டுமானத் தொழிலிலிருந்தனர். அன்றைய தினம் வி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு கால தாமதமாய் வந்தார். வாரியாரின் ஆன்மிக உரை உச்சகட்டத்தில் இருந்தது. கிருஷ்ணமூர்த்தி அரங்கத்தில் நுழைவதைப் பார்த்த வாரியார் உடனே தன்னுடைய பேச்சின் இடையே “இந்த ஊரிலே லாப நஷ்டம் பார்க்காமல் வேலை செய்யற கான்டிராக்டர் ஒருத்தர் உண்டு... அவரோட பெயர் கிருஷ்ண மூர்த்தி... அவர்தான் இதோ வர்றார்''. என்பார்.. எல்லோரும் அவரோடு வயிறு குலுங்க குலுங்க சிரிப்பர்... உடனே மீண்டும் பக்குவமாய் ஆன்மிகத் தளத்துக்குள் நுழைந்து விடுவார்.. அப்படி பலதடவை கிருஷ்ண மூர்த்தியைப் பற்றி தனது பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். 
 அப்போது 1956... 57 இருக்கும். கிருபானந்த வாரியாரின் வீட்டில் அவருக்கு ஒரு பூஜை அறை கட்டிக் கொடுத்ததாக கிருஷ்ணமூர்த்தியும் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார். இது குறித்து கிருபானந்த வாரியாரிடமே கல்யாணம் கேட்டார். அதற்கு வாரியாரும் “அதற்கென்ன.. நான் பணம் கொடுத்தேன்.. அவர் கட்டிக் கொடுத்தார்'' என்றார். 
 கல்யாணத்திற்கு ஒரு ஆசை பிறந்தது. வாடகை வீட்டிலிருந்து ஒரு சொந்த வீடு கட்டிப் போனாலென்ன. இப்போதிருக்கும் சென்னை வீட்டு வசதி வாரியத்தின்
அப்போதையப் பெயர் மெட்ராஸ் ஹவுசிங் யூனிட் ஆஃப் சிட்டி இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட் என்பதாகும். அது தொடங்கப்பட்டதுமே முதலில் கேப்டன் ஞானஒலிவுதான் அதற்கு பொறுப்பேற்றிருந்தார். அப்போது அவர்கள் ஒரு விளம்பரம் செய்திருந்தனர். அதில் சீதம்மாள் காலனியில் பிளாட் ஒதுக்கி வீடு கட்டி விற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 சீதம்மாள் காலனியானது மெüபரீஸ் சாலை இறுதியிலிருந்து தற்போதைய அண்ணா சாலை வரை இருந்தது. அவை அனைத்தும் சர். சி. பி. ராமஸ்வாமி ஐயருடையதாக இருந்தது. அங்கே எல்லோருக்கும் இரண்டு, இரண்டரை கிரவுண்ட் அளவில் பிளாட் விற்க இருப்பதாக அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. அப்போது கல்யாணம் விண்ணப்பித்ததும் 1966-இல் கல்யாணத்திற்கு ஒரு பிளாட் ஒதுக்கீடு செய்யப் பட்டது. அது தற்போது எஸ்.ஐ.இ.டி கல்லூரிக்கு எதிரில் கல்யாணம் குடியிருக்கிற இடமாகும்.
மெட்ராஸ் ஹவுசிங் யூனிட்டே இடத்தையும் கொடுத்து அவர்களே கட்டித் தருவதாகத்தான் விதியில் கூறப்பட்டிருந்தது. 
 அவர்கள் கட்டிக் கொடுப்பது வழக்கமாக சின்னச் சின்ன அறைகளுடன் சின்ன சன்னல்களுடன் நவீன வசதிகளெதுவுமில்லாமலேயே இருப்பதாக கல்யாணத்திற்குத் தோன்றியது. மேலும் அவை சிமெண்ட் தரைகளாகவே இருந்தன. அவர் தான் ஃபிரெஞ்ச் வின்டோவுடன் நாகரிக வசதிகளுடன் வீடு கட்ட விருப்பப்படுவதாகவும் அதனால் தனது வசதிகளுக்குத் தேவையான அளவில் கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டுமெனவும் கேட்டார். அதற்கு அவர்கள் பல சலுகைகளுடன் அந்த வீட்டை இடத்துடன் வெறும் 35,000 விலைக்குக் கொடுத்தார்கள். இன்றைக்கு அதன் மதிப்பு எட்டு, பத்து கோடிகளுக்கு இருக்கும். அப்போது அவர்கள் அளித்த வீடு பாதி அளவு கட்டி இருந்தது.
கல்யாணமும் அவரது கனவு வீட்டினைக் கட்டி முடிக்க அவரது மனதில் உயர்ந்த அபிப்பிராயத்துடன் குடி கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியிடமே வந்தார். 
தனக்கு வேண்டிய வசதிகள் குறித்து கிருஷ்ணமூர்த்தியிடம் கூறினார். மொசைக் தரையுடன் மாடியும் கட்டித் தர வேண்டுமென்றார். அதற்கு அவர் ஒரு மாதிரி வரைவும் அதற்கான மதீப்பீடும் போட்டார். அந்த வீட்டைக் கட்டி முடிக்க மொத்தம் 60,000 ரூபாய் ஆகுமென்றார். அப்போது கல்யாணத்திடம் பணமே இல்லை. சுமார் ஐந்தாயிரமே இருந்தது. அதனால் வீட்டுக் கனவில் மனைவியின் எல்லா நகைகளையும் விற்றபோது நாற்பதாயிரம் வந்தது.  லின்டல் லெவல், கூரை, காங்கிரீட், தரை உருவாக்கமென ஒவ்வொரு நிலையிலும் குறிப்பிட்ட தொகையைத் தர கிருஷ்ணமூர்த்தி கூறி இருந்தார். அலுவலக வேலை நிறைய இருந்ததால் ஒரு நம்பிக்கையில் வீடு கட்டுவதற்கான மொத்தத் தொகையான அறுபதினாயிரத்தையும் ஒரே நேரத்தில் கொடுத்து விட்டார். அவர் வீடு முழுமையாகக் கட்டி முடிக்க ஆறு மாதங்களாகுமென்றார். கல்யாணமும்அலுவலக வேலைகளில் முடங்கிப் போனார். 
(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com