அண்ணலின் அடிச்சுவட்டில்... 22

"காந்திஜி சுடப்பட்டார்' என்ற அந்த மோசமான செய்தி வேகமாக பரவியது. சில நிமிடங்களிலேயே மக்கள் கூட்டம் பிர்லா மாளிகையின் வெளியே கூடத் தொடங்கின.
அண்ணலின் அடிச்சுவட்டில்... 22

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
"காந்திஜி சுடப்பட்டார்' என்ற அந்த மோசமான செய்தி வேகமாக பரவியது. சில நிமிடங்களிலேயே மக்கள் கூட்டம் பிர்லா மாளிகையின் வெளியே கூடத் தொடங்கின. அந்த வளாகத்திற்குள் மக்கள் கூட்டம் நுழைவதை தடுக்கும் பொருட்டு வாசற்கதவை மூட வேண்டி இருந்தது. பட்டேல் சில நிமிடங்களுக்கு முன்புதான் அங்கிருந்து வீட்டிற்கு சென்றிருந்தார். கல்யாணம் கூட்டத்தினரை விலக்கி வெளியே வந்து அங்கே நின்ற விஞ்ஞானி சர் எஸ்.எஸ்.பட்நாகருடைய காரில் பட்டேலின் வீட்டிற்கு சென்றார். பட்டேல் குளியலறையில் இருந்தார். மணிபென்னிடம் செய்தியை சொல்லிவிட்டு வந்தார். அதன்பின் நேராக தன்னுடைய அறைக்கு வந்தார். நேருவின் அலுவலகத்திற்கு தொலைபேசி வழியாக அந்த அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார் கல்யாணம்.

அன்று மாலை சென்னையில் தனது வீட்டில் சென்னை வானொலியில் ஒலிபரப்பான திருவையாறு இசை விழா நிகழ்ச்சியின் ஒலிப்பதிவினை எம். எஸ். சுப்புலெட்சுமி கேட்டுக் கொண்டிருந்தார். தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த இசை நிகழ்ச்சி தடைபட்ட போது அதிர்ச்சியானார். அவருக்கு அதைவிட அதிர்ச்சியான செய்தி அன்று வானொலியில் ஒலிபரப்பானது.

புதுதில்லியில் காந்தியின் வழிபாட்டுக் கூட்டத்தில் ஓர் இந்துவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டாரென்ற செய்தி அவருக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. அவர் அது குறித்து இன்னும் அதிக தகவல்களை எதிர்நோக்குமுன் காந்திக்கு மிகவும் விருப்பமான எம்.எஸ். பாடிய "ஹரி தும் ஹரோ' பாடல் வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. தனது பாடலைக் கேட்டு அவரே உருகிக் கொண்டிருந்தார்.

ஜார்ஜ் ஃபெர்னார்ட் ஷாவிற்கு காந்தி இறந்த போது வயது 92. காந்தியை விட 14 வயது அதிகம். லண்டனிலிருந்து சுமார் 50 மைல் தொலைவில் தனது வீட்டிலிருந்த பெர்னார்ட் ஷா காந்தி இறந்த செய்தியைக் கேட்டதும் "மிகவும் நல்லவராய் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைத்தான் இது காட்டுகிறது'' என்றார். கல்யாணம் காந்தி சுடப்பட்ட போது அருகில் இருந்தவர். அவரின் அறிவிற்கெட்டிய வரை காந்தி இறப்பதற்கு முன் "ஹே ராமென' சொல்லவில்லை என்பதே கல்யாணத்தின் தீர்மானமாக இருக்கிறது.

காந்தியடிகளின் கொலையினை விசாரித்த கமிஷனும் அன்று அவரோடிருந்த அவருக்கு நெருக்கமான கல்யாணம் உட்பட்ட பலரிடமும் எதைப் பற்றியும் விசாரிக்கவே இல்லையென்பதே மிகவும் விநோதமானது. காந்தி "ஹே ராம் என்று சொல்லவில்லை'' என்ற கல்யாணத்தின் கருத்தின் மீது பலருக்கும் அவர் மேல் வருத்தம்.

இன்னும் காந்தியின் இறுதி பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியின் உரையைப் பதிவு செய்ய அகில இந்திய வானொலியிலிருந்து வந்திருந்த பணியாளர் கே.டி.மதன் அதை உறுதி செய்து கல்யாணத்தோடு தொலைபேசியில் பேசினார். காந்தி பிர்லா மாளிகையில் இருந்தபோது 1947-இல் காந்தியின் உரைகளையும் பிரார்த்தனைகளையும் அவர்தான் ஒலிப்பதிவு செய்து அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பி வந்தார். அவர் அகில இந்திய வானொலியில் பணியாற்றி 1981-இல் ஓய்வு பெற்றார்.

மேலும் காந்தி இறந்த பின் ஓர் உயரமான மனிதர்தான் காந்தியை தனது தோளில் வைத்து உள்ளே கொண்டு சென்றதைப் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார். அப்போது யாரோ ஒருவர் காந்தி விழுந்த இடத்தைச் சுற்றி ஒரு குச்சியால் வட்டம் வரைந்து அதன் நடுவே மெழுகுவர்த்தியை ஏற்றிச் சென்றாரென்றும் கூறி இருக்கிறார்.

அந்த நேரத்தில் கல்யாணம் பட்டேலின் வீட்டிற்கு காந்தி இறந்த செய்தியைச் சொல்லச் சென்றிருந்ததால் அந்தக் காட்சிகளை கல்யாணம் பார்த்திருக்கவில்லை. காந்தி இறந்தபோது அந்த இடத்தில் இல்லாதவர்களெல்லாம் தனது நூலில் காந்தி கொல்லப்பட்டபோது இறுதியாக ஹேராம் என்று கூறியதாக பதிவு செய்திருப்பதை கல்யாணத்தால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. காந்தி இறந்த தருணத்தில் அவரின் மூத்த செயலாளர் பியார்லால் கூட அங்கு இல்லை. அடுத்த நாள் அவர் நவகாளிக்கு செல்வதாக இருந்தது. அதற்காக அன்று மாலை சில பொருட்கள் வாங்குவதற்காக அவர் வெளியே சென்று இருந்தார். சுசீலா நய்யரும் ஊரிலில்லை.

காந்தியடிகளின் இறுதி நாட்களில் அவருடைய பிரார்த்தனைக்கு பிந்தைய உரைகளில் கடவுள் தனது உயிரை எடுத்துக் கொள்ளட்டும். நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொடூரமான காட்டுமிராண்டித்தனத்தை ஒரு மெளன சாட்சியாய் பார்த்து கொண்டிருக்க விரும்பவில்லை என்றும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். அவரது பிரார்த்தனைக்கு கடவுளின் பதில் போல் அவரது மரணமும் நிகழ்ந்து விட்டது. காந்தி இறந்தபோது மூத்தமகன் ஹரிலால் வரவில்லை. இரண்டாவது மகனான மணிலால் காந்தியும் டர்பனில் இருந்ததால் அவர் இங்கு வர மூன்று நாட்கள் ஆகுமென்று அவரும் வர இயலவில்லை. காந்தியின் மூன்றாவது மகனான ராம்தாஸ் காந்திதான் காந்தியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்தார். காந்தி இறந்தபோது அந்தச் செய்தியை அறிந்து ஹரிலால் மனுகாந்திக்கு ஒரு தந்தி அனுப்பி இருந்தார்.

"அதிர்ச்சி அடைந்தேன். இதயபூர்வமான அனுதாபங்கள் (Shocked. Hearty condolenses. Harilal)'' என்ற செய்தியுடன். குஜராத்திலுள்ள மெளவா என்ற ஊரிலிருந்து அந்த தந்தியினை அவர் அனுப்பி இருந்தார். அந்த தந்தியினை கல்யாணம் இன்னமும் வைத்திருக்கிறார்.

காந்தி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கல்யாணம் அவரோடு வெளியூர் சென்றிருந்த சமயம். ஒரு கிராமவாசி காந்தியிடம் தனது பிரச்னையைக் கூறிக் கொண்டிருந்தார். அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக காந்தி அவருக்கு சில வழிமுறைகளை அறிவுரையாக வழங்கினார். அதற்காக அந்தக் கிராமவாசிக்கு சிறிது தொலைவிலுள்ள ஓர் இடத்திற்குச் சென்று வர வேண்டிய தேவை இருந்தது. அந்த இடம் சுமார் 30, 40 மைல் தொலைவிலிருந்தது. அந்த இடத்திற்குச் செல்ல தன்னிடம் பணமேதுமில்லையென்று அந்தக் கிராமவாசி கூறினார். உடனே எவ்வளவு பணம் தேவை இருக்குமென காந்தி அவரிடம் கேட்டார். அதற்கு அவர் போய் வருவதற்கு சுமார் 25, 30 ரூபாயாகுமென்றார்.

உடனே காந்தி கல்யாணத்திடம் அவருக்கு ஒரு 35 ரூபாய் கொடுக்கச் சொன்னார். சாதாரணமாக காந்தி பணம் வைத்திருக்க மாட்டார். கல்யாணம் பொதுவாக செலவுக்காக தனிப்பட்ட அளவில் 50 ரூபாய் போல் வைத்திருப்பார். அதில் 35 ரூபாயை எடுத்து அன்று அந்த நபரிடம் கொடுத்து விட்டார். கொடுத்ததுமே அதைப்பற்றி கல்யாணம் மறந்தும்விட்டார். காந்தியோடு அப்போதைய அவரது வாழ்க்கை இருந்ததால் பணத்தைப் பற்றிய சிந்தனை அவருக்கு இருந்ததில்லை.

காந்தியின் அமைப்பிற்கு சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Central Bank of India)தான் கணக்கு இருந்தது. அவருக்கு தனிப்பட்ட அளவில் வங்கிக் கணக்கெல்லாம் கிடையாது. அவருடைய சேவை அமைப்பிற்கான வங்கிக் கணக்கின் காசோலைகளுக்கு அவரே கையெழுத்திடுவார். அவரது கையெழுத்து சாதாரணமாக இந்தியில்தான் இருக்கும். அவர் அந்த ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன் ஒரு காசோலையில் 35 ரூபாய் எழுதி கையெழுத்திட்டு அன்று கல்யாணத்திடம் தந்தார். அவர் அன்று கொடுத்தப் பணத்தை நினைவில் நிறுத்தி பின்னொரு நாளில் தந்தது கல்யாணத்திற்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.

கல்யாணத்துடைய வங்கிக் கணக்கு புது தில்லியில்தான் இருந்தது. அப்போது அவருடைய வங்கிக் கணக்கில் 400, 500 ரூபாய்கள்தான் இருந்தன. காந்தியுடன் அவருடைய பணிகள் நிறைந்து இருந்ததால் காசோலையை வங்கியில் போட இயலவில்லை. 1948 ஜனவரி 29 அன்று கல்யாணம் அந்தக் காசோலையை ஒரு நண்பரிடம் கொடுத்து வங்கியில் போடச் சொல்லியிருந்தார். 30-ஆம் தேதி காசோலை கல்யாணத்தின் வங்கிக் கணக்கில் சேர இருந்தது. 30-ஆம் தேதி காந்தி சுடப்பட்டார். உடனே கல்யாணத்திற்கு காந்தியுடைய காசோலை நினைவுக்கு வந்தது. "ஐயையோ! காந்தியுடைய கையெழுத்துள்ள காசோலையை வங்கியில் போட்டு விட்டேனே. வெறும் 35 ரூபாயை விட காந்தியுடைய கையெழுத்தல்லவா மிக முக்கியம்'' எனக் கருதினார் கல்யாணம்.

உடனடியாக அந்த வங்கியின் மேலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். "அந்தக் காசோலையை என் கணக்கில் சேர்க்க வேண்டாம். எனக்கு அந்தக் காசோலையை திருப்பித் தந்து விடுங்கள்'' என்றார். அவர் காரணம் கேட்டார். கல்யாணம் காந்தி சுடப்பட்டதை சொன்னார். அவரும் முதன்முதலாய் கல்யாணம் மூலமாக அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அவரே நேரில் வந்து கல்யாணத்தைப் பார்த்து அந்தக் காசோலை (Cheque) யைத் தந்து விட்டுப் போனார்.

காந்தியின் இறுதி நேர்முகம்
காந்தி இறுதியாக நேர்முகமளித்தது மிகவும் பிரபலமான புகைப்படக் கலைஞரான மிஸ். மார்க் பெளர்க் வொயிட் என்ற செய்தியாளருக்குத்தான். காந்தியிடம் அவர் கேட்டார். "சென்ற வருடம் வங்காளத்தில் இந்து முஸ்லிம் கலவரப் பகுதிகளில் நீங்கள் சென்றிருந்தீர்கள். அப்போது அங்கெல்லாம் இருளாய் இருப்பதாகக் கூறினீர்கள். இப்போது சொல்லுங்கள் அங்கே வெளிச்சத்தைக் கண்டீர்களா?'' என்று. அதற்கு காந்தி "இன்னும் நான் அங்கே வெளிச்சத்தைக் காணவில்லை'' என்று மிகுந்த வருத்தத்துடன் பதிலளித்தார்.

"நான் அதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறேன். என்னால் அந்த வெளிச்சத்தை காண இயன்றால் எனது நம்பிக்கை புத்துயிர் பெறும்'' என்றும் கூறினார்.

செய்தியாளர் காந்தியிடம் "அமெரிக்கர்கள் குறிப்பாக அணுகுண்டுகள் குறித்து ஒரு தீய முன்னறிதலின் குறிகளால் நிரம்பி இருக்கிறார்கள். அணுகுண்டுக்கு எதிராக உங்களால் அகிம்சையை எப்படிப் பயன்படுத்த இயலும்?'' என கேட்டார். அதற்கு காந்தி "அந்தக் கேள்விக்கு எப்படி நான் பதில் சொல்ல இயலும்?'' என்றார். அமைதியாக ஒருகணம் நூல் நூற்றுக்கொண்டு "நான் வழிபாட்டைப் பயன்படுத்துவேன்'' என்றார். "விமானங்கள் தலைக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் போது வழிபட்டுக் கொண்டிருப்பீர்களா?'' என்று கேட்டார் அந்தப் பெண்மணி. காந்தி இரு கரம் கூப்பிக் கூறினார். "அணுகுண்டுக்கு எதிராக வழிபாட்டைப் பயன்படுத்துவேன் என நான் உங்களிடம் சொன்னேன் அல்லவா. நான் வெளியே திறந்த வெளிக்கு வருவேன். என்னிடம் அவர்களுக்கு எதிராக எந்த தீய எண்ணமும் இல்லையென என் முகத்தைப் பார்த்து விமானி அறிந்து கொள்ளட்டும்'' சிறிது நேர மெளனத்திற்குப் பின் இன்னும் கூறினார்.

"அந்த உயரத்திலிருந்து விமானியால் என் முகத்தை பார்க்க இயலாமல் இருக்கலாம். ஆனால் அவர் நமக்கு தீங்கிழைக்க வர மாட்டாரென்ற நமது இதயங்களின் அந்த ஏக்கமானது விமானியிடம் சென்று அவரது கண்களைத் திறக்க வைக்கும். அணுகுண்டுகளால் ஹிரோஷிமாவில் சாகடிக்கப் பட்டவர்கள் எந்த முனங்கல்களுமின்றி இதயப்பூர்வமாக வழிபாட்டுடன் இறந்திருந்தால் இந்தப் போரானது இந்த அளவிற்கு கொடூரமான முறையில் முடிந்திருக் காது.

இப்போதைய கேள்வியானது வெற்றி பெற்றவர்கள் உண்மையிலேயே வெற்றி பெற்றவர்களா? பாதிக்கப் பட்டவர்களின் உலகம் அமைதியாக இல்லை. இது இன்னும் திகிலூட்டுபவையாக இருக்கின்றது'' என்றார்.
- தொடரும்
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com