அண்ணலின் அடிச்சுவட்டில்...24

லார்டு லூயிஸ் மவுண்ட் பேட்டன்  "ஒரு மனிதர் எல்லைப் படை'யென்று குறிப்பிட்டது மகாத்மா காந்தியை!

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
லார்டு லூயிஸ் மவுண்ட் பேட்டன்  "ஒரு மனிதர் எல்லைப் படை'யென்று குறிப்பிட்டது மகாத்மா காந்தியை!

இதைவிட  காந்திக்கு உயர்ந்த விருதுப் பத்திரம் உலகில் எதுவும் இருக்கப் போவதில்லை.  காந்தியின் பெயர் ஐந்து தடவை நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டும் அது நழுவியே போய்விட்டது. 

முதலில் 1937,1938, 1939 ஆகிய ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் அவருக்கு அந்த விருது அளிக்கப்படவில்லை. 

1947-இலும் காந்தியின் பெயர் நோபல் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டது. அதுவும் அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக...  அமெரிக்காவும் காந்திக்கு அந்த விருது வழங்கப்பட ஆதரவு தெரிவித்திருந்தது. அப்போது கல்யாணம் காந்தியோடு பிர்லா மாளிகையில் தங்கி இருந்தார். அந்த நேரத்தில் டாக்கா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான டாக்டர் சாமர்சென் காந்தியைச் சந்திப்பதற்காக அனுமதியும் நேரமும் கேட்டிருந்தார். 

அவர் நார்வேக்கு ஓர்  உரை நிகழ்த்துவதற்காகப் பயணம் செய்ததாகவும் அப்போது தன்னைச் சந்தித்த நார்வே நோபல் பரிசு தேர்வுக் குழுவின் வேண்டுதலின் பேரிலேயே தான் இங்கு காந்தியைச் சந்திக்க வந்ததாகவும் கூறினார். தேர்வுக் குழு காந்தி தொடர்பான சில சான்றுகளைக் கேட்டதாகவும் கூறினார். அவர் ராஜேந்திர பாபு, மெளலான அபுல் கலாம் ஆசாத்,  ஜவகர்லால் நேரு ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கல்யாணத்திடம் கூறி இருக்கிறார். 

உடனே கல்யாணம் காந்தியைச் சந்திப்பதற்கான நேரத்தையும் அனுமதியையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவர் குறித்த நேரத்தில் காந்தியைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நிகழ்ந்தது. அவர் உரையாடலினிடையே நோபல் தேர்வுக் குழு அந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதிற்காக காந்தியின் பெயரை பரிந்துரைத்திருப்பதாக கூறினார். உடனே காந்தி கடிந்து கொண்டார். 

"அமைதிதான் இங்கு வரவில்லையே. எங்கே அமைதி இருக்கிறது? எங்கும் பகைமை மனப்பான்மையே இருக்கிறது'' என்று கூறினார். 

டாக்டர் சென் காந்தியின் சுய விவரங்களைக் கேட்டபோது அவர் கல்யாணத்தை  காட்டி தொடர்புகொள்ளச் சொல்லி இருக்கிறார். ஒரு வாரத்தில் அவரைக் குறித்த விவரங்களை வந்து வாங்கிக் கொள்ளலாமெனவும் கூறினார். கல்யாணமும் அவற்றைத் தயாரித்து டாக்டர் சென்னிடமே அளித்தார். 

பரிசு காந்திக்கே வழங்கப்படுவதாக இருந்தது. அப்போது பஞ்சாபில் கலவரமும் இந்திய பாகிஸ்தானிடையே காஷ்மீருக்கான மோதல்களும் தீவிரமாய் நடந்து கொண்டிருந்தன. இந்தக் காரணங்களால் கடைசித் தருணத்தில் காந்திக்கு வழங்கப்படுவதாக இருந்த விருது குறித்த தீர்மானம் ஓர் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப் பட்டது. அதற்குள் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.  

காந்தி அமைதியின் திருத்தூதராய் அறியப்பட்டும் அவருக்கு அமைதிக்கான அந்த பெருமைக்குரிய பரிசு வழங்கப்படாதது குறித்த வருத்தம்  ஐரோப்பா முழுவதுமே வெகுவாக வெளிப்பட்டது.  இறப்பிற்கு பின் வழங்கப்படும் விருதாக நோபல் பரிசினை வழங்க பேரளவில் முயற்சி செய்யப்பட்டது. இறப்பிற்குப் பின் வழங்கப்படுவதற்கான  முன்னுதாரணமும் எதுவும் இல்லாத காரணத்தால் நோபல் தேர்வுக் குழுவிற்கு சில அலுவலக முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டி இருந்தது. காந்தி, டால்ஸ்டாய் என இருவரின் விருதுகளும் இறுதிக் கட்டத்தை எட்டிய தருணங்களில் சர்வ வலுவான சில நாடுகளின் எதிர்ப்பினை எதிர்கொண்டன. அதன் விளைவாக நோபல் பரிசு தேர்வுக் குழுவின் தயக்கத்தால் அவர்களின் விருதுகள் அவர்களின் மரணம் வரை ஒத்தி வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.    

காந்திக்கு விருது கொடுக்காததற்காக பெரும் விமர்சனத்திற்குள்ளானது நோபல் தேர்வுக் குழு. இத்தோடு ஹென்றி கிஸிங்கர்,  தலாய்லாமா,   ஆன்ட்ரி சுகரோவ்,  ஆங் சன் சூ கீ போன்ற முக்கிய தலைவர்களுக்கு விருது வழங்கிய போதும் விமர்சனத்திற்குள்ளானது. அவர்களின் கொள்கை எதிர்ப்பாளர்களால் மிகுந்த எதிர்ப்பிற்குள்ளானது. தலாய்லாமாவுக்கு எதிராக சீனா கொதித்தது. ஆங் சன் சூ கீக்கு வழங்கப்பட்ட போது பர்மிய அரசு பகிரங்கமாக எதிர்த்தது.

இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிந்தைய கலவரங்கள் காந்திக்குக்  கிடைக்க வேண்டிய அமைதிக்கான நோபல் பரிசினை அமைதியாக்கிவிட்டது. அந்த விருதின்றி காந்தி இன்னமும் உலகம் முழுவதும் புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். உலகம் உள்ளவரை அமைதி என்ற வார்த்தை உள்ளவரை வாழ்ந்து கொண்டே இருப்பார். ஆனால் அமைதிக்கான நோபல் விருது பெற்றவர்களின் வரிசையில் காந்தியின் பெயரும் இடம் பெற்றிருந்தால் அந்த விருதைப் பெற்ற மற்றவர்களெல்லோரும் இன்னும் பெருமை அடைந்திருப்பார்கள். ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசு தேர்வு நடைமுறைப் பதிவுகள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ரகசியமாகவேப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஐம்பது ஆண்டுகளுக்கு பின் விதிமுறைகளின்படி நோபல் தேர்வு நிலைய ரகசிய பாதுகாப்பறையிலிருந்து கன்னர் ஜானின் நாட்குறிப்பு திறந்து பார்க்கப் பட்டது. இரண்டாவது உலகப் போர் முடிந்ததும் நோபல் தேர்வுக் குழுவின் தலைவராக கன்னர் ஜான் இருந்தார். ராய்ட்டர் செய்தியின்படி 1947-இல் நோபல் தேர்வுக் குழுவின் ஐந்து உறுப்பினர்களில் இரண்டு உறுப்பினர்கள் அந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசினை காந்திக்கே வழங்க விருப்பப்பட்டனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அப்போதிருந்த முக்கிய ஆயுதமான அகிம்சைத் தத்துவமே அவர்கள் காந்தியை விருதுக்காகப் பரிந்துரைப்பதற்கு காரணமாக இருந்தது.  அதற்கு  ஜான் மற்ற உறுப்பினர்களிடம் எதிர்ப்பு  தெரிவித்தார். 

"அவர் ஒரு பெரிய ஆளுமைதான். அவரைப் பற்றிக் கூற மிக மிக நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்... அவர் அமைதியின் திருத்தூதர் மட்டுமல்ல... அவர் ஒரு தேசியவாதியும் கூட'' என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்தார் ஜான். ஏற்கெனவே இரண்டு உறுப்பினர்கள் காந்திக்காக ஆதரவு தெரிவித்திருக்கையில் மூன்றாவது உறுப்பினரான முன்னாள் வெளி நாட்டு அமைச்சரான பெர்கர் பிராட்லாண்ட்டும் காந்திக்கு வாக்களித்து விடுவாரோ என்று ஜான் கவலைப்பட்டிருக்கிறார். சர்வதேச உறவுகளின் முக்கியத்துவத்தினை பிராட்லாண்ட் அறிந்திருந்தாரெனவும் அந்த நாட்
குறிப்பில் ஜான் குறிப்பிட்டிருந்தார். 

மற்றொரு உறுப்பினரான மார்ட்டின் டிரான்மாலும் காந்திக்கு பரிசளிப்பதற்கு எதிராக இருந்தார்.  காந்திக்கான அமைதிக்கான நோபல் பரிசு அளிப்பதற்கு முன்னதாக இந்திய பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்திருக்கும் முரண்பாடுகள் தீர்க்கப்படுமென்ற டிரான்மாலின் எதிர்ப்பு ஜானின் நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் அமைதி உருவாகாமல் இன்னும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பல நாடுகளின் தலைவர்களுக்கு அந்த விருது அளிக்கப் பட்டபோது இந்தக் கருத்து வரவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளும் அந்தக் குழுவில் இருந்ததாகத் தெரியவில்லை.  

இறுதியில் 1947-க்கான அமைதிக்கான நோபல் பரிசு பிரிட்டனின் ஃபிரண்ட்ஸ் சர்வீஸ் கவுன்சிலுக்கும் அமெரிக்கன் ஃபிரண்ட்ஸ் சர்வீஸ் கமிட்டிக்கும் வழங்கப்பட்டது.  

1948 ஜனவரி 30-இல் காந்தி இறந்து விட்டார். நோபல் பரிசிற்குப் பரிந்துரைப்பதற்கான இறுதி நாளும் அந்த நாளிலிருந்து இரண்டு நாட்கள் கழித்திருந்தது. அப்போது காந்தியின் பெயரை விருதிற்காகப் பரிந்துரைத்து ஆறு கடிதங்கள் குழுவிற்கு வந்திருந்தன.   

ஆனாலும் அவருக்கு அந்த ஆண்டும் அமைதி விருதுக்கான வாய்ப்பு இல்லாமல் போனது. காரணம் இறந்த பின் யாருக்கும் இந்த விருது வழங்கும் நடைமுறை இதுவரை இல்லையென்று கூறினார்கள். 1948-இல் அந்த ஆண்டிற்கான அமைதிக்கான விருதிற்கு பொருத்தமாக வாழும் ஆளுமைகள் யாருமில்லையென்று அந்த ஆண்டிற்கான அமைதி நோபல் விருதும் வழங்கப்படவே இல்லை. 

ஆனால் 1961-இல்   ஐ.நா. சபையின் தலைமைச் செயலராக இருந்த டேக் ஹம்மார்ஸ் ஜோல்டிற்கு அவர் இறப்பிற்குப் பின் இந்த விருது வழக்கத்திற்கு மாறாகவே வழங்கப்பட்டிருக்கிறது. 

ரத்தமும் சதையுமுடன் இப்படி ஒரு மனிதர் இந்த உலகில் நடமாடி இருக்கிறாரென்பதை இனி வரும் தலைமுறை மிகவும் சிரமப்பட்டே நம்புமென்று காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஏற்கெனவே கூறி இருக்கிறார். அத்தகைய பெருமைக்குரியவருக்கு நோபல் பரிசு வழங்காமல் நோபல் பரிசுக் குழு  கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறது. 

காந்திக்குக் கிடைத்த பெரிய விருது அவர் உலகம் முழுவதும் நேசிக்கப்பட்டமைதான். கல்யாணம் காந்தியின் மறைவிற்குப் பின் சிறிது காலம் அமெரிக்காவில் இருந்தார். அப்போது அமெரிக்காவின் பிரபலமான ஹாலிவுட் நகைச்சுவை நடிகர்களான லாரல் அண்ட் ஹார்டியை ஒரு தடவை கல்யாணத்தின் நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தினார். லாரலும் ஹார்டியும் காந்தியைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கல்யாணத்தின் வீட்டிற்கே வந்து விட்டனர். காந்தியைப் பற்றி கல்யாணத்திடம் மிகவும் ஆர்வமுடன் பல கேள்விகள் கேட்டனர். காந்தியை சார்லி சாப்ளின் சந்தித்திருப்பதைப் பற்றியும்  அவர்களிடம் கல்யாணம் குறிப்பிட்டார். அவர்கள் கல்யாணம் கூறிய செய்திகளை மிகவும் வியப்புடன் உன்னிப்பாகக் கவனித்தனர்.  காந்தியின் மீது அவர்களுக்கிருந்த ஆர்வம் கல்யாணத்திற்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. அப்போது கல்யாணம் செய்து கொடுத்த சப்பாத்தியை அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டனர். அத்தோடு அவர் சப்பாத்தி செய்வதை சமையலறையில் வந்து பார்த்துக்கொண்டே இருந்தனர். அந்த சந்திப்பின்போது தங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் திடீரென ஒரு ஸ்டெதாஸ்கோப்பை எடுத்து ஒரு மருத்துவராக நடித்து கல்யாணத்தின் உடம்பைப்  பரிசோதிப்பது போல் அவர்கள் பாவனையும் செய்தனர். நிச்சயமாக அவர்களின் காதுகளுக்கு காந்தியின் குரல் கல்யாணத்தின் இதயத்திலிருந்து  கேட்டிருக்கும்.

எல்லையற்ற அன்புடன் எல்லை காந்தி
 எல்லை காந்தி எனப்படும் கான் அப்துல் கஃபார்கான் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்.  கல்யாணத்திடம் மிகுந்த அன்பு கொண்டவர். சுதந்திரம் கிடைத்து இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் நீண்ட காலங்கள் அவர் இந்தியாவிற்கு வரவே இல்லை. பாட்ஷா கானை (செல்லப் பெயர்) இந்தியாவிற்கு வருகை தர அவரை உடன்பட வைப்பதற்கு ஆண்டுகள் பல ஆகிவிட்டன.   

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையில் மிகுந்த வேதனைக்குள்ளானவர் எல்லை காந்தி.  "நீங்கள் நரிகளிடம் எங்களைத் தூக்கி எறிந்து விட்டீர்கள்''   என அடிக்கடி கூறி வந்தவர் அவர். இந்தியா வர அவர் உடன்படாததற்கு அந்தக் கசப்புணர்வு காரணமல்ல. பாகிஸ்தானிலுள்ள பட்டான் இன மக்களுக்கென சுயாட்சி உரிமை கொண்ட தனிப்பகுதி அமைக்கப்பட வேண்டுமென பாகிஸ்தானில் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார். அதனால் அவரால் இங்கு வருவதற்காக நேரத்தை ஒதுக்கிட இயலவில்லை. 

இருந்தும் இந்தியாவின் விருந்தினராக 22 ஆண்டுகளுக்குப் பின் 1969-இல் இந்திய மண்ணில் காலடி வைத்தார். அவரது அப்போதைய வருகையானது ராமர் காட்டிற்குச்  சென்ற பின் மீண்டும் அயோத்தியாவிற்கு வந்ததற்கு ஒப்பானது. அந்த வருகையின் போது சென்னையில் கல்யாணத்தின் வீட்டிற்கு  நேரில் வந்து அவரது குழந்தைகளோடு அளவளாவினார். அன்போடு குழந்தைகளுக்கு ஆப்பிள் கொடுத்தார். கல்யாணத்தின் குழந்தைகள் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.
(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com