அண்ணலின் அடிச்சுவட்டில்... 17

எல்லைப் பகுதியில் அகதிகள் முகாம்கள் இருந்தன... அதில் நிறைய இந்துக்கள் முஸ்லிம்களாக மாறி இருந்தனர். நிறைய பேர் கர்ப்பமாக இருந்தனர்.
அண்ணலின் அடிச்சுவட்டில்... 17

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்

எல்லைப் பகுதியில் அகதிகள் முகாம்கள் இருந்தன... அதில் நிறைய இந்துக்கள் முஸ்லிம்களாக மாறி இருந்தனர். நிறைய பேர் கர்ப்பமாக இருந்தனர்.

பாகிஸ்தானிலிருந்து வந்த பல கர்ப்பிணி இந்து பெண்கள் தன் பெற்றோர்களிடம் வர விருப்பப்பட்ட போது அவர்களது பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அப்போது அவர்களது பெற்றோர்களிடம் பேசி "உங்கள் பெண்தானே! எங்கே போவாள் பாவம் அவள். ஏற்றுக் கொள்ளுங்கள்'' என சமாதானப்படுத்தி ஒப்படைப்பதென்பது அவர்களுக்கு பெரிய சவாலாகவே இருந்தது.

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி இந்தியா பாகிஸ்தானுக்குரிய பங்காக 55 கோடி ரூபாயினை அந்த நாட்டிற்கு கொடுப்பதாக உறுதி கூறி இருந்தது. ஆனால் சுதந்திரம் கிடைத்த இரண்டே மாதங்களில் பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்ரமிக்கும் சூழ்ச்சியுடன் அங்குள்ள மலைசாதி மக்களின் உதவியுடன் காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது காஷ்மீர் மாநிலமானது இந்தியாவுடன் இருக்க வேண்டுமா அல்லது பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமாவென தீர்மானிக்காத தருணமாக இருந்தது.

இந்துக்களுக்கு பாகிஸ்தானின் தூண்டுதலால் ஏற்பட்ட கொடுந்துயர்களைக் காரணம் காட்டியும் பாகிஸ்தானிற்கு அந்த 55 கோடியைக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு பாகிஸ்தான் ஆயுதங்கள் வாங்கி அதை காஷ்மீரை ஆக்ரமிக்கப் பயன்படுத்துமென அமைச்சரவைக் குழுவிலேயே அச்சம் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரவையின் ஒப்புதலுடன் பட்டேல் அந்தப் பணத்தை பாகிஸ்தானிற்கு வழங்காமல் நிறுத்தி வைத்தார். இதை அறிந்த காந்தி அதிர்ச்சியுடன், "உடன்படிக்கையை மீறக் கூடாது... அது முறையல்ல; கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்'' என்று பட்டேலை அழைத்து சொன்னார்.

"30 வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த பட்டேலாக நீங்கள் இன்று இல்லை. நீங்கள் மிகவும் மாறி விட்டீர்கள்'' என்று காந்தி வருத்தத்துடன் கூறினார்.

அதற்கு பட்டேல் "அரசாங்க நிர்வாகமென்பது வேறு. அதைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்கவில்லை. நான் உடன்படிக்கையை மீறி அவர்களுக்கு 55 கோடியை கொடுக்க வேண்டாமென்று சொல்லவில்லை. அவர்கள் நீதிக்கு புறம்பாக காஷ்மீரில் ஆக்ரமிப்பதை நிறுத்தட்டும். அதன் பின்னர் அவர்களுக்கு அந்தப் பணத்தை கொடுக்கலாம் என்றுதான் சொல்கிறேன்'' என்றார்.

பட்டேல் எவ்வளவோ வலுவான காரணங்களைக் கூறி காந்தியை வலியுறுத்தியும் காந்தி உடன்படவே இல்லை. தொடர் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக கூறினார். அப்போது மிகுந்த விரக்தியுடன் வெளியே வந்த பட்டேல் வாசலினருகே வரும் போது "விவரம் புரியாதவர்' என்று இந்தியில் சொல்லிவிட்டுச் சென்றார். பின் இந்தியா அந்த 55 கோடியை பாகிஸ்தானிற்கு வழங்கியது. அதனால் இந்திய - பாகிஸ்தான் உறவு சீராகி பிரச்னைகள் தீர்ந்து விடுமென காந்தி நம்பினார்; அது நடக்கவே இல்லை.

பட்டேலின் கோபம்
நேருவுக்கும் பட்டேலுக்குமிடையே இருந்த மோசமான உறவிற்குச் சான்றாக இன்னொரு சம்பவமும் கூறலாம். சுதந்திரத்திற்கு பின் அஜ்மீரில் இந்து - முஸ்லிம் கலவரம் நடந்து கொண்டிருந்தது. அது தொடர்பாக பிரதமருக்கு ஒருவர் புகார் தந்தி அனுப்பி இருந்தார். உடனே நேரு அது குறித்து விசாரிக்க தனது தனிச் செயலாளர் ஒருவரை கலவர இடத்திற்கு அனுப்பினார்.

இதை அறிந்த உள்துறை அமைச்சர் பட்டேலுக்கு மிகுந்த கோபம். நேருவின் செய்கை அத்துமீறலென்றார். அந்த கலவரப் புகாரை விசாரிக்க நேரு முறைப்படி உள்துறை அமைச்சரான தன்னைத்தான் அணுகி விசாரித்திருக்க வேண்டும். பிரதமரே இன்னொருவரை வைத்து விசாரித்தால் உள்துறை அமைச்சகத்தின் வேலைதான் என்ன என்றார். இறுதியில் நேரு தான் தனியாக ஒருவரை விசாரிக்க அனுப்பியது தவறென ஒப்புக் கொள்ள அந்த சர்ச்சை முடிவிற்கு வந்தது.
சுதந்திரத்திற்கு பின்பு மேற்கு வங்காள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடையே பட்டேல் பேசும் போது "ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ்காரர்களின் வெற்றியின் ரகசியமாக இருக்கும் ஒரு பெரிய அம்சமானது அவர்களின் ஒழுக்கம்'' என்று குறிப்பிட்டிருந்தார். "காங்கிரஸ் அமைச்சர்கள் ஒழுக்கமாக இருக்கும் வரை இங்கே ஆபத்தில்லை'' என்றும் கூறினார்.

சில நாட்களில் மாநிலங்கள் மாற்றி அமைக்கப்பட்டபோது, இந்தியா முழுவதும் காங்கிரஸ் அமைச்சரவை உருவானது. முன்னாள் இளவரசர்களெல்லாம் ராஜ பிரமுகர்களெனப்படும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் அமைச்சர்கள் பலரும் அவர்களின் கீழ் பணியாற்ற எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களெல்லாம் ஆங்கிலேயர்களுக்கு உதவிய திருடர்களென்றும் காங்கிரஸ்காரர்கள் வர்ணித்தனர். உடனே பட்டேல் தனக்கே உரிய அங்கத நடையுடன் "இளவரசர்கள் திருடர்களாக இருக்கலாம். ஆனால் நான் இந்த நாட்டின் அதிகாரத்தை கொள்ளைக்காரர்களின் கைகளில் கொடுக்கத் தயாராக இல்லை'' என்று குறிப்பிட்டார்.

அன்றைய தலைவர்கள் எல்லோருடைய நோக்கமும் உயர்வாய் இருந்திருக்கிறது. பாதைகள் மட்டும் வெவ்வேறாய் இருந்திருக்கின்றன.

காந்தியின் இயல்பு
காந்திஜியின் இயல்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று, அவருடைய பார்வையும் செயலும் எப்போதும் பாதை விலகுவதேயில்லை. பிர்லாவின் வீடு ஏராளமான அறைகள் கொண்ட ஒரு பெரிய மாளிகை. அங்கே தங்கி இருக்கும் காந்திஜிக்கு அவரின் அறையைத் தவிர்த்து அங்கே வேறொன்றும் தெரியாது.

வெளியே இருந்து பிர்லாவின் வீட்டில் நுழைகையில் நேரே அவரது அறைக்கே சென்று விடுவார். ஒரு சின்ன அளவிற்குக்கூட அவருடைய தலை பக்கத்து அறையையோ அங்கிருக்கும் பொருட்களையோ பார்த்து கல்யாணம் கண்டதில்லை. காந்திஜியின் கண்கள் பிர்லாவின் அந்த பிரம்மாண்ட மாளிகையைப் பார்ப்பதில்லை. அவரைப் பொருத்தவரை அவர் தங்கியிருந்த அந்த எளிய அறை மட்டுமே அவருக்குத் தெரிந்தது. அவரது விரிந்த பார்வையானது உடனடிப் பணிகளிலேயே ஒருமித்து நின்றது. அவற்றையே தியானமாய் உற்றும் நோக்கியது.

காந்திக்கு இலத்தீன், பிரெஞ்சு என பல மொழிகள் தெரியும். அவராக தினசரி செய்தித்தாள்களைப் படிக்க மாட்டார். முக்கியமான செய்திகளைச் சுருக்கமாகத் தட்டச்சு செய்து கொடுப்பர். காந்தி அதைப் படிப்பார். அவருக்கு அந்தச் செய்தி குறித்த முழு விவரங்களும் தேவையென்றால் அவற்றைக் கல்யாணம் முழுதாகப் படித்துக் காண்பிப்பார்.

காந்தி மக்கள் பணியைத் தவிர்த்து வேறு எதற்கும் தனது நேரத்தைச் செலவிட்டதில்லை. தன்னையே அவர் கண்ணாடியில் பார்க்காமல் அந்த நேரத்திலும் மக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பிரெஞ்சு கார்ட்டூனிஸ்ட் ஒருவர் காந்தியோடு பேசிவிட்டுப் போனார். காந்தியிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த கார்ட்டூன் ஓவியர் காந்தியை அழகாக வரைந்து விட்டார். அதை காந்தியிடமும் காண்பித்தார்.

உடனே காந்தி "என் காதை இவ்வளவு பெரிதாகக் காட்டி இருக்கிறீர்களே'' எனக் கேட்டார்.

உடனே ஓவியர் "உங்கள் காது அவ்வளவு பெரிதாக இருக்கிறது. அதனாலேயே அவ்வாறு வரைந்தேன்'' என்றார்.

"அப்படியா... அது எனக்குத் தெரியாது. நான் என் முகத்தை இதுவரை சரியாகக் கண்ணாடியில் பார்த்தது கிடையாது'' என்றார் காந்தி.

அந்தக் காலத்தில் வானொலி வந்த புதிது. பெரும்பாலான மக்கள் வானொலிப் பெட்டியைப் பார்த்ததே கிடையாது. வானொலிப் பெட்டியைப் பார்ப்பதற்கே பலர் ஆர்வமாக இருக்கும்போது வானொலியில் தன் குரலைக் கேட்க இயன்றால் எவ்வளவு பரவசமாக இருக்கும்.

சுதந்திரத்திற்குப் பின் காந்தியுடைய உரையினை அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பத் தொடங்கிய காலமது. காந்தி அந்த உரையைக் கேட்பதற்கு எந்த முயற்சியும் செய்யவே இல்லை. ஒருதடவை நேருவின் செயலாளர் எம்.ஓ.மத்தாய் இந்திரா காந்தியோடு காந்தியைச் சந்திக்க வந்தார். டிரான்சிஸ்டர் வந்த புதிது. அப்போது அவர் ஒரு டிரான்சிஸ்டரை கையில் வைத்துக்கொண்டு அதை காந்தியிடம் காட்டினார். அதன் பொத்தானை அழுத்தி அதில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த காந்தியின் உரையைப் போட்டு காட்டினார். "ஓஹோ! இது என்னுடைய குரலா'' என காந்தி அவரது உரையை முதன்முதலாக டிரான்சிஸ்டரில் கேட்டு வியப்பு தெரிவித்தார்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையான தருணத்தில் பாகிஸ்தானிலிருந்து குருசேத்திராவில் முகாமிட்டிருந்த அகதிகளுக்காக மகாத்மா காந்தி தனது செய்தியைச் சொல்ல 1947 நவம்பர் மாதம் 12 ஆம் தேதி புதுடெல்லி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வந்தார். அந்த நாளையே அகில இந்திய வானொலி தேசிய ஒலிபரப்பு நாளாகக் கொண்டாடி வருகிறது.

கரியப்பாவிற்கு காந்தியின் பதில்
அந்தக் காலத்தில் இந்திய ராணுவத்தில் துணைத் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் கே. எம். கரியப்பா லண்டன் "இந்திய இல்லத்தில்' ஆற்றிய உரை காந்தியை மிகவும் வேதனைப்படுத்தியது. பிரிட்டனில் மேற்கல்வி கற்பதற்காக அப்போதுதான் லண்டன் வந்திருந்தனர் இந்திய மாணவர்கள் பலர். அவர்கள் மத்தியில் பேசுவதற்காக கரியப்பா வந்திருந்தார். லண்டனில் இந்திய ஹை கமிஷனராக இருந்த வி. கே. கிருஷ்ண மேனன் அவர்களையெல்லாம் தனது அலுவலக அதிகார குழுமத்தோடு வரவேற்று விருந்தளித்தார்.

அப்போது பேசிய ஜெனரல் கரியப்பா "உலக அளவில் இந்திய ராணுவத்தினர் ஒரு பெருமதிப்பினை நிலை நிறுத்தி இருக்கிறார்கள்'' என்றார். "நமது போர்த் துணிவானது உலகம் முழுக்க அறியப்பட்டதாகும். உலகிலேயே மிகவும் பெரிய வல்லரசாக நம் நாட்டை ஆக்குவதற்கான பெரிய எதிர்காலத்தினை நாம் கொண்டிருக்கிறோம்'' என்றும் கூறினார். மேலும் அவர் "இன்று நமது நாடு துண்டாகி விட்டது. ஒரு படைவீரனாகப் பேசுகையில், துண்டான இரு பகுதிகளையும் மீண்டும் நமது இந்தியப் படைவீரர்களால் ஒன்றாக்க முடியுமென உறுதியாக நம்புகிறேன். அதற்கு ஒரு வருடமாகலாம். இரண்டு வருடங்களோ அல்லது ஐந்து வருடங்கள் கூட ஆகலாம். இப்போதைக்கு இந்தியாவில் நமக்கு ஒரு வலுவான ராணுவம் வேண்டும். அகிம்சையைப் பற்றிப் பேசி எந்தப் பயனுமில்லை.'' என்றும் கூறி இருந்தார்.

செய்தித்தாள்களில் வந்த இந்தச் செய்தியினை கல்யாணம் காந்தியிடம் படித்துக் காட்டியபோதே காந்தி மிகுந்த வேதனையடைந்தார். கரியப்பாவின் லண்டன் பேச்சிற்கு ஒரு பதிலுரையினை அவர் கூற கல்யாணம் குறிப்பெடுத்து அதைத் தட்டச்சு செய்தார். காந்தியின் பதிலுரை இது...

"பெரும்பாலான வல்லுநர்களைப் போலவே ஜெனரல் கரியப்பாவும் தான் அறிந்தவற்றிற்கும் அப்பால் போயிருக்கிறார். அவருடைய பணியைப் பொருத்தவரை அவரால் அகிம்சையைப் பற்றி நல்ல ஒரு மேம்போக்கான அறிவைத்தான் பெற்றிருக்க இயலும். அதில் அவர் அகிம்சையைப் பற்றியே ஒரு தவறான கருத்திற்குள் தன்னை உட்படுத்தி இருக்கிறார். தன்னை அறியாமலேயே துரோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்றே நான் அச்சப்படுகிறேன். அகிம்சையைப் பொருத்தவரை அதில் நான் நல்ல பூரணமற்றவனாக இருந்தாலும், வாழ்க்கை முழுக்க அதில் நான் கொண்ட தொடர்ந்த பயிற்சியின் காரணத்தால் அகிம்சையில் என்னை ஒரு நிபுணராக நான் உரிமை கோருகிறேன்.

முழுமையாகச் சொன்னால் என் வாழ்க்கையில் எவ்வளவு அதிகமாக நான் அகிம்சையின் பயிற்சியினை மேற்கொள்கிறேனோ, அவ்வளவு துல்லியமாக பூரண அகிம்சையின் தூரம் எனக்கு தெளிவாகத் தெரிகிறது. இதைப் பற்றிய அறியாமையால் இந்தக் காலத்தில் வன்முறையின் முன் அகிம்சையானது சிறிய அளவிலே சாத்தியப்படக்கூடியதென்று உலகத்திலுள்ள மனிதனின் மிகப்பெரிய கடமையாக இதைச் சொல்ல வைக்கிறது. அதேநேரத்தில் இந்த அணுகுண்டு யுகத்தில் மாசற்ற தூய அகிம்சை மட்டுமே வன்முறையின் எல்லா தந்திரங்களையும் எதிர்கொண்டு திகைக்க வைக்கிற சக்தியாக இருக்கிறதென நான் உறுதியாகக் கூறுகிறேன்.

ராணுவ அறிவியலின் பிரிட்டீஷ் ஆசிரியர்களின் கல்வியும் பயிற்சியுமே ஜெனரலின் இன்றைய நிலைக்குக் காரணமாக இருக்கிறது. அதனாலேயே அகிம்சையானது அவர் அறிந்த நுட்பத்திற்கு அப்பால் செல்லாமல் இருப்பதற்கும் அவருக்கு உதவாததாய் இருக்கலாம். அகிம்சை சக்தியின் சாத்தியங்கள் குறித்துப் பேசுவதற்கு தங்களுக்கு எந்த உரிமையுமில்லையென்றே திறந்த மனதுடன் ஒத்துக்கொள்ளுமளவிற்கு ஜெனரல் கரியப்பாவைவிட பெரிய ஜெனரல்கள் தேவையான அறிவுடனும் எளிமையுடனும் இருந்திருக்கிறார்கள். ராணுவ அறிவியல் மற்றும் அதன் செயல்முறையில் அதன் கவைக்குதவாத நிலையினையே அதன் சொந்த மண்ணிலேயே கண்டு கொண்டிருக்கிறோம். பங்குச் சந்தையில் சூதாடி போண்டியானவன் அந்த வகை சூதாட்டத்தை வைத்து புகழ்ந்து பாடலாமா?
எம். கே. காந்தி
புது டெல்லி
07.11.47.
(தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com