அண்ணலின் அடிச்சுவட்டில்... 18

அண்ணலின் அடிச்சுவட்டில்... 18
அண்ணலின் அடிச்சுவட்டில்... 18

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்

காந்திஜி எதையும் விரயம் செய்யாமல் எல்லாப் பொருட்களையும் பயனுள்ள வழியில் பயன்படுத்தும் இயல்புடையவர். எதற்கும் தேவையற்ற செலவும் செய்ய விரும்புவதில்லை. அந்த அளவில் அலுவலகப் பொருட்களையும் மிகவும் சிக்கனமாகவே பயன்படுத்துவார். அவ்வாறு பாதுகாத்து வைக்கத் தேவையற்ற கடிதங்கள் மற்றும் தந்திகளின் வெற்று பின் பகுதியை குறிப்புகள் அல்லது வேறு கடிதங்கள் எழுதப் பயன்படுத்துவார். கடித உறைகளில் மடித்து ஒட்டப்பட்டிருக்கும் அதன் இதழ்களைப் பக்குவமாகப் பிரித்து அதை பல்வேறு அளவுகளில் கடிதம் எழுதும் காகிதங்களாக மாற்றி விடுவார். நெடிய பதில்களை அவர் சொல்ல கல்யாணம் எழுதுவார். சிறிய பதில்களை அவரே கடிதம் மற்றும் தந்தியின் முகப்பிலேயே எழுதித் தருவார். பின் கல்யாணம் அவற்றைத் தட்டச்சு செய்வார்.
ராஜ்குமாரி அம்ரித் கெளர் காந்தியோடு நெடுநாள் பணியாற்றியவராகையால் காந்தியின் சிக்கனத்தைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். சுதந்திரத்திற்கு பின் நேருவின் அமைச்சரவையில் அவர் மத்திய அமைச்சரானார். அப்போது அவர் காந்தியைச் சந்திக்க வரும் போதெல்லாம் காந்தியைப் பார்ப்பதற்கு முன் அவரது அலுவலகப் பணியாளர்களைப் பார்த்து காகிதக் கட்டுக்களைத் தருவார். அதெல்லாம் அவரது அமைச்சக அலுவலகத்திலுள்ள கடிதங்களும், சுற்றறிக்கைகளும், குறிப்புகளுமாக இருக்கும். அந்த அலுவலகக் காகிதங்களை அலுவலகப் பயன் முடிந்த பின் குப்பைப் பெட்டிக்குள் எறியாமல் தனியாகக் கட்டி வைத்து பத்திரமாகத் தருவார் அவர். ஒரு பக்கம் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் அந்தக் காகிதங்களின் மறுபக்கத்தை கல்யாணம் உட்பட காந்தியின் பணியாளர்கள் பயன்படுத்துவர். காந்தியின் சிக்கனத்தை அப்படி அவரோடு பணியாற்றிய எல்லோரும் உணர்ந்து உள் வாங்கியிருந்தனர்.

காந்தி கடிதம் எழுதும் காகிதத்தினை முழு அளவில் பயன்படுத்தி விடுவார். அதில் எந்த வெற்றிடமும் இல்லாத அளவில் அதைப் பயன்படுத்துவார்.
ஒரு தடவை காந்தி மெளன விரதமிருக்கும் நேரத்தில் கல்யாணத்திடம் பேச முடியாததால் ஒரு குறிப்பு எழுதி இருந்தார். அதில் ""நீங்கள் தட்டச்சு செய்த கட்டுரையின் நகல்கள் கிடைத்ததா? எப்படியிருந்தாலும் கட்டுரையின் முதற்படியை என்னிடம் கொடுக்கவும். தேவையைப் பொறுத்து நான் அதனை குஜராத்தி அல்லது இந்துஸ்தானியில் மாற்றுவேன். நான் சொல்லாமல் அலுவலரிடம் கட்டுரைப் பொதியை கொடுக்கக் கூடாது. இயன்ற அளவு நிறைய விஷயங்கள் நீங்கள் செய்வதற்கு உங்களுக்குத் தந்திருக்கிறேனென நம்புகிறேன். எல்லாம் என் முன் தயாராக இருக்க வேண்டும். தற்போது நான் தூங்க வேண்டும்'' (Have you got copies of the articles you have typed. In any case give me the manuscript. I shall render them into guj or hindusthani as the case is. The packet should not be given to the officer without reference to me.I hope I render as many things as possible. I must have everything before me. I must now sleep) என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பின் அந்த காகிதத்தில் கீழே எழுத இடமில்லாததால் ஓரத்திலிருந்த ஒரு சிறு இடத்தில் எழுதியிருந்தார். அதில் ""நான் தூங்கியபின் நீ அதை என்னிடம் தரலாம்'' (You can give it to me later after my sleep) என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின் இங்கே குறுக்காக எழுதி இருந்தார். ""கிருபளானியை ராஜேந்திர பாபு இன்னும் சில நாட்கள் பதவியில் தொடரச் சொன்ன செய்தி நகலைத் தரவும்'' (Give me the cutting inwhich Rajendra babu says to Kriplani to continue for a few days) என அதில் குறிப்பிட்டிருந்தார். அதாவது அன்று காலையில் கல்யாணம் அவருக்கு செய்தியைப் படித்துக் காட்டும் போது கிருபளானி ராஜிநாமா செய்யப் போவதை அறிந்து ராஜேந்திரபாபு அவரிடம் சில நாட்கள் பணியினைத் தொடர்வதற்கு கூறியதைக் குறிப்பிட்டிருந்தார். அது குறித்து மேலும் விவரங்களை அறிய செய்தித் துணுக்கினை கேட்டு கல்யாணத்திற்கு எழுதி இருக்கிறார்.
இன்னொரு விண்ணப்பத்தில் கல்கத்தாவிலிருந்து ஒருவர் தனது சகோதரியை காணவில்லையென காந்தியிடம் முறையிட்டிருந்தார். அன்றும் காந்தி மெளன விரதமாகையால் அது குறித்து ஒரு குறிப்பெழுதி இருந்தார்.
அதில் ""பெண்ணின் கணவர் கல்யாணத்திடம் பேசட்டும். அவருக்கு தமிழ் தெரியும். அவரின் மனைவியை கண்டுபிடிக்க வேண்டும்.'' (let the husband talk to kalyanam who knows tamil. The wife must be traced) என்று எழுதி இன்னொரு இடத்தில், ""பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு என்ன வயது? அவள் நகைகள் அணிந்திருந்தாளா? அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டாளா? அவனிடமிருந்து அவளை எப்படி பிரித்து செல்ல முடிந்தது? போன்ற விவரங்களை அவர் கல்யாணத்திடம் கூறட்டும்.'' (still let him talk to kalyanam how old is the wife. Was she loaded with the ornaments? Was she snatched from him? How could she be separated from him?) என்று எழுதி இருந்தார். அதில் காந்தி ஒரு பெண்ணைக் காணவில்லையென அவளது கணவன் புகார் செய்தது போல் புரிந்து கொண்டு அந்தக் குறிப்பினை எழுதி இருந்தார். உண்மையில் ஒருவர் தனது சகோதரியைத் தேடித்தான் காந்தியிடம் புகார் கூறி இருந்தார். அதனால் காந்தி எழுதிய அந்தக் குறிப்பில் மனைவிக்கு பதில் சகோதரியென கல்யாணம் திருத்தி இருந்தார். அவள் கம்மல், வெள்ளி ஆங்க்லெட் அணிந்திருந்தாளாம். ஹவுரா ரயில் நிலையத்தில் இரவு பத்து மணியளவில் ஒருவன் அவளை பலவந்தமாக இழுத்துச் சென்று விட்டதாக அவளின் சகோதரர் கல்யாணத்திடம் கூறி இருக்கிறார். கல்யாணம் அவனிடம் கேட்டு அந்த விவரங்களை எழுதி காந்தியின் பார்வைக்கு வைத்தார்.

காந்தியைச் சந்திக்கும் தலைவர்கள்

1946இல் டெல்லியில் பங்கி காலனியில் இருக்கும் போது காந்தி எழுதும் கட்டுரை உறையானது டெல்லியிலிருந்து வாரத்திற்கு ஒருமுறை அகமதாபாத்திலுள்ள நவஜீவன் அச்சகத்திற்கு அனுப்பப்படும். ஒவ்வொரு திங்கட் கிழமையும் கல்யாணம் அதை அனுப்புவார். அப்போது டெல்லியில் பாலம் விமான நிலையம் வரவில்லை. வில்லிங்டன் விமான நிலையமே இருந்தது. பிர்லா காந்தியின் உபயோகத்திற்காக கார்களை அனுப்புவார். ஆனால் கல்யாணம் அதை உபயோகப் படுத்த மாட்டார்.
தபால் அனுப்ப வேண்டிய தருணங்களில் பங்கி காலனியிலிருந்து பேருந்து மூலமாக கல்யாணம் வில்லிங்டன் விமான நிலையம் சென்று அங்குள்ள விமானப் பணியாளரிடம் தபால் உறைகளைக் கொடுத்து விடுவார். காந்தியின் அந்த தபால்களை இந்தியன் ஏர்லைன்ஸ் இலவசமாகவே கொண்டு சேர்த்தது. விமான நிலையம் போய் வருவதற்குள் இரண்டு மூன்று மணி நேரங்களாகி விடும். அதனால் அந்த நேரங்களில் காந்தியின் சில அத்தியாவசியமான வேலைகளை கல்யாணத்தால் செய்ய இயலாமல் போனது.
அப்போது பங்கி காலனியில் தினமும் காலை ஐந்து மணிக்கு ராஜேந்திர பிரசாத் வருவார். காந்தியோடு நடைப் பயிற்சி மேற்கொள்வார். அங்கே காந்தி தங்கியிருந்த இடத்திற்கு முன்பாக செயின்ட் தாமஸ் பள்ளி இருந்தது. அந்தப் பள்ளியின் புல்வெளியில்தான் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்வர். ராஜேந்திர பிரசாத்தின் வீடும் வில்லிங்டன் விமான நிலையத்தின் அருகே குயின் விக்டோரியா சாலையில்தான் இருந்தது.
ஒரு தடவை ராஜேந்திர பிரசாத் வந்திருந்தபோது காந்தி அவரிடம் இந்த தபாலை கல்யாணம் விமான நிலையத்தில் கொடுக்க வேண்டி இருப்பதாக கூறினார்.
உடனே ராஜேந்திர பிரசாத்தும் ""அதற்கென்ன? கல்யாணம் என்னோடு காரிலேயே வரட்டுமே. நான் அவரை விமான நிலையத்தில் விடுகிறேன்.'' என்று கூறினார். அவர் நடைப்பயிற்சி முடிந்து வருகையில் அவரோடு செல்வதற்கு கல்யாணம் தயாராக காத்திருந்தார். பின் அவருடைய காரிலேயே சென்றார். ராஜேந்திர பிரசாத்தின் வீடு வந்ததும் அவர் இறங்கிவிட்டு ஓட்டுநரிடம் கல்யாணத்தை விமான நிலையத்தில் விட்டு வரச் சொன்னார். அந்த தபாலை விமான நிலையத்தில் சேர்த்த பின் திரும்பி வரும் போது கல்யாணம் பேருந்திலேயே வந்தார். அப்போதிருந்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் ராஜேந்திர பிரசாத் வரும் போது அவருடனேயே காரில் கல்யாணம் விமான நிலையத்திற்குச் சென்று வந்தார். அதனால் நேர விரயமின்றி காந்திக்கான அன்றாட அத்தியாவசிய வேலைகளை இன்னும் அதிகமாக கல்யாணத்தால் செய்ய இயன்றது.
இன்னொரு நாள் பங்கி காலனியில் இருக்கும்போது நடந்த ஒரு சம்பவம். காந்திக்கு அன்று பிறந்த தினம். அன்று காலை காந்தியை வாழ்த்த ராஜேந்திர பிரசாத் அங்கு வந்திருந்தார். அவருடைய கார் வளாகத்தினுள் நுழைந்தபோதே, அதைப் பார்த்த கல்யாணம் காந்தியிடம் ராஜேந்திர பிரசாத் வருவதைக் கூறி இருக்கிறார். காந்தி ஆவலுடன் அவருக்காக காத்திருந்தார்.
அதற்கிடையில் பங்கிக் காலனியிலிருந்த குழந்தைகளுக்கும் மக்களுக்கும் அங்கு வந்த காந்தி தொண்டர் ஒருவர் இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தார்.
ராஜேந்திர பிரசாத் காரிலிருந்து இறங்கியதும் அவரிடம் ""நீங்களே குழந்தைகளுக்கு இந்த இனிப்புகளை வழங்குங்கள்'' என்று வேண்டினார் அந்தத் தொண்டர்.
உடனே ராஜேந்திர பிரசாத்தும் அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தார். அதனால் அவர் காந்தியின் அறைக்கு வருவதற்கு கால தாமதமாகி விட்டது.
வெகு நேரம் காத்திருந்த காந்தி அவரைப் பார்த்ததும் ""அப்போதே வந்து விட்டீர்களே? ஏன் இவ்வளவு கால தாமதம்'' என்று கேட்டார்.
உடனே ராஜேந்திர பிரசாத்தின் பின் வந்து கொண்டிருந்த கல்யாணம் ""அவர் குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுத்துக் கொண்டிருந்தார்'' என்று காலதாமதமான காரணத்தைச் சொல்லி இருக்கிறார்.
""எதற்காக?'' என்று கேட்டார் காந்தி.
அதற்கு கல்யாணம் ""இன்று உங்களது பிறந்த தினமாகையால் அங்கே இனிப்பு வழங்கினார்கள்'' என்றார்.
உடனடியாகவே காந்திக்கு விருப்பமில்லாத விஷயமிது என்பதைப் புரிந்துகொண்ட கல்யாணம் ""இனிப்பினை பாபு கொண்டு வரவில்லை. அங்கே இனிப்பு வழங்கிக் கொண்டிருந்த மற்றொருவரின் வேண்டுதல் பேரிலேயே அவர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்'' என்றார்.
உடனே ராஜேந்திர பிரசாத்திடம் இது குறித்து கேட்டார் காந்தி. ""இது மிகவும் தவறானது'' என்றார்.
""இனிப்பு வழங்கி அவர்களைச் சோம்பேறிகளாக்கக் கூடாது. அவர்களுக்கு வேலைவாய்ப்புகளே முக்கியமானது'' என்றார்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் சுதந்திரத்திற்கு பின் அமைக்கப்பட்ட முதலாவது அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்தார். ஆஸ்துமா நோய் அவரை அடிக்கடி வருத்தியது. அவருக்கு இந்த நோயின் காரணமாக சுவாசம் விடுவதில் அவ்வப்போது மிகுந்த சிரமங்கள் இருந்தன.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com