அண்ணலின் அடிச்சுவட்டில்...19

காந்தி பிர்லா இல்லத்தில் தங்கியிருந்த அந்த காலகட்டத்தில் ஒரு பொதுக்கூட்டத்திற்குச்  சென்றிருந்தார்.
அண்ணலின் அடிச்சுவட்டில்...19

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்
காந்தி பிர்லா இல்லத்தில் தங்கியிருந்த அந்த காலகட்டத்தில் ஒரு பொதுக்கூட்டத்திற்குச்  சென்றிருந்தார்.  கல்யாணமும் உடன் சென்றிருக்கிறார். அப்போது ஒருவர் காந்தியிடம் ராஜேந்திர பிரசாத் உடம்பு நலமின்றி படுத்தே இருப்பதாகக் கூறினார். அதைக் கேட்டதும் காந்தி வருத்தமடைந்தார். திரும்பி வருகிற வழியில் காந்தி திடீரென ராஜேந்திர பிரசாத்தைப் பார்த்துவிட்டுப் போவோமென்றார். 

எல்லாருமாக நேராக அவர் வீட்டிற்குப்  பயணம் செய்தனர். அங்கே பாபுவின் வீட்டின் முன்னறையில் அப்போது வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த சி.ஹெச். பாபா இருந்தார். திடீரென காந்தியை அங்கு பார்த்ததில் பாபாவுக்கு மிகுந்த ஆச்சரியம். உள்ளே ராஜேந்திர பிரசாத் படுக்கையில் இருந்தார்.

அவரால் பேச இயலவில்லை. சுவாசிப்பதில் மிகுந்த அசெளகரியம் இருந்ததால் நாலைந்து தலையணைகளை வைத்து அதன்மேல் சாய்ந்திருந்தார். காந்தி அவரிடம் பரிவோடு விசாரித்தார். பின் பிர்லா இல்லத்திற்கு காந்தி  திரும்பினார். 

டாக்டர் ராஜேந்திர பிரசாத் புதுடெல்லியில் உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு பீகாரில்  ஓலை வேயப்பட்ட குடிசையிலேயே வசித்து வந்தார். 1952-இல் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று தொடர்ந்து பத்து ஆண்டுகள் அந்தப் பொறுப்பினை வகித்தார்.

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் 1962 மே 14 ஆம் தேதி மீண்டும் பாட்னாவிற்கே திரும்பினார். அவர் முன்பு தங்கியிருந்த ஓலை வேயப்பட்ட குடிசையிலேயே சில மாதங்கள் இருந்தார். அங்கேயே தொடர்ந்து இருக்கவும் விரும்பினார். அப்போது அவரை பல சேவை அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விழாக்களுக்கு அழைத்தனர். வாகனத்தில் அழைத்துச் செல்ல வசதியற்ற எளிய விழாக் குழுவினர் அவரை விழாக்களுக்கு அழைத்தபோது வாகனமின்றி உடல்நலம் குன்றிய பிரசாத் மிகவும் சிரமப்பட்டார். அப்போது முன்னாள் குடியரசுத்தலைவர் என்ற அளவில் அவருக்கு ஒரு காரினை வழங்க அவரது நண்பர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்க பிரசாத்தை வலியுறுத்தினர். அரசியல் சட்ட விதிமுறைகளின்படி முன்னாள் குடியரசுத்தலைவருக்கு வாகன வசதி செய்து தர இயலாதென அப்போதைய மத்திய அரசு மறுத்து விட்டது. ராஜேந்திர பிரசாத்தின் வயதிற்கும் உடல் நிலைக்கும் அவர் வசித்த குடிசை ஏற்றதல்ல எனக் கருதிய லோகநாயக் ஜெய பிரகாஷ் நாராயண் அவருக்காக நண்பர்கள் பலரிடமிருந்தும் நிதி திரட்டி பீகார் வித்யா பீடத்திலுள்ள மாந்தோப்பின் ஒரு மூலையில் ஒரு சிறு வீட்டினைக் கட்டிக் கொடுத்தார்.

அந்தக் காலத்தில் பல அமைச்சர்களும் காந்தியைச் சந்திக்க அடிக்கடி வருவார்கள். நேரு டெல்லியில் அலுவலகம் செல்லும் வழியில் காலையில் காந்தியைச் சந்தித்துவிட்டுப் போவார். நேரு வரும் சில நேரங்களில் காந்தி குளித்துக் கொண்டிருப்பார். அப்போது நேரு நேராக அவர் குளிக்குமிடத்திற்கு சென்று விடுவார். காந்தி குளித்துக் கொண்டே நேருவுடன் பேசிக் கொண்டிருப்பார். வாரத்தில் ஓரிரு நாட்கள் சர்தார் வல்லபாய் பட்டேல் மாலையில் வந்து காந்தியுடன் பேசிவிட்டுப் போவார். 

ஒருதடவை அரசின் உயர் அதிகாரி ஒருவர் காந்தியைச் சந்திக்க விரும்புவதாக கல்யாணத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் மரியாதை நிமித்தமாகவே காந்தியைச் சந்திக்க விரும்பினார். கல்யாணமும் காந்தியிடம்  அதற்கு அனுமதி கேட்டார்.  காந்தி குறிப்பிட்ட நேரத்திற்கு வரச் சொன்னார்.  அவரும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் கூடை நிறைய பழங்களுடன் காந்தியைச் சந்திக்க வந்தார். அவரை காந்தியிடம் கொண்டு விட்டார் கல்யாணம். 

காந்தி அவரிடம் சில கேள்விகள் கேட்டார்.  வந்த அதிகாரி எந்தப் பதிலும் சொல்லவே இல்லை. நேரம் போய்க் கொண்டே இருந்தது. காந்திக்கு வேறு முக்கிய வேலைகள் இருந்தன. காந்தி ஏதோ கேட்க கேட்க அந்த அதிகாரி பதிலே சொல்லவில்லை. அப்போதுதான் அவர் காது கேட்புத் திறனற்றவரென்று காந்திக்குப் புரிந்தது. அவரிடம் அன்பாகச் சிறிது பேசினார். ஆனால் அந்த அதிகாரியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. உடனே காந்தி கல்யாணத்திடம் அவரிடம் ஏதாவது  பேசி அனுப்பிவிட ஒருவிதமாக சைகையில் கூறினார். கல்யாணமும் அவ்வாறே சாதுர்யமாகப் பேசி அவரை அனுப்பி வைத்தார்.

மெளலானா அபுல் கலாம் ஆஸôத்திற்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு. அவர் காந்தியின் முன்பே கூட புகை பிடிப்பார். அவர் வந்ததுமே காந்தியின் உதவியாளர்கள் ஒரு சிறு கிண்ணத்தை எடுத்து அதில் சிகரெட் சாம்பல் பறக்காமல் இருப்பதற்காக ஓரிரு துளிகள் நீரை விட்டு அவர் முன்பு வைத்துவிடுவர். காந்தியின் முன்பே புகை பிடிப்பவராக அவரைத்தான் கல்யாணம் பார்த்திருக்கிறார். 

விஸ்வேஸ்வரய்யா ஒரு தடவை காந்தியைப் பார்க்க  வந்தார். அப்போது அவருக்கு சுமார் 86, 87 வயதிருக்கும். அவரின் வயது காரணமாக  முதுகு கூன் விழுந்திருக்கும்.  அவர் மட்டுமே காந்தியின் முன்பு நாற்காலியில் உட்கார்வார். மவுண்ட் பேட்டன், லேடி மவுண்ட் பேட்டன், வெளிநாட்டுத் தூதர்கள் உட்பட மற்றவர்களெல்லோருமே காந்தி மீதுள்ள மரியாதை காரணமாக அவரைச் சந்திக்க வரும்போது கீழேயே மண்டியிட்டு உட்கார்வர். அவர்கள் உட்காருவதற்காக காந்தி நாற்காலிகளை எடுத்து வரச் சொல்வார். ஆனால் அவர்கள் அதில் உட்கார மறுத்து விடுவர்.

சுதந்திரம் கிடைத்த பின் காந்தி டெல்லி பிர்லா மாளிகையில் தங்கி இருந்தபோது பிர்லா காந்தியை தினமும் காலை ஐந்து மணிக்குச் சந்திக்க வந்துவிடுவார். 
காந்தி கல்கத்தாவில் முகாமிட்டிருக்கும் போது  அப்போது மேற்கு வங்காள ஆளுநராக இருந்த லார்டு சர் ராபர்ட் கேசி காந்தியை தினமும் சந்தித்து விடுவார். ஒரு நாள் கேசி காந்தியை சந்திக்காதபோது அடுத்த நாள் செய்தித்தாளில் காந்தியை லார்டு கேசி இன்று சந்திக்கவில்லை என்பதே செய்தியாகி விட்டது. 

காந்தியின் கையெழுத்து மிகவும் மோசமாக இருக்கும். காந்தி வைஸ்ராயைக் கூட "டியர் ஃப்ரண்ட்' என்றுதான் எழுதுவார். காந்தி அவசரத்தில் எழுதும்போது அவரது கையெழுத்தில் dear friend என்பது dear friend என்பது போல் இருக்கும். அதாவது பூதம் என்ற பொருள்படும்படி இருக்கும்.  ஒருதடவை லார்டு கேசி காந்தியின் எழுத்து குறித்து நகைச்சுவையாக எழுதி இருந்தார். அதில் அவர் காந்தி தனக்கெழுதிய கடிதத்தில் தன்னை  "அன்புள்ள பூதம்' என்று குறிப்பிட்டு எழுதி இருப்பதுபோல் தெரிகிறதென்று குறிப்பிட்டார். 

வங்காள காங்கிரஸ் தலைவராக இருந்த கே.சி. நியோகி என்பவர் சுதந்திரம் கிடைத்த பின்பு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் அகதிகளுக்கான நிவாரண அமைச்சராக (Minister for relief and rehabilitation) நியமிக்கப்பட்டார். டெல்லியில் குவிந்து கொண்டிருந்த லட்சக்கணக்கான அகதிகளுக்கான நிவாரணத்தைக் கவனித்துக் கொள்வதே அவருக்கான பொறுப்பாக இருந்தது. அகதிகளுக்கான தேவைகள் அப்போது அதிகமாகவே இருந்தன. வீடில்லை.. உடை, உணவு இல்லை,  படிக்கப் பள்ளி இல்லை, மருத்துவ வசதி இல்லையென அவர்களின் குறைகள் கூடிக் கொண்டே இருந்தன. அதற்கான முழுப்பொறுப்பையும் நியோகியே கவனித்துக் கொள்ள வேண்டி இருந்தது. நியோகி தீவிரமாக அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

அந்த நேரத்திலேயே ஊழல் ஆரம்பித்து விட்டது. அகதிகளின் உணவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை பலரும் சாப்பிட்டு விட்டனர். அவர்களுக்கான ஆடைகளில் சிலவற்றை பலர் சுருட்டிக் கொண்டனர். இது தொடர்பாக ஏராளமான புகார் மனுக்கள் காந்தியிடம் வந்து குவிந்தன. இரண்டே மாதங்களில் இவ்வளவு புகார் மனுக்கள் அகதிகளிடமிருந்து வர காந்தி மிகவும் வருத்தமடைந்தார். அப்போது பல்வேறு அமைச்சர்களும் தங்கள் துறை சார்ந்த பணிகளை அவ்வப்போது காந்தியை சந்தித்துப் பகிர்ந்து கொண்டனர். ஆனால் அகதிகள் மற்றும் நிவாரணத் துறை அமைச்சரான கே. சி. நியோகி மட்டும் காந்தியை சந்திக்கவே இல்லை. காரணம் அவரால் காந்தியைச் சந்திக்க இயலவில்லை. அவருக்கு மற்றத் துறை அமைச்சர்களைக் காட்டிலும் அதிக அளவில் பணிப்பளு இருந்தது. நிறைய புகார்கள் வந்ததாலும் அமைச்சர் தன்னை சந்திக்காததாலும் காந்தி அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தன்னை சந்திக்காததன் காரணம் கேட்டு காந்தி எழுதி இருந்தார். அந்தக் கடிதமே இது...

அகதிகள் மற்றும் நிவாரணத்துறை அமைச்சராக நீங்கள் ஆன பின் நாம் சந்திக்கவில்லையென்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனது கவனத்திற்கு வந்த புகார்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு நீங்கள் என்னை மன்னிப்பீர்கள்.. மக்களால் எளிதில் உங்களைச் சந்திக்க இயல்வதில்லை என்பது அவற்றில் ஒன்றாகும். அதையும் மீறி சில மணித்துளிகள் உங்களை அவர்கள் சந்திக்க இயன்றால் அவர்கள் மறுதலிப்புடன் மொத்தமாக விலக்கப்படுகிறார்கள்.

அவர்கள் எதிர்பார்ப்பது பொறுமையான ஒரு செவிமடுத்தல். எல்லா அகதிகளும் ஏழை வர்க்கத்தைச் சேர்ந்தவர்களல்ல.  சிலர் ஊதியத்துடனான தொழிலை வாழ்க்கையாகக் கொண்டவர்கள்.  பணக்காரரோ ஏழையோ எல்லோரும் அவர்களது அமைச்சரிடமிருந்து சரியான மதிப்பிற்கும் செவி மடுப்பிற்கும் ஒரே மாதிரியான உரிமை கொண்டவர்களென நான் முறையிடுகிறேன்.  இந்த அகதிகள் மோசமான அளவிலேயே கவனிக்கப்பட்டவர்கள். மோசமான அளவிலேயே உணவு வழங்கப்பட்டவர்கள். சிலர் எந்த நோக்கமுமின்றி அலைந்து திரிந்து உணவு உட்கொள்ளாமலேயே செல்பவர்கள்.  அன்றாடம் என் காதுகளில் கொட்டுகின்ற எண்ணிலடங்கா புகார்கள் அனைத்தையும் நான் உங்களிடம் சொல்லவில்லை.  சில மாதிரிகளை உங்களுக்கு நான் தர வாய்த்திருப்பதன் மூலம் மற்றவற்றை நீங்கள் அனுமானிக்க இயலும். உங்களின் கருத்துப்படி, இந்த புகார்களின் சாரத்தில் எதிலும் ஒன்றுமில்லையென்றால் இதைப் பொருட்படுத்த வேண்டாம். அதேபோல் உங்களின் மதிப்பான நேரத்தை நான் இடையூறு செய்ததற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களின் முழு கவனத்தையும் ஆக்ரமிக்கிற அலுவலுக்காக நீங்கள் நியமிக்கப் பட்டிருக்கிறீர்களென நான் அறிவேன்.
தங்கள் உண்மையுள்ள.
எம். கே. காந்தி
   (தொடரும்)
எழுத்து வடிவில்:
குமரி எஸ். நீலகண்டன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com