தாவரங்களின் பகடையாட்டம்

நாம் சிந்திப்பதுபோலவே தாவரங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. இதை பின்வருமாறு பார்க்கலாம். தாவரங்களால் நகரமுடியாது என்றபோதிலும், அவற்றை பூச்சிகள் தாக்கும்போது எதிர்பூச்சிகளை தாம் வெளியிடும் வேதிப்பொருட்கள் மூலம் கவர்ந்து தாவரங்கள் தம்மைக் காத்துக்கொள்கின்றன. ஆக, தாவரங்களால் தற்காப்பு முடியும்.

ஒரு விளையாட்டு. நீங்கள் இரண்டு தேர்வுகள் செய்யலாம். ஒன்று: நீங்கள் ஐயாயிரம் ரூபாயை தேர்ந்தெடுக்கலாம். இரண்டு: பூவா தலையா போட்டு, தலை விழுந்தால் பத்தாயிரம் ரூபாயை வெல்லலாம். பூ விழுந்தால் ஒரு ரூபாய்கூட கிடையாது. இந்த இரண்டில் நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்? முதல் தேர்வில், நீங்கள் எதுவும் செய்யாமல் நிச்சயமாக ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும். இரண்டாவது தேர்வில், தலை விழுந்தால் பத்தாயிரம் ரூபாய்; இல்லாவிட்டால் எதுவுமே இல்லை.

பொதுவாக, பெரும்பாலானோர் முதல் தேர்வையே செய்வார்கள். எப்படியும் ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும்போது எதற்கு தேவையற்ற நிச்சயமின்மைக்குள் செல்ல வேண்டும்?

நீங்கள் எங்கோ ஒரு பாலைவன நகர் ஒன்றில் மாட்டிக்கொண்டீர்கள். எதிரிகள் இன்னும் 24 மணி நேரத்தில் நீங்கள் இருக்கும் நகரைச் சுற்றி வளைத்துக்கொள்வார்கள். அந்த நகரிலிருந்து போக உங்களுக்கு கட்டாயமாக பத்தாயிரம் ரூபாய் இருந்தே ஆக வேண்டும். 24 மணி நேரத்துக்குப் பிறகு நீங்கள் அந்த நகரில் இருந்தால், நிச்சயம் நீங்கள் கொல்லப்படுவீர்கள்.

இந்தச் சூழலில், இதே இரண்டு தேர்வுகள் உங்களுக்கு அளிக்கப்படுகின்றன. ரூபாய் ஈட்ட இது ஒன்றே வழி. இப்போது நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்?

ஐயாயிரம் ரூபாய் சர்வ நிச்சயமாகக் கிடைக்கலாம்; ஆனால் 24 மணி நேரத்தில் சாவு நிச்சயம். ஒரு ‘ரிஸ்க்’ எடுத்துப் பார்த்தால், தேவைப்படும் பத்தாயிரம் கிடைக்கக்கூடும். எனவே, இரண்டாவது தேர்வை தைரியமாக எடுத்துப் பார்த்துவிடுவதுதான் சரியாக இருக்கும். அப்படித்தான் பெரும்பாலானவர்கள் முடிவு செய்வார்கள்.

இப்படிப்பட்ட முடிவுக்கு வர, கொஞ்சம் யோசித்து நிலைமைகளை சீர்தூக்கிப் பார்த்துச் செயல்பட வேண்டும். கொஞ்சம் சிக்கலாகவே யோசிக்க வேண்டும்.

அப்படி ஒரு செயல்பாடு தாவரங்களில் இருக்கக்கூடும் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.  

பட்டாணிச் செடியின் வேர்கள் இரண்டாகப் பாகுபடுத்தப்படுகின்றன. ஒரு பகுதி வேர்கள் ஒரு மண் தொட்டியிலும், மற்றொரு பகுதி வேர்கள் மற்றொரு மண் தொட்டியிலும் வளர்கின்றன. இவற்றில், ஒரு மண் தொட்டியில் செடியின் வளர்ச்சிக்கு வேண்டிய ஊட்டச் சத்துகள் சீராகவும் வேண்டிய அளவும் கிடைக்கின்றன. மற்றொரு தொட்டியிலோ ஊட்டச் சத்துகள் கிடைக்கின்றன. ஆனால், சீரற்றதன்மையில் கிடைக்கின்றன. அதாவது, சில நேரங்களில் அதிகமாக ஊட்டச் சத்துகள் கிடைக்கலாம். சில நேரங்களில் குறைவாகக் கிடைக்கலாம். இப்போது, பட்டாணிச் செடி வேர்களை சீரான ஊட்டச் சத்து கிடைக்கும் தொட்டியிலேயே அதிக அளவில் முளைவிட்டு படரவைக்கிறது. சீரற்றதன்மையில் ஊட்டச் சத்துகள் கிடைக்கும் தொட்டியிலோ அது குறைவான அளவே வேர்கள் படருகின்றன. அதாவது, சீரான அளவில் ஊட்டச் சத்துகள் வேண்டிய அளவு கிடைக்கும்போது செடி தன் வேர்கள் படர்தலை ‘ரிஸ்க்’ எடுக்காதவண்ணம் செயல்படுத்துகிறது.

இப்போது அடுத்தகட்டத்துக்கு வருகிறோம்.

முந்தையதைப்போலவே வேர்கள் இரண்டாகப் பகுக்கப்பட்ட பட்டாணிச் செடி. அதேபோல இரு தொட்டிகளில். ஆனால் இப்போது சீராக ஊட்டச் சத்துகள் கிடைக்கும் தொட்டியில் அதேபோல சீராக ஊட்டச் சத்துகள் கிடைக்கும். ஆனால், தாவரத்தின் வளர்ச்சிக்குப் போதுமான சத்து அங்கே கிடைக்காது. அதைவிட குறைவாகவே கிடைக்கும். சீரற்றவிதத்தில் ஊட்டச் சத்துகள் கிடைக்கும் தொட்டியிலோ முன்புபோலவேதான். அதிகமாகவும் கிடைக்கலாம்; குறைவாகவும் கிடைக்கலாம்.

செடி என்ன செய்கிறதென்றால், சீரற்றவிதத்தில் ஊட்டச் சத்துகள் கிடைக்கும் தொட்டியில் அதிக வேர்விட்டுப் பரவ ஆரம்பிக்கிறது. அதாவது, ‘ரிஸ்க்’ எடுத்துத் தேடுகிறது. பொதுவாக, மனிதர்களிடமும் புத்திபூர்வமாகச் செயல்படும் விலங்குகள் என நாம் கருதியவற்றிடமும் நாம் கண்ட செயல்பாடுகள் இவை. இவற்றை நாம் இப்போது பட்டாணிச் செடிகளில் காண்கிறோம். இக்கட்டுச் சூழல்களில் பகடையாட்டம் போன்ற ஒரு செயல்பாட்டை இங்கே தாவரங்கள் எடுக்கின்றன. இவை, ஆரம்பகால பரிசோதனைகள் என்றாலும், இவை திறக்கும் கதவுகள் அபரிமிதமானவை.

இவை தாவரங்களின் அறிதல் திறத்தைக் குறித்தது மட்டுமல்ல; நம் அகத்தையும் குறித்த ஒன்று. நம் அறிவியல் செல்லும் திசையினைக் குறித்த ஒன்றும்கூட. அண்மைக்காலங்களில் அறிவியல் தொடர்ந்து பிற உயிரினங்களின் அறிதல் திறன் குறித்து நாம் கொண்ட நிலைப்பாடுகளைத் தொடர்ந்து விசாலப்படுத்தியபடியே இருப்பதை நாம் காணலாம். நாம் நம்முடையவையாக மட்டுமே அறிந்திருந்த அறிதல் திறன்கள் பிற உயிரினங்கள் பலவற்றில் இருப்பதை அறிகிறோம். அவை நம்முடன் நெருங்கிய பரிணாமக் கிளைகளில் உதித்த உயிரினங்கள் மட்டுமல்ல. நாம் பரிணாமக் கிளைகளில் ‘கீழே’ இருப்பவை என நினைத்த உயிரினங்களும்கூட சிக்கலான அறிதல் திறன்களை ஏறத்தாழ நமக்கொப்ப வெளிப்படுத்துகின்றன.

இது வெறும் அறிவியலின் வளர்ச்சி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அறிவியலின் பார்வை மாற்றம் என்றும் கூற வேண்டும்.

இந்த ஆராய்ச்சியையே எடுத்துக்கொள்ளலாம். இதை வடிவமைத்தவர்களில் ஒருவர் டாக்டர். ஹகாய் ஷெமிஷ் (Hagai Shemesh). இவர் இஸ்ரேலைச் சேர்ந்த தாவர-சூழலியலாளர். இவர் இந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தாவரங்களுக்குத் தன்னுணர்வு இருக்கும் என்கிற நிலைப்பாட்டை குறித்து மிகவும் கவனமாக இருக்கிறார்:

‘‘(நான் இதன் அடிப்படையில்) தாவரங்களுக்குத் தன்னுணர்வு இருக்கும் என சொல்லும் அளவுக்குப் போகமாட்டேன். சரியாக இதைச் சொல்வதாக இருந்தால் இப்படிச் சொல்லலாம். ஒரு காலகட்டத்தில் சிக்கலான கட்டமைப்புகள் கொண்ட மூளை உடைய விலங்குகளால் மட்டுமே செய்யமுடியும் என நாம் கருதிய சில செயல்பாடுகளை நாம் அவற்றைவிட ‘எளிமையான’ உயிரினங்களில் காணமுடிகிறது. நான் நினைப்பது என்னவென்றால், மிக எளிமையான இயக்கக் கட்டமைப்புகளிலிருந்து மிகவும் சிக்கலான நடத்தைகள் முகிழ்த்தெழ முடியும்”.

இவ்வளவு கறார்தன்மையுடன் இவ்விஷயத்தை அணுகும் ஷெமிஷ், அதே நேரத்தில் மற்றொன்றை ஏற்றுக்கொள்கிறார்: அறிவியல் பிற உயிரினங்களின் அறிதல் சார்ந்து மேலும் மேலும் அனுகம்பத்தன்மை (empathy) அடைந்துவருகிறது.

டேனியல் சாமோவிட்ஸ் (Daniel Chamovitz) மற்றொரு உயிரியலாளர். இவரும் இஸ்ரேலியர். இவரும் தாவர அறிதலைக் குறித்து ஆராய்கிறார். ஒரு தாவரம் எவ்வெவற்றை அறிந்துகொள்கிறது என அவர் நூல் எழுதியிருக்கிறார். அவர் தாவரங்களுக்கு வெவ்வேறு வகைப்பட்ட புலன் உணர்வுகள் இருக்கின்றன என எழுதியிருக்கிறார். ஏறக்குறைய இருபது வெவ்வேறுபட்ட அறிதல்களை அவை செய்யமுடியும் என்கிறார். தாவரங்கள் ‘பார்க்க’ முடியும் என்கிறார். ஆனால், அவற்றுக்கு கண்கள் இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார். நாம் காண இயலாத நிறங்களை அவற்றால் ‘காண’ முடியும் என்கிறார். அவை நுகரமுடியும். அவற்றுக்கு நாசிகள் இல்லை. அவரிடம் தாவரங்கள் சிந்திக்குமா எனக் கேட்டதற்கு அவர் சொல்கிறார்: ‘‘அவை சிந்திக்காது. காரணம் அவை சிந்திக்குமா என்பதை நான் சிந்திக்கும் பார்வையிலேயே காண்பதால் இருக்கலாம்”. ஏறக்குறைய ஸென் தன்மையுடனான ஒரு வாசகம் அது.

நாம் சிந்திப்பதுபோலவே தாவரங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. இதை பின்வருமாறு பார்க்கலாம். தாவரங்களால் நகரமுடியாது என்றபோதிலும், அவற்றை பூச்சிகள் தாக்கும்போது எதிர்பூச்சிகளை தாம் வெளியிடும் வேதிப்பொருட்கள் மூலம் கவர்ந்து தாவரங்கள் தம்மைக் காத்துக்கொள்கின்றன. ஆக, தாவரங்களால் தற்காப்பு முடியும். நம்மைப்போல கராத்தே அவற்றுக்குத் தேவை இல்லை. மாடுகள்போல முட்டவேண்டியதில்லை. ஆனால், தற்காப்பு அவற்றால் இயலும். பூச்சிகளை உள்ளிழுத்து அவை தம் தற்காப்பை நிறைவேற்றுகின்றன. அதேபோல தாவரங்கள் ஒருவேளை மானுடத்தின் மூலம் சிந்திக்கின்றனவா?

நம்முடைய ஆன்மிக மரபுகளில் தாவரங்களிலிருந்து உருவாக்கப்பட்ட ரசங்கள் அல்லது பொருட்கள் (சோமரசம் முதல் தென்னமெரிக்க காடுகளின் சடங்குகளில் பயன்படுத்தப்படும் காளான்கள்வரை) நம் மூளைகளை துரிதப்படுத்துகின்றன. மானுடத்தின் மிகவும் ஏற்றமிகு சிந்தனைகள் மரத்தடிகளில் கிட்டியிருக்கின்றன. அவை மரங்களை புனிதமாக்கி பாதுகாத்திருக்கின்றன. தேநீர் முதற்கொண்டு துளசி தீர்த்தம்வரை ஒவ்வொரு நாளும் தாவரங்களின் வேதிப்பொருட்கள் நம் நரம்பு மண்டலங்களுக்குள் பயணிக்கின்றன. சிந்தனைகளைத் தூண்டுகின்றன.

ஆன்டனி ட்ரெவாவஸ் (Anthony J. Trewavas) எடின்பர்க் பல்கலையின் மூலக்கூறு உயிரியலாளர். தாவரங்களின் உடலியக்கங்கள் அவற்றின் மூலக்கூறு செயல்பாடுகள் குறித்த அவரது ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இவற்றுக்கும் தாவரங்களின் நடத்தை - செயல்பாட்டுக்குமான தொடர்புகளை அவர் ஆராய்ச்சி செய்கிறார். ஜெரெமி நார்பி (Jeremy Narby) எனும் மானுடவியலாளர் அவரிடம் அவர் தாவரங்களின் செயல்பாடுகளை அறிவது குறித்து உரையாடியபோது ட்ரெவாவஸ் ஒரு விஷயத்தை கூறுகிறார். தாவரங்களின் செயல்பாடுகள் குறித்து சிந்திக்கவும் அவை குறித்த உள்ளுணர்வுகளைப் பெறுவதற்கும் அவருக்கு மிகவும் பிடித்தமான வழிமுறை சில மணி நேரங்கள் தாமே தாவரத்தைப்போல அசைவின்றி அவற்றுடன் ஒன்றியபடி அமர்ந்துவிடுவதாகச் சொல்கிறார்.

ட்ரெவாவஸுக்குப் பல எண்பதாண்டுகளுக்கு முன்னர் இதுபோன்றதொரு தியான அனுபவத்தை பாண்டிச்சேரி அரவிந்த அன்னை விவரித்திருக்கிறார். 1917-ல் அவர் பூத்துக் குலுங்கும் செர்ரி மரத்தின் தன்னுணர்வுடன் தாம் ஒன்றியதாகவும் அதன் பிரக்ஞையின் தளங்களுக்குள் தாம் பயணித்ததாகவும், அப்போது செர்ரி மரமாகவே தம்மை உணர்ந்ததாகவும் தம் உடல் மரத்தின் உடலாக மேலெழுந்து வியாபித்தது போன்றதொரு அனுபவத்தை பெற்றதாகவும் அவர் சொல்கிறார்.

தாவரங்களுடன் ஒன்றி இருத்தல் என்பதை டார்வின் செய்வதை பலர் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். மணி நேரங்களாக ஒரு மலரைப் பார்த்தபடி இருப்பதை சொல்லியிருக்கிறார்கள். டார்வினே தாவரங்களின் வேர்களுக்கும் அவற்றின் அறிதல் திறன்களுக்குமான தொடர்பு குறித்து முதலில் பேசியவர். டார்வின், ட்ரெவாவஸ் போன்ற அறிவியலாளர்களும் சரி அடிப்படையில் ஓவியரும் ஆன்மிக சாதனையாளருமான அன்னையும் சரி தாவரங்களுடன் ஒன்றுவதிலிருந்து சில அறிதல்களை பெற்றிருக்கிறார்கள் என்பதே இங்கு முக்கியம். ஆக, நாம் நம் சக உயிரினங்களிடமிருந்து அறிதல் திறன்களை மேலும் மேலும் கண்டறிய நம் அறிதல் சாத்தியங்களையும் தளங்களையும் மேலும் மேலும் விரிக்க வேண்டியதாகிறது.

கலை, அறிவியல், ஆன்மிகம் இவை அனைத்தையும் இணைக்கும் ஒரு பார்வையை இங்கு நமக்கு இந்த ஒருமையுணர்வுக்கான பயிற்சி அளிக்க இயலும். ஒருவேளை நம் பாரம்பரிய வைத்தியர்கள் மருத்துவ மூலிகைகளை அறிந்திட இவ்வழிமுறைகளை பயன்படுத்தியிருக்கலாம். எதுவானாலும் இயற்கையை இளம் வயதிலிருந்தே அன்புடன் தியானிக்க பயிற்சி அளிப்பதன் மூலம் அறிவியலையும் கலையையும் ஆன்மிகத்தையும் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கும் ஒரு தலைமுறையை நாம் உருவாக்க முடியும்.

மேலதிக தகவல்களுக்கு:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com